Saturday, September 10, 2016

கிரகங்களின் பார்வை – (விம்ஷோத்தாரீ, தாஜக் மற்றும் மேலை நாட்டு முறைப்படி)

விம்ஷோத்தாரீ முறையில் சூரியனுக்கும் சனிக்கும் 1, 3, 7, 10 பார்வை என்றும்,  செவ்வாய்க்கு 1, 4, 7, 8 பார்வை என்றும், குருவுக்கு 1, 5, 7, 9 இடங்களை ;பார்க்கும் என்றும், சுக்கிரன் 1 ,6, 7, 8 ஆகிய இடங்களை பார்க்கும் என்றும், இராகு, கேதுக்கள் 1, 3, 7, 11 ஆகிய இடங்களை பார்க்கும் என்றும், சந்திரனும் புதனும் 1, 7 ஆகிய இடங்களை மட்டும் பார்ப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் தாஜக் முறையில் கிரகங்களின் பார்வை சற்று வித்தியாசமானது ஆகும். இம்முறையின் கண்டு பிடிப்பாளர்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் தாம்.

ஒரு கிரகம் தன் இருப்பில் சுமாராக பத்து பாகை வரை முன்பின் பார்க்க வல்லதாம்.
சூரியன் தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக 15 பாகை வரை பார்க்க வல்லது. சந்திரனோ  தானிருக்கும் இடத்தில் இருந்து 12 பாகை வரை பார்க்க வல்லது. குருவும் சனியும் தானிருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக 9 பாகை வரை பார்ப்பாராம். செவ்வாயோ தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக  8 பாகை வரை பார்ப்பார். மற்ற கிரகங்களான புதன், சுக்கிரன், இராகு, கேது ஆகியோர் தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக  7  பாகை வரை மட்டுமே பார்ப்பாராம்.
இது விம்ஷோத்தாரீ முறையில் உள்ள பார்வையாம்.

ஆனால் தாஜக் முறையில் இவ்வாறு சொல்லப்படவில்லை. கூடலில் ஒரு பாகைக்குள் கூடிய கிரகங்கள் அதிக (நட்பு கிரகமாயின் நல்ல பலனிலும், பகை கிரகங்களாயின் மோசமான) பாதிப்பையும் அடைகின்றன என்றும், அந்த பாதிப்பு நன்மையாகவும் அல்லது கொடியதாகவும் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஆனால் கூடலில் ஐந்து பாகைக்குள் உள்ளவற்றை கூடலாக கொள்ளலாம் என்றும் ஒத்து கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் அவ்விரு கிரகங்களும் ஒரே நட்சத்திரத்தில் இருக்குமானால் அப்பலன் வெகு உயர்வாய் இருக்குமாம். அவ்விரு கிரகங்களும் நட்பாகி - இருந்த பாவத்தில் இருவரும் வலுவுடன் இருந்தால் அக்கூடலின் பலன் வெகு உயர்வாய் அமையுமாம். அதுவும் இருவரும் நட்பாய் இருக்க அப்பலன் வெகு உயர்வாய் அமைவது நிச்சயமாம். ஆனால் எதிரி கிரகங்களாயின் அக்கூடலின் பலன் சுமார் தாம்.
நட்பாகிய அசுபர்களாயின் அக்கிரக கூடலின் பலன் சுமாராகவே இருக்கும். உறவினரும் நலமுடன் ஆனால் தீயவராய் இருப்பர். பகையாகிய அசுபர்களாயின் அக்கூடலின் பலன் மிக மோசமாக இருக்கும்.

மேலை நாட்டு முறையிலும் நம் நாட்டு முறையிலும் கிட்டத்தட்ட கூடலை பொறுத்த வரை பலன்கள் சரியாகவே சொல்லப்பட்டுள்ளன.

சூரியனும் குருவும் மிதுனத்தில் அருகருகே அமர அந்த ஜாதகருக்கு தந்தை ஆசிரியராகவோ அல்லது வாயால் பிழைப்பவராகவோ அமைகிறார். குரு  அஸ்தமனம் ஆனால் அவருக்கு ஆண் குழந்தை இல்லாமல் போகின்றது. பெண் குழந்தை மட்டுமே அமையும். ஆனால் தந்தையாலும் மகளாலும் ஜாதகர் உதவிகளை பெறுவார்.
விருட்சிகம் லக்கினமாகி, பத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கூட, இங்கு சந்திரனும், சுக்கிரனும் அஸ்தமனம் ஆகிட, தந்தை மனக்கிளர்ச்சி உடையவனாகி, இன்னொரு பெண்ணை விரும்புபவன் ஆவான். ஆகவே தந்தையிடம் இருந்து ஜாதகர் பிரிவாராம்.

இங்கு சூரியன் நான்காம் இடத்தை பார்க்கின்றார். ஒருவேளை, சந்திரன் பாகை கணக்குப்படி நான்காமிடத்தின் துவக்கத்தை பாராவிடில், நான்கில் சூரியன் நட்பாவதால் நல்ல அன்னை உண்டாவாள்.

சூரியன் ஏழாமிடத்தை பகை பார்வையாய் பார்க்கின்றார். ஆகவே அங்கு தனது பலனை இழந்து, சுக்கிரனின் பலனை உயர்விப்பார். ஆக நல்ல கணவனை ஜாதகி அடைவாள். 
அன்பன்
அ.வீ.மாரிமுத்து
10.09.2016
கர்த்தாரி யோகம்
ஒரு பாவத்துக்கு முன்பின் பாவங்களில் நட்பினரான சுபர் மட்டும் இருக்க அப்பாவத்தின் பலன் அவ்விரு கிரகத்தால் உயரும். இதற்கு சுப கர்த்தாரி யோகம் என்று பெயர்.

மேஷ லக்கினமாகி 12 இல் குருவும், 2 இல் உச்ச சந்திரனும் நிற்க அந்த சாதகனின் லக்கினத்தில் குரு மற்றும் சந்திரனின் காரக பலன் அனைத்தும் உயரும்.

ஒரு பாவத்தின் முன்பின் பாவங்களில் பகையான இரு கிரகங்கள் இருக்க அவை சுப கிரகங்களானால் அப்பாவம் வலு பெற்று இருப்பதுடன் அக்கிரங்களின் காரக உறவினரால் தீமையும் நடக்குமாம்.

இது சுப கர்த்தாரி யோகம் ஆனாலும் நன்மையையும் தீமையும் கலந்தே நடக்குமாம்.
துலா லக்கினமாகி 6 இல் குருவும் 8 இல் சுக்கிரனும் இருக்க, அந்த ஜாதகத்துக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும் என்றாலும், பெண்களால் அல்லது குழந்தையால் இல்லறத்தில் குழப்பங்கள் உண்டாகுமாம்.

ஒரு பாவத்துக்கு முன்பின் இரு அசுபர் இருக்க அந்த பாவத்தின் பலன் அவலமாகுமாம். இதற்கு பாப கர்த்தாரி யோகம் என்று பெயர்.

கடக லக்கினமாகி எட்டில் சனியும், பத்தில் செவ்வாயும் நிற்பது சாதகனின் தந்தைக்கு தாழ்வும், பூர்வீக சொத்தில் பிரச்சினையும், குணத்தில் குறைபாடும், அவசர புத்தியும், கொடிய வழியில் ஈடுபடுதலும், வாழ்வில் குறையும் உண்டாகுமாம்.

பாவத்துக்கு எப்படி சுப மற்றும் அசுப கர்த்தாரி யோகம் செயல் படுமோ அவ்வாறே ஒரு கிரகம் நிற்கும் முன்பின் பாவங்களில் அமையும் சுப அசுப பகை நட்பு கிரகங்களை பொருத்துமாம்

மேஷ லக்கினமாகி, லக்கினத்தில் உச்ச சூரியனும், 12 இல் ஆட்சி குருவும், 2 இல் உச்ச சந்திரனும் இருக்க, சாதகனின் சூரியன் உயர் வலுவடைந்து, இராஜ யோகத்தை அனுபவிக்க செய்வானாம். சாதகனும் அவனது தந்தையும் உயர்வாகவே இருப்பாராம்.
அதே மேஷ லக்கினத்தில் உச்ச சூரியன் அமர்ந்து, விரயத்தில் உச்ச சுக்கிரனும், தனத்தில் உச்ச சந்திரனும் இருக்க, அன்னவருக்கு உயர் யோகம் இருப்பினும், அன்னை, தந்தை, மனைவியால் பலவித சச்சரவும், சண்டைகளும் உண்டாகி மன நிம்மதி இல்லாது போகுமாம்.

ஒரு பாவத்துக்கோ அல்லது ஒரு கிரகத்துக்கோ குருவும் சந்திரனும் முன்பின்னாக இருந்து அதில் ஒருவராவது வலுக்க, அந்த பாவமோ அல்லது கிரகமோ வலு அடையும்.

ஒரு பாவத்துக்கோ அல்லது கிரகத்துக்கோ முன்பின் இராசிகளில் புதனும் சுக்கிரனும் அமைந்து, அதில் ஒருவராவது வலுக்க, அந்த பாவமோ அல்லது அந்த கிரகமோ வலிமை அடையுமாம்.

ஒரு பாவத்துக்கோ அல்லது கிரகத்துக்கோ முன்பின் இராசிகளில் செவ்வாயும் சனியும் அல்லது சனியும் இராகுவும் இருக்க, அந்த பாவம் அல்லது கிரகம் வலிமை இழக்கும்.


சுக்கிரனும் குருவும் சுபர்களாயினும் ஒருவருக்கொருவர் பகைவர் ஆதலால், ஒரு பாவத்துக்கோ அல்லது ஒரு கிரகத்துக்கோ அவ்விருவரும் முன்பின்னாக இராசிகளில் அமர்வது தீதாம். இங்கு சுக்கிரன், குருவின் உறவுகள் நன்றாக இருப்பார். ஆனால் ஜாதகனுக்கு அவ்வுறவுகள் எட்டிக்காயாவராம். 

அன்பன் 
அ.வீ.மாரிமுத்து 
10 - 09 - 2016
செவ்வாயுடன் கிரகங்கள் கூட
செவ்வாயும் சனியும் சேர அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள கால தாமத திருமணம் நடக்கும். அல்லது தகுதிக்கு கீழுள்ள இடத்தில் தான் திருமணம் நடைபெறும். அல்லது திருமணத்துக்கு பின் ஏதேனும் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். அல்லது கணவன் கெட்ட பழக்க வழக்கம் கொண்டவன் ஆவான். அல்லது கணவனுக்கு தீராத நோய் வருவதால் சுகம் அனுபவிக்க இயலாது.
செவ்வாயும் இராகுவும் கூட திருமணத்தில் தடைகள் உண்டாகும். அல்லது கணவனுக்கு தீராத நோய் உண்டாகும். அல்லது வேலை விஷயமாக பிரிந்து வாழ நேரும். சகோதரர் மூலம் சண்டை ஏற்பட்டு பிரியலாம்.
செவ்வாயும் கேதுவும் கூட அல்லது பரஸ்பரம் பார்த்து கொள்ள, திருமணத்தில் தடைகள் உண்டாகும். அல்லது கணவனுக்கு ஆண்மை இல்லாது போகும். அல்லது கணவன் அல்லது மனைவி சந்நியாசி போல் இருப்பதால் இல்லற வாழ்வு பாதிக்கும்.
செவ்வாய் தோஷத்தில் செவ்வாயே பாதிக்கப்பட்டால் செவ்வாய் கிழமையில் முருகனை வழிபட வேண்டும். செவ்வாயை சனி பாதித்தால், அனுமனை அல்லது அய்யனாரை அல்லது ஐயப்பனை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட வேண்டும்.
செவ்வாய் இராகுவால் பாதிக்கப்பட்டால், காளியை, மாரியம்மனை, செவ்வாய் கிழமையில் வணங்கி வர வேண்டும். செவ்வாய் கேதுவால் பாதிக்கப்பட்டால், விநாயகரை, காளியை, மாரியை செவ்வாய் கிழமையில் வணங்கி வர வேண்டும்.
செவ்வாயுடன் புதன் கூடுகையில் அல்லது அவர் மட்டும் பார்க்கையில் ஜாதகன் அல்லது அவனது மனைவி அந்நியருடன் கூடும் அவலம் ஏற்படுமாம்.

செவ்வாயுடன் சனி சேர்கையில் செவ்வாய் தோஷம் இல்லாது போகின்றது என்றோம். ஆனால் இல்லற வாழ்வில் பிரச்சினையை கொடுக்காது போகாது என்பதை அறிக. 

Friday, September 9, 2016

செவ்வாய் தோஷம்
1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் மங்களன் ஆகிய செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷமாம். ஆனாலும் அங்கு அந்த செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் ஆகிட  செவ்வாய் தோஷம் இல்லையாம்.
செவ்வாய் என்பவர் ஆணுக்கும் பெண்ணுக்கும் தாலி அல்லது உடல் சுகத்தை குறிப்பவர் ஆதலால், இரு பாலருக்கும் செவ்வாய் தோஷம் என்பது திருமணத்துக்கு முன்னரே பார்த்து இருவரையும் இல்லற வாழ்வில் இணைக்க வேண்டுமாம். எனவே செவ்வாயை மங்களன் என்கின்றனர்.
பொதுவாக செவ்வாய் தோஷம் என்பது இரத்தத்தில் அமிலத்தன்மையை குறிப்பதாம். இது கணவன் மனைவி இருவருக்கும் இருந்தாலோ அல்லது இருவருக்கும் இல்லாது போனாலோ அவர்களின் இல்லற சுகமும், புத்திர உற்பத்தியும் பாதிப்பதில்லை என ஜோதிடர்கள் கருதுகின்றனர்.
முதலில் செவ்வாய் லக்கினத்துக்கு 1, 2, 4, 7, 8, 12 இல் அமர்ந்ததை தோஷம் என்றனர். பின்னர் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் 2, 4, 7, 8, 12 இல் செவ்வாய் நின்றாலும் அதனை செவ்வாய் தோஷம் என்று ஆய்வு செய்து – நடை முறையில் அவை ஒத்து போனதால் – செவ்வாய் தோஷம் என்றனர்.
சந்திரனும் சுக்கிரனும் நீர் கிரகங்களாம். எனவே அவர்களது வீடுகளான துலாம், ரிஷபம் மற்றும் கடகம் ஆகிய மூன்றில் செவ்வாய் இருந்தாலும், அல்லது நீர் பாவங்களாம் மீனம், கடகம், விருட்சிகம் ஆகியவற்றில் செவ்வாய் நின்றாலும் செவ்வாய் தோஷமாம்.
செவ்வாய் கடகத்தில் நீச்சம் ஆவதால் அங்கு அவர் வலுவற்றவர் ஆனாலும் தோஷத்தை செய்வாராம். செவ்வாய் ஆட்சியானாலும் விருட்சிகம் நீர் பாவம் ஆவதால் – அங்கு ஆட்சி அடைந்த செவ்வாய் தோஷத்தை உண்டாக்குவாராம்.
ஆனால் செவ்வாய் மேஷத்தில் ஆட்சியானாலும் அவ்வீடு நெருப்பு இராசி ஆவதால் அங்கு அவர் தோஷத்தை ஏற்படுத்துவதில்லை.
ஆக செவ்வாய் ரிஷபம், கடகம், துலாம், மீனத்தில் இருக்க, அவ்வீடு 1, 2, 4, 7, 8, 12 ஆனால் நிச்சயம் அது செவ்வாய் தோஷமாம்.
மேஷ லக்கினமாகி செவ்வாய் 2 அல்லது 4  அல்லது 7 அல்லது 12 இல் இருக்க அது செவ்வாய் தோஷமாம்.
ரிஷப லக்கினமாகி செவ்வாய் 1, 7  இல் இருக்க மட்டும் செவ்வாய் தோஷமாம். இங்கு செவ்வாய் ஆட்சியானாலும் நிற்கும் வீடு நீர் இராசி ஆவதால் தோஷம் உண்டாகும்.
மிதுன லக்கினத்துக்கு இரண்டு, பன்னிரண்டாமிடங்களில் செவ்வாய் நின்றால் மட்டும் செவ்வாய் தோஷமாம்.
கடக லக்கினத்துக்கு 1, 4 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்க தோஷமாம்.
சிம்ம லக்கினத்துக்கு 4,  8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்க செவ்வாய் தோஷமாம்.
கன்னி லக்கினத்துக்கு 2, 7 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்க அது செவ்வாய் தோஷமாம்.
துலா லக்கினத்துக்கு 1, 2, 8 ஆகிய இடங்களில் செவ்வாய் நிற்பது தோஷமாம்.
விருட்சிக லக்கினத்துக்கு 1, 7, 12 இல் செவ்வாய் நிற்பது தோஷமாம்.
தனுசு லக்கினத்துக்கு 4, 8 ஆகிய இடங்களில் நிற்கும் செவ்வாய் தோஷம் கொடுக்கும்.
மகர லக்கினத்துக்கு 7 மிடத்தில் நின்ற செவ்வாய் தோஷத்தை கொடுப்பார்.
கும்ப லக்கினத்துக்கு 2, 4 ஆமிடங்களில் நின்ற செவ்வாய் தோஷத்தை கொடுப்பார்.
மீன லக்கினத்துக்கு 1, 8 இல் நின்ற செவ்வாய் தோஷம் கொடுப்பார்.

செவ்வாய் தோஷம் ஆண் பெண் இருவருக்கும் இல்லாது போக அவ்விருவரையும் கணவன் மனைவியாக்கலாம். செவ்வாய் தோஷம் இருவருக்கும் இருந்தாலும் அவ்விருவரையும் மண வாழ்வில் ஈடுபடுத்தலாம். ஒருவருக்கு இருந்து இன்னொருவருக்கு இல்லையெனில் அவ்விருவரையும் இல்லறவாழ்வில் இணைக்கக் கூடாது.

Saturday, August 6, 2016

26. பிறந்த நாள்

நான் ஏன் பிறந்தேன் என்று புரட்சி தலைவர் எழுதினார். I am not Mahatma; I am an alpathma என்று தன்னை தாழ்த்தியே தேசத் தந்தை தன் சுய சரிதயை துவங்கியுள்ளார். இப்புவியில் பிறந்ததே நம் குறைகளால் மட்டுமே என்றும் அப்படி பிறந்த நாம் நம் தவறுகளை இப்பூமியில் உள்ள போதே திருத்தி வாழ்ந்தால், உன்னத நிலையை அடையலாம் என்றும் பல நீதி நூல்கள் சொல்லுகின்றன.

நீதி நூல்கள் சொல்லுவனவற்றுள் நமக்கு சாதகமாக எது உள்ளது என்று பார்ப்பதிலேயே இன்றுள்ளவர்கள் இருப்பதால் - மனித நேயமும் மாண்பும் பலரிடம் வற்றியே காணப்படுகின்றது.

என்றாலும் இன்றும் அடுத்தவருக்கு இரங்கும் மனிதர் ஓரு சிலர் இல்லாமல் போகவில்லை. அன்னை தந்தையரை சாகும் வரை கண்ணும் கருத்துமாய் காப்பாற்றும் புத்திரர்கள் இருக்கவும் செய்கிறார்கள். மாமனார், மாமியாரை நேசிக்கும் எத்தனையோ மங்கையரும் தான் உள்ளார்கள். அண்டை அயலாரை நேசிக்கும் விந்தை மனிதரும் உள்ளனர்.

என் இனிய இந்த பிறந்த நாளில் நான் கேக் வெட்டுவதை விட, மேற்சொன்ன அந்த நல்ல உள்ளங்களுக்கு எனது ஆசிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

இன்று என் பேத்தியிடம் ஓரு கதை சொன்னேன்.

ஒரு உக்கிரமான வெயில் கால பகல் போதில், ஒரு தவ முனிவர் அலைந்து திரிந்து ஒரு வேப்ப மர நிழலில் வந்து நின்றார். அவருக்கு அந்த வேப்ப மர நிழல் அவ்வளவு இதமாக இருந்தது. ஆகவே, அவர் அவ்விடத்தை விட்டு அகலும் முன்பு, அம்மரத்திடம் என்ன வேண்டும் என்று கேட்டார்.

மரம் உடனே அழாத குறையாக - முனிவரே! நான் முப்பது அடி வரை வளர்ந்து என்ன பயன்? என் பழங்களை மனிதர் யாரும் புசிப்பதில்லையே! பறவைகள் மட்டுமே கொத்தி தின்னுகின்றன. ஆகவே ஆப்பிள் பழம் போல சுவை மிகுந்ததாயும் தேங்காயை போல் உறுதியான தோலும் உள்ள பழமாய் நான் உருவாக்கிட அருளுங்கள் என்றது.

உடனே அம்முனிவர் அம்மர அடியில் அமர்ந்து கண்களை மூடி ஈசனை நினைந்து - அந்த மரத்துக்கு கடின தோலுடைய சுவை மிகுந்த பழத்தை பெரிய அளவில் படைக்குமாறு வேண்டினார்.

ஈசன் சொன்னார் - கேட்பதற்கு முன்னர் யோசித்து கேள் என்றார். முனிவரும் பிடிவாதமாய் இருந்ததால், ஈசன் முனிவரிடம் ஒரு நிபந்தனை விதித்தார்.

இறைவன் அம்மர உச்சியில் முதலில் ஒரு பழத்தை மட்டும் படைப்பதாயும், அப்பழத்தினால் நன்மை உண்டாகும் என்று முனிவர் தன் வாயால் சொன்னால், பின்னர் அந்த மரம்  முழுவதும் பெரிய அளவு பழங்களை படைப்பதையும் ஈசன் ஒத்துக் கொண்டார்.

வேறு வழியில்லாமல் முனிவரும் அம்மரத்தின் அடியிலேயே சில காலம் தங்க வேண்டி வந்தது.

பூ, பிஞ்சு, காய், பழம் என்று சில நாட்களில் முனிவரின் மனம் குளிர, வேப்ப மரம் பழம் ஒன்றை தன்னுள் கொண்டிருந்தது.

அதனை பார்த்த அந்த முனிவர், அந்த பழத்துக்கு நேர் கீழே அமர்ந்து கண்களை மூடி, தலைவிரி கோலமாய் தவம் செய்ய ஆரம்பித்தார். பழம் விழும் நேரமும் வந்ததால், கீழே விழுந்தது. மிக உயரத்தில் இருந்து விழுந்ததால் முனிவர் கபால மோட்சம் அடைந்தார்.

இனி இது மாதிரி பழங்களையே அந்த மரம் தர வேண்டும் என்று சொல்ல வேண்டிய முனிவரும் இறந்து போனதால், வேப்ப மரம் இது வரை வேப்பம் பழங்களை மட்டுமே தந்த வண்ணம் உள்ளன.

அடுத்த முனிவர் யாரேனும் வருவாரா என்று ஏக்கத்துடன் அந்த வேப்ப மரம் இன்னும் எதிர் நோக்கி காத்துள்ளது.

அம்முனிவருக்கு ஏற்பட்ட கபால மோட்சத்தை அறிந்த மற்ற முனிவர்களும் அம்மரத்திடம் செல்லாமல் இன்றும் விலகி போவதை பலர் சொல்ல நானும் கேட்டிருக்கின்றேன்.

நல்ல வேளை! நியூட்டன் மேல் பலாப் பழம் விழவில்லை. புவி ஈர்ப்பு விதி நமக்கு கிடைக்க வேண்டும் என்பதுவும் அதற்கு ஒரு காரணமோ?

எல்லோருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

எல்லா நலமும் எல்லா வளமும் அனைவரும் பெருக!

வாழ்க வளமுடன்!

அன்பன்

அ .வீ .மாரிமுத்து    07 - 08 - 2016

Thursday, August 4, 2016

25. இன்னும் நீச்சத்தை பற்றி 

நீச்சனும் உச்சனும் சேர அதனை நீச்ச பங்க இராஜயோகம் என்று ஒரு சாரார் சொல்லுகின்றனர். ஆனால் அதனை அனுபவத்தில் முழுமையாக ஏற்று கொள்ள இயலவில்லை.

விருட்சிக லக்கினத்துக்கு 9 இல் குரு உச்சமாயும், உடன் அருகில் செவ்வாய் நீச்சமாயும் இருக்கையில் -  அதனை இராஜ யோகம் என்று சொல்வதா? அல்லது அது அவ்வாறு இல்லை என்று சொல்வதா?

இங்கு ஒன்றை உணர்த்தியே ஆக வேண்டும். ஒரு கிரகம் தனித்து நீச்சம் அடைந்தாலும் அல்லது ஒரு கிரகம் இன்னொரு நீச்ச கிரகத்துடன் சேர்ந்தாலும் அக்கிரக காரக உறவினரை தாழ்த்தியே சொல்ல வேண்டும்.

விருட்சிக லக்கினத்துக்கு ஒன்பதில் நீச்சனும் உச்சனும் அருகருகே ஒன்று சேர - அவ்விரு கிரகங்களின் உறவினர்களான குழந்தை மற்றும் சகோதரர்கள் ஆகியோர் இல்லாது போவர். அல்லது இருந்தும் பயனற்று போவாராம்.

இந்த ஜாதகனுக்கு மகன் இல்லை. ஒரே ஒரு மகள் தான் உண்டு. குருவுடன் செவ்வாய் கூடியதால் இந்த பலனாம். இந்த ஜாதகனுக்கு நிறைய சகோதரர்கள் பிறந்து அதில் பலர் இறந்து - இருவர் மட்டுமே நிலைத்தனர். அவர்களும் வாழ்வில் உயர் நிலைக்கு போக வில்லை.

ஆனால் குருவும் செவ்வாயும் கூடியதால் - அது நீச்ச பங்கம் ஆவதால் - இந்த ஜாதகன் ஒரு விதமான இராஜ யோகத்தை அனுபவித்து வருகின்றான். ஒன்பதாமிடம் தெய்வங்களை குறிக்கும் இடம். குரு தெய்வ வழிபாட்டை  சொல்பவர். செவ்வாய் பிடிவாதம் - சாகசம் ஆகியவற்றை சொல்பவர். இந்த ஜாதகன் ஒரு மந்திரவாதியாய் இருக்கின்றான். நிறைய சம்பாதிக்கவும் செய்கின்றான்.

இதே லக்கினத்துக்கு ஒன்பதில் குரு 28 பாகையிலும் செவ்வாய் 15 பாகையிலும் - சற்று விலகி - இருக்க, (இருவரும் ஒரே பாவத்தில் இருந்த போதிலும், ஒருவரை ஒருவர் பாராததால்)  இது உண்மையான நீச்ச பங்கம் ஆகுமாம். அதாவது அம்சையில் இருவரும் ஆட்சி ஆகின்றனர்.

ஆகவே நீச்சனுடன் சேராத உச்சன் குரு, ஜாதகனுக்கு மகனை கொடுத்து விடுவார். அந்த மகனும் உயர் நிலைக்கு வந்தும் விடுவார். செவ்வாய் தனித்து நீச்சம் அடைந்தாலும், அவர் அம்சையில் ஆட்சி அடைந்ததால், சகோதரர்களும் அவரவரது முப்பது வயது வாக்கில், வாழ்வில் உயர வாய்ப்புண்டாம்.

உச்சனை ஒரு நீசன் பார்த்தாலும் இந்த கதி தான்! மகர லக்கினத்துக்கு ஐந்தில் நின்ற உச்ச சந்திரனை, லக்கினத்தில் நின்ற நீச்ச குரு பார்த்தாலும், - -- அது உறவுகளான - அன்னை மற்றும் குழந்தையை கெடுக்கும் என்பதை அறிக. ஆனால் அன்னையையும் குழந்தையையும் கொடுத்தே குழப்பங்களை அளிப்பாராம். ஐந்தில் உச்சன் அமர்ந்ததால் இப்பலனாம்.

கன்னி லக்கினத்துக்கு ஏழில் சுக்கிரனும் புதனும் அருகருகே சேர, அவனுக்கு அம்மானும் மனைவியும் ஏதேனும் குறையுடன் இருப்பர். சுக்கிரன் உச்சம் ஆவதால் மனைவி நீண்ட ஆயுளையும், புதன் நீச்சம் ஆவதால் அம்மான் மத்திய ஆயுளையும் பெற்றிருப்பராம்.

ஏழில் இரு சுபர் இருப்பது கேந்திர தோஷத்தை குறிப்பதாம். என்றாலும் உச்ச சுக்கிரனுடன் நீச்ச புதன் சேர்ந்ததால் - இருவரும் சுபர் ஆவதால் - ஜாதகன் இளமையில் கல்வியில் தடையை அனுபவிப்பான். ஆனால் முப்பது வயதுக்கு மேல் ஜாதகன் வாக்கு சம்பந்த தொழிலில் ஈடுபடுவான்.

ஒருவரது தொழிலை நிர்ணயம் செய்ய, ஒன்றாமிடம், இரண்டாமிடம், பத்தாமிடம், இலாப பாவம் ஆகியவற்றில் நின்ற வலுவான கிரகங்கள் மற்றும் மேற்சொன்ன இடங்களின் அதிபதியுடன் கூடிய வலுத்த கிரகத்தால் அறிய வேண்டும் என்பர் ஜோதிட வல்லுனர்கள். இதை ஓட்டியே மேலே பலன் சொல்லப்பட்டதாம்.

இந்த நீச்ச பங்கத்துக்கும் முப்பது வயதுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. முப்பது வயது வரை மோசமான பலன்களை அடைந்த பிறகு தான் வாழ்வில் முன்னேறும் நிலை அமையும்.

இன்னும் நீச்சத்தை பற்றி உதாரணத்துடன் பேச வேண்டியுள்ளது.

அடுத்த பகுதியில் சந்திப்போம்.

அன்பன்

அ .வீ . மாரிமுத்து   04 - 08 - 2016

Wednesday, August 3, 2016

24. நன்றாயிரு மருமகளே!

அப்போது நான் ஓய்வு பெற்று வீட்டில் இருந்தேன். ஒரு நாள் என் கீழ் பணி புரிந்த பொறியாளர் ஒருவர், தன் மனைவியுடன் என் இல்லத்துக்கு வந்தார். நீர், டீயெல்லாம் முடிந்ததும், பொதுவாக பேச்சு போனது.
மாமியார் மருமகள் கதை வந்தது.

என் நண்பரின் மனைவியார் தன்னை மாமியார் சரியாக நடத்துவதில்லை என்று பொதுவாக - மெதுவாக சொன்னார்.

நான் அவரை தனியே அழைத்து ஒரு மந்திரத்தை என் நண்பரின் மனைவிக்கு சொன்னேன்.

அவையாவன;

காலையில் எழுவதை ஆறு மணிக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  இது மாமியார்க்கும் மட்டும் அல்ல, உங்கள் உடல் வளத்துக்கும் நல்லது.

காலையில் டீ அல்லது காஃபி போட்டால் முதலில் மாமனார் மற்றும் மாமியாருக்கு கொடுத்து விட்டு - முடிந்தால் ஒரு புன்னகையுடன் ஒரு குட் மார்னிங் சொல்லுங்கள். அதன் பிறகே கணவனுக்கு டீ அல்லது காஃபி கொடுக்க வேண்டும்.

குளித்து முடித்து - உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ - பூஜை அறைக்கு சென்று - ஒரு சூடத்தை கொளுத்தி விட்டு - வாயால் சற்று சத்தமாக முனகி கொண்டே - விபூதி குங்குமம் வைத்து கொண்டு - அப்படியே மாமியார் மாமனாரிடம் சென்று பூஜை தட்டை காண்பித்து - அப்படியே அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து விட்டு - என்ன அத்தை சமைக்க என்று ஒரு வார்த்தை கேட்டாலே - எல்லா மாமியார்களும் சுருண்டு போய் விட மாட்டார்களா?

மதியம் சாப்பாட்டுக்கு பின்னர் மாமனார் மாமியாரை சற்று படுத்து ஓய்வெடுங்கள் என்று இதமாக சொல்லுங்கள். அவர்களும் அதற்கு ஒத்து கொள்வர். இதில் இன்னுமொரு வசதியும் உள்ளது. நீங்களும் கொஞ்ச நேரம் அசரலாம். அவர்களால் ஒன்றும் சொல்ல இயலாது அல்லவா?

மாலை ஐந்து மணிக்கெல்லாம் மாமியாரை கோவிலுக்கு அழையுங்கள். அவர் வந்தால் அவருடன் கோவிலுக்கு போங்கள். அவர் வரவில்லை என்றால் உங்களுக்கு பிடித்த இடத்துக்கு சென்று சேலையோ, ஜிமிக்கியோ வாங்கி வரலாம். அல்லது கோவிலுக்கும் போய் வரலாம்.

அவ்வாறு நீங்கள் மட்டும் தனியாக போய் வர நேரிட்டால், திரும்பி வருகையில் நிச்சயம் மாமனாருக்கும் மாமியாருக்கும் பிடித்த தின்பண்டம் எதையாவது வாங்கி கொடுத்து பாருங்கள்.

பிறகு உங்கள் கணவர் உங்களுக்கு பரிந்து பேசினாலும் பேசாவிட்டாலும், உங்களுக்காக குரல் கொடுக்க, உங்கள் மாமனாரும் மாமியாரும் போட்டி போட்டுக் கொண்டு முன் வருவார்கள்.

உங்கள் கணவரே உங்களுக்கு எதையாவது வாங்கி வந்து கொடுத்தாலும், உடனே உங்கள் கணவரிடம், அதனை  மாமியாரிடம் கொடுத்து, அவர் கையால் உங்களுக்கு கொடுக்க சொல்லுங்கள் என்று மாமனாருக்கும் மாமியாருக்கும் கேட்கும்படி சற்று உரக்கவே சொல்லி பாருங்கள்.

இது போல நீங்கள் செய்ய ஆரம்பித்தால், நிச்சயம் உங்கள் மாமியாரும் மாமனாரும் உங்களை குல சாமி என்றே தொழ ஆரம்பித்து விடுவர்.

பின்னர் அவர்கள் இருவரும் விடை பெற்று சென்று ஒரு மாதம் கழித்து எனக்கு என் நண்பர் ஃ போன் செய்தார். இப்போது மாமியாரும் மருமகளும் ஒத்து போய் விட்டார்கள் என்றும்  அவரை கூட சரிவர அவரது மனைவி கவனிப்பதில்லை என்று பூரித்து விட்டார் போங்கள்.

எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. இவ்வளவையும் என் அண்ணியாருக்கும் நான் சொல்லித் தான் பார்த்தேன். என்ன புண்ணியம்! என் அம்மா இருக்கும் வரையிலும் இருவரும் எலியும் பூனையும் போல் அப்படி ஒரு ஒற்றுமையாய் இருந்ததை இன்னமும் என்னால் மறக்க இயலவில்லையே!

அன்பன்
அ . வீ . மாரிமுத்து   03 - 08 - 2016
23. சுந்தர சேகரத்தின் சிறப்பு

ஜோதிடத்தில் என்னை கவர்ந்த நூல்கள் பல உள்ளன. என்றாலும் சுந்தர சேகரம் என்னை முழுமையாக கவர்ந்துள்ளது. அதனை வாங்கி அனுபவித்து படித்து பாருங்கள்! உண்மை புரியும்.

எந்த ஒரு பாவமும் ஒரு நீச்சனால் பார்வை அடைவதோ அல்லது நீச்சனை கொண்டிருப்பதோ கூடாதாம். அவ்வீட்டில் அக்கிரகத்தின் காரக பலனை அவ்வீடு இழக்கும்.

எந்த ஒரு கிரகமும் ஒரு நீச்சனுடன் கூடுவதோ அல்லது நீச்சனால் பார்க்கப்படுவதோ கூடாதாம்.

சந்திரனுடன் நீச்ச சனி சேர அன்னை மோசமானவளாம். நோயாளியும் ஆவாள். அன்னையை பிரிய நேரும்.
நீச்ச சுக்கிரன் சேர அன்னை சதா உடலுறவில் மூழ்கி இருப்பாள். சோம்பேறியும் கூட! நீண்ட ஆயுள் உள்ளவள் ஆவாள்.
நீச்ச குருவுடன் கூட அன்னை நீண்ட ஆயுள் உள்ளவள் மட்டும் அல்ல. ஜாதகனை பின்னுக்கு தள்ளி விடும் சண்டிக் குதிரையாய் இருப்பாள். இவள் ஜாதகனை விட்டு பிரியவும் மாட்டாள். ஆனால் யாரையும் நிம்மதியாய் வைத்து கொள்ள மாட்டாள்.
நீச்ச புதனுடன் சந்திரன் சேர அன்னையவள் அறிவற்றவளும் சண்டை வலிப்பவளும் ஆவாள். ஆனால் நீண்ட காலம் வாழ்வாள். இவளிடம் வாய் கொடுத்து யாரும் மீள இயலாது.
நீச்ச செவ்வாயுடன் கூட அன்னையவள் போராடும் குணமும் சண்டைக் கோழியும் ஆவாள். ஒருசிலர் சீக்கிரமே இறந்து போகவும் நேரும். ஆனாலும் இங்கு செவ்வாய் நீச்ச பங்கம் ஆவதால் அவ்வளவு மோசமான அன்னை யானாலும் பின்னாளில் சிறந்தவளாய் மாறுவாளாம்.
சந்திரன் நீச்ச சூரியனுடன் சேர அன்னையவள் நோயாளி ஆவாள். யாருடனும் ஒத்து போக மாட்டாள்.

இதுபோல ஒவ்வொரு கிரகத்துக்கும் பார்க்கவும்.

நீசமான கிரகம் தனிக்க, அது எந்த கிரகமோ அந்த கிரகத்தின் உறவினர் குறை ஆயுள் உள்ளவராக அல்லது நோயாளியாக அல்லது ஜாதகருக்கு பிரயோஜனம் அற்றவராக ஆகி விடுவார்.

ஒரு ஜாதகத்தில் லக்கினம், தன பாவம், பத்தாமிடம், இலாபம் ஆகியவை அந்த ஜாதகருக்கு மற்றவரால் வரும் நன்மை அல்லது உதவி அல்லது கேடு போன்றவற்றை சொல்லும் இடமாகும்.

ஆகவே மேற்சொன்ன இடங்களில் நீச்ச கிரகம் இருக்க, அந்த கிரகம் குறிக்கும் கிரக உறவினர் யாரோ அவரால் ஜாதகன் முன்னேறவோ அல்லது உதவி அடையவோ மாட்டான். மாறாக அவர்களால் ஜாதகனுக்கு முட்டுக் கட்டையும், இன்னல்களும், அவமரியாதையும் உண்டாகும்.

பன்னிரண்டாம் இடமும் ஒரு ஜாதகனுக்கு விரயத்தை சொல்லும் இடமாம். அதாவது ஜாதகன் பின்னாளில் வேறொருவருக்கு பண உதவி செய்ய நேரும் இடம் எனலாம். ஆகவே விரைய பாவத்தில் எந்த கிரகம் நட்பு, ஆட்சி, உச்சம் பெற்றுள்ளதோ, அக்கிரக உறவினரின் உதவியை ஜாதகனின் இளமையில் அடைவான். அந்த நன்றி கடனை தீர்க்க, பின்னாளில் அந்த உறவினருக்கு கண்ணை மூடி கொண்டு ஜாதகