Saturday, September 10, 2016

கிரகங்களின் பார்வை – (விம்ஷோத்தாரீ, தாஜக் மற்றும் மேலை நாட்டு முறைப்படி)

விம்ஷோத்தாரீ முறையில் சூரியனுக்கும் சனிக்கும் 1, 3, 7, 10 பார்வை என்றும்,  செவ்வாய்க்கு 1, 4, 7, 8 பார்வை என்றும், குருவுக்கு 1, 5, 7, 9 இடங்களை ;பார்க்கும் என்றும், சுக்கிரன் 1 ,6, 7, 8 ஆகிய இடங்களை பார்க்கும் என்றும், இராகு, கேதுக்கள் 1, 3, 7, 11 ஆகிய இடங்களை பார்க்கும் என்றும், சந்திரனும் புதனும் 1, 7 ஆகிய இடங்களை மட்டும் பார்ப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் தாஜக் முறையில் கிரகங்களின் பார்வை சற்று வித்தியாசமானது ஆகும். இம்முறையின் கண்டு பிடிப்பாளர்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் தாம்.

ஒரு கிரகம் தன் இருப்பில் சுமாராக பத்து பாகை வரை முன்பின் பார்க்க வல்லதாம்.
சூரியன் தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக 15 பாகை வரை பார்க்க வல்லது. சந்திரனோ  தானிருக்கும் இடத்தில் இருந்து 12 பாகை வரை பார்க்க வல்லது. குருவும் சனியும் தானிருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக 9 பாகை வரை பார்ப்பாராம். செவ்வாயோ தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக  8 பாகை வரை பார்ப்பார். மற்ற கிரகங்களான புதன், சுக்கிரன், இராகு, கேது ஆகியோர் தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக  7  பாகை வரை மட்டுமே பார்ப்பாராம்.
இது விம்ஷோத்தாரீ முறையில் உள்ள பார்வையாம்.

ஆனால் தாஜக் முறையில் இவ்வாறு சொல்லப்படவில்லை. கூடலில் ஒரு பாகைக்குள் கூடிய கிரகங்கள் அதிக (நட்பு கிரகமாயின் நல்ல பலனிலும், பகை கிரகங்களாயின் மோசமான) பாதிப்பையும் அடைகின்றன என்றும், அந்த பாதிப்பு நன்மையாகவும் அல்லது கொடியதாகவும் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆனால் கூடலில் ஐந்து பாகைக்குள் உள்ளவற்றை கூடலாக கொள்ளலாம் என்றும் ஒத்து கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் அவ்விரு கிரகங்களும் ஒரே நட்சத்திரத்தில் இருக்குமானால் அப்பலன் வெகு உயர்வாய் இருக்குமாம். அவ்விரு கிரகங்களும் நட்பாகி - இருந்த பாவத்தில் இருவரும் வலுவுடன் இருந்தால் அக்கூடலின் பலன் வெகு உயர்வாய் அமையுமாம். அதுவும் இருவரும் நட்பாய் இருக்க அப்பலன் வெகு உயர்வாய் அமைவது நிச்சயமாம். ஆனால் எதிரி கிரகங்களாயின் அக்கூடலின் பலன் சுமார் தாம்.
நட்பாகிய அசுபர்களாயின் அக்கிரக கூடலின் பலன் சுமாராகவே இருக்கும். உறவினரும் நலமுடன் ஆனால் தீயவராய் இருப்பர். பகையாகிய அசுபர்களாயின் அக்கூடலின் பலன் மிக மோசமாக இருக்கும்.

மேலை நாட்டு முறையிலும் நம் நாட்டு முறையிலும் கிட்டத்தட்ட கூடலை பொறுத்த வரை பலன்கள் சரியாகவே சொல்லப்பட்டுள்ளன.

சூரியனும் குருவும் மிதுனத்தில் அருகருகே அமர அந்த ஜாதகருக்கு தந்தை ஆசிரியராகவோ அல்லது வாயால் பிழைப்பவராகவோ அமைகிறார். குரு  அஸ்தமனம் ஆனால் அவருக்கு ஆண் குழந்தை இல்லாமல் போகின்றது. பெண் குழந்தை மட்டுமே அமையும். ஆனால் தந்தையாலும் மகளாலும் ஜாதகர் உதவிகளை பெறுவார்.
விருட்சிகம் லக்கினமாகி, பத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கூட, இங்கு சந்திரனும், சுக்கிரனும் அஸ்தமனம் ஆகிட, தந்தை மனக்கிளர்ச்சி உடையவனாகி, இன்னொரு பெண்ணை விரும்புபவன் ஆவான். ஆகவே தந்தையிடம் இருந்து ஜாதகர் பிரிவாராம்.

இங்கு சூரியன் நான்காம் இடத்தை பார்க்கின்றார். ஒருவேளை, சந்திரன் பாகை கணக்குப்படி நான்காமிடத்தின் துவக்கத்தை பாராவிடில், நான்கில் சூரியன் நட்பாவதால் நல்ல அன்னை உண்டாவாள்.

சூரியன் ஏழாமிடத்தை பகை பார்வையாய் பார்க்கின்றார். ஆகவே அங்கு தனது பலனை இழந்து, சுக்கிரனின் பலனை உயர்விப்பார். ஆக நல்ல கணவனை ஜாதகி அடைவாள். 
அன்பன்
அ.வீ.மாரிமுத்து
10.09.2016
கர்த்தாரி யோகம்
ஒரு பாவத்துக்கு முன்பின் பாவங்களில் நட்பினரான சுபர் மட்டும் இருக்க அப்பாவத்தின் பலன் அவ்விரு கிரகத்தால் உயரும். இதற்கு சுப கர்த்தாரி யோகம் என்று பெயர்.

மேஷ லக்கினமாகி 12 இல் குருவும், 2 இல் உச்ச சந்திரனும் நிற்க அந்த சாதகனின் லக்கினத்தில் குரு மற்றும் சந்திரனின் காரக பலன் அனைத்தும் உயரும்.

ஒரு பாவத்தின் முன்பின் பாவங்களில் பகையான இரு கிரகங்கள் இருக்க அவை சுப கிரகங்களானால் அப்பாவம் வலு பெற்று இருப்பதுடன் அக்கிரங்களின் காரக உறவினரால் தீமையும் நடக்குமாம்.

இது சுப கர்த்தாரி யோகம் ஆனாலும் நன்மையையும் தீமையும் கலந்தே நடக்குமாம்.
துலா லக்கினமாகி 6 இல் குருவும் 8 இல் சுக்கிரனும் இருக்க, அந்த ஜாதகத்துக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும் என்றாலும், பெண்களால் அல்லது குழந்தையால் இல்லறத்தில் குழப்பங்கள் உண்டாகுமாம்.

ஒரு பாவத்துக்கு முன்பின் இரு அசுபர் இருக்க அந்த பாவத்தின் பலன் அவலமாகுமாம். இதற்கு பாப கர்த்தாரி யோகம் என்று பெயர்.

கடக லக்கினமாகி எட்டில் சனியும், பத்தில் செவ்வாயும் நிற்பது சாதகனின் தந்தைக்கு தாழ்வும், பூர்வீக சொத்தில் பிரச்சினையும், குணத்தில் குறைபாடும், அவசர புத்தியும், கொடிய வழியில் ஈடுபடுதலும், வாழ்வில் குறையும் உண்டாகுமாம்.

பாவத்துக்கு எப்படி சுப மற்றும் அசுப கர்த்தாரி யோகம் செயல் படுமோ அவ்வாறே ஒரு கிரகம் நிற்கும் முன்பின் பாவங்களில் அமையும் சுப அசுப பகை நட்பு கிரகங்களை பொருத்துமாம்

மேஷ லக்கினமாகி, லக்கினத்தில் உச்ச சூரியனும், 12 இல் ஆட்சி குருவும், 2 இல் உச்ச சந்திரனும் இருக்க, சாதகனின் சூரியன் உயர் வலுவடைந்து, இராஜ யோகத்தை அனுபவிக்க செய்வானாம். சாதகனும் அவனது தந்தையும் உயர்வாகவே இருப்பாராம்.
அதே மேஷ லக்கினத்தில் உச்ச சூரியன் அமர்ந்து, விரயத்தில் உச்ச சுக்கிரனும், தனத்தில் உச்ச சந்திரனும் இருக்க, அன்னவருக்கு உயர் யோகம் இருப்பினும், அன்னை, தந்தை, மனைவியால் பலவித சச்சரவும், சண்டைகளும் உண்டாகி மன நிம்மதி இல்லாது போகுமாம்.

ஒரு பாவத்துக்கோ அல்லது ஒரு கிரகத்துக்கோ குருவும் சந்திரனும் முன்பின்னாக இருந்து அதில் ஒருவராவது வலுக்க, அந்த பாவமோ அல்லது கிரகமோ வலு அடையும்.

ஒரு பாவத்துக்கோ அல்லது கிரகத்துக்கோ முன்பின் இராசிகளில் புதனும் சுக்கிரனும் அமைந்து, அதில் ஒருவராவது வலுக்க, அந்த பாவமோ அல்லது அந்த கிரகமோ வலிமை அடையுமாம்.

ஒரு பாவத்துக்கோ அல்லது கிரகத்துக்கோ முன்பின் இராசிகளில் செவ்வாயும் சனியும் அல்லது சனியும் இராகுவும் இருக்க, அந்த பாவம் அல்லது கிரகம் வலிமை இழக்கும்.


சுக்கிரனும் குருவும் சுபர்களாயினும் ஒருவருக்கொருவர் பகைவர் ஆதலால், ஒரு பாவத்துக்கோ அல்லது ஒரு கிரகத்துக்கோ அவ்விருவரும் முன்பின்னாக இராசிகளில் அமர்வது தீதாம். இங்கு சுக்கிரன், குருவின் உறவுகள் நன்றாக இருப்பார். ஆனால் ஜாதகனுக்கு அவ்வுறவுகள் எட்டிக்காயாவராம். 

அன்பன் 
அ.வீ.மாரிமுத்து 
10 - 09 - 2016
செவ்வாயுடன் கிரகங்கள் கூட
செவ்வாயும் சனியும் சேர அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள கால தாமத திருமணம் நடக்கும். அல்லது தகுதிக்கு கீழுள்ள இடத்தில் தான் திருமணம் நடைபெறும். அல்லது திருமணத்துக்கு பின் ஏதேனும் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். அல்லது கணவன் கெட்ட பழக்க வழக்கம் கொண்டவன் ஆவான். அல்லது கணவனுக்கு தீராத நோய் வருவதால் சுகம் அனுபவிக்க இயலாது.
செவ்வாயும் இராகுவும் கூட திருமணத்தில் தடைகள் உண்டாகும். அல்லது கணவனுக்கு தீராத நோய் உண்டாகும். அல்லது வேலை விஷயமாக பிரிந்து வாழ நேரும். சகோதரர் மூலம் சண்டை ஏற்பட்டு பிரியலாம்.
செவ்வாயும் கேதுவும் கூட அல்லது பரஸ்பரம் பார்த்து கொள்ள, திருமணத்தில் தடைகள் உண்டாகும். அல்லது கணவனுக்கு ஆண்மை இல்லாது போகும். அல்லது கணவன் அல்லது மனைவி சந்நியாசி போல் இருப்பதால் இல்லற வாழ்வு பாதிக்கும்.
செவ்வாய் தோஷத்தில் செவ்வாயே பாதிக்கப்பட்டால் செவ்வாய் கிழமையில் முருகனை வழிபட வேண்டும். செவ்வாயை சனி பாதித்தால், அனுமனை அல்லது அய்யனாரை அல்லது ஐயப்பனை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட வேண்டும்.
செவ்வாய் இராகுவால் பாதிக்கப்பட்டால், காளியை, மாரியம்மனை, செவ்வாய் கிழமையில் வணங்கி வர வேண்டும். செவ்வாய் கேதுவால் பாதிக்கப்பட்டால், விநாயகரை, காளியை, மாரியை செவ்வாய் கிழமையில் வணங்கி வர வேண்டும்.
செவ்வாயுடன் புதன் கூடுகையில் அல்லது அவர் மட்டும் பார்க்கையில் ஜாதகன் அல்லது அவனது மனைவி அந்நியருடன் கூடும் அவலம் ஏற்படுமாம்.

செவ்வாயுடன் சனி சேர்கையில் செவ்வாய் தோஷம் இல்லாது போகின்றது என்றோம். ஆனால் இல்லற வாழ்வில் பிரச்சினையை கொடுக்காது போகாது என்பதை அறிக. 

Friday, September 9, 2016

செவ்வாய் தோஷம்
1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் மங்களன் ஆகிய செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷமாம். ஆனாலும் அங்கு அந்த செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் ஆகிட  செவ்வாய் தோஷம் இல்லையாம்.
செவ்வாய் என்பவர் ஆணுக்கும் பெண்ணுக்கும் தாலி அல்லது உடல் சுகத்தை குறிப்பவர் ஆதலால், இரு பாலருக்கும் செவ்வாய் தோஷம் என்பது திருமணத்துக்கு முன்னரே பார்த்து இருவரையும் இல்லற வாழ்வில் இணைக்க வேண்டுமாம். எனவே செவ்வாயை மங்களன் என்கின்றனர்.
பொதுவாக செவ்வாய் தோஷம் என்பது இரத்தத்தில் அமிலத்தன்மையை குறிப்பதாம். இது கணவன் மனைவி இருவருக்கும் இருந்தாலோ அல்லது இருவருக்கும் இல்லாது போனாலோ அவர்களின் இல்லற சுகமும், புத்திர உற்பத்தியும் பாதிப்பதில்லை என ஜோதிடர்கள் கருதுகின்றனர்.
முதலில் செவ்வாய் லக்கினத்துக்கு 1, 2, 4, 7, 8, 12 இல் அமர்ந்ததை தோஷம் என்றனர். பின்னர் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் 2, 4, 7, 8, 12 இல் செவ்வாய் நின்றாலும் அதனை செவ்வாய் தோஷம் என்று ஆய்வு செய்து – நடை முறையில் அவை ஒத்து போனதால் – செவ்வாய் தோஷம் என்றனர்.
சந்திரனும் சுக்கிரனும் நீர் கிரகங்களாம். எனவே அவர்களது வீடுகளான துலாம், ரிஷபம் மற்றும் கடகம் ஆகிய மூன்றில் செவ்வாய் இருந்தாலும், அல்லது நீர் பாவங்களாம் மீனம், கடகம், விருட்சிகம் ஆகியவற்றில் செவ்வாய் நின்றாலும் செவ்வாய் தோஷமாம்.
செவ்வாய் கடகத்தில் நீச்சம் ஆவதால் அங்கு அவர் வலுவற்றவர் ஆனாலும் தோஷத்தை செய்வாராம். செவ்வாய் ஆட்சியானாலும் விருட்சிகம் நீர் பாவம் ஆவதால் – அங்கு ஆட்சி அடைந்த செவ்வாய் தோஷத்தை உண்டாக்குவாராம்.
ஆனால் செவ்வாய் மேஷத்தில் ஆட்சியானாலும் அவ்வீடு நெருப்பு இராசி ஆவதால் அங்கு அவர் தோஷத்தை ஏற்படுத்துவதில்லை.
ஆக செவ்வாய் ரிஷபம், கடகம், துலாம், மீனத்தில் இருக்க, அவ்வீடு 1, 2, 4, 7, 8, 12 ஆனால் நிச்சயம் அது செவ்வாய் தோஷமாம்.
மேஷ லக்கினமாகி செவ்வாய் 2 அல்லது 4  அல்லது 7 அல்லது 12 இல் இருக்க அது செவ்வாய் தோஷமாம்.
ரிஷப லக்கினமாகி செவ்வாய் 1, 7  இல் இருக்க மட்டும் செவ்வாய் தோஷமாம். இங்கு செவ்வாய் ஆட்சியானாலும் நிற்கும் வீடு நீர் இராசி ஆவதால் தோஷம் உண்டாகும்.
மிதுன லக்கினத்துக்கு இரண்டு, பன்னிரண்டாமிடங்களில் செவ்வாய் நின்றால் மட்டும் செவ்வாய் தோஷமாம்.
கடக லக்கினத்துக்கு 1, 4 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்க தோஷமாம்.
சிம்ம லக்கினத்துக்கு 4,  8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்க செவ்வாய் தோஷமாம்.
கன்னி லக்கினத்துக்கு 2, 7 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்க அது செவ்வாய் தோஷமாம்.
துலா லக்கினத்துக்கு 1, 2, 8 ஆகிய இடங்களில் செவ்வாய் நிற்பது தோஷமாம்.
விருட்சிக லக்கினத்துக்கு 1, 7, 12 இல் செவ்வாய் நிற்பது தோஷமாம்.
தனுசு லக்கினத்துக்கு 4, 8 ஆகிய இடங்களில் நிற்கும் செவ்வாய் தோஷம் கொடுக்கும்.
மகர லக்கினத்துக்கு 7 மிடத்தில் நின்ற செவ்வாய் தோஷத்தை கொடுப்பார்.
கும்ப லக்கினத்துக்கு 2, 4 ஆமிடங்களில் நின்ற செவ்வாய் தோஷத்தை கொடுப்பார்.
மீன லக்கினத்துக்கு 1, 8 இல் நின்ற செவ்வாய் தோஷம் கொடுப்பார்.

செவ்வாய் தோஷம் ஆண் பெண் இருவருக்கும் இல்லாது போக அவ்விருவரையும் கணவன் மனைவியாக்கலாம். செவ்வாய் தோஷம் இருவருக்கும் இருந்தாலும் அவ்விருவரையும் மண வாழ்வில் ஈடுபடுத்தலாம். ஒருவருக்கு இருந்து இன்னொருவருக்கு இல்லையெனில் அவ்விருவரையும் இல்லறவாழ்வில் இணைக்கக் கூடாது.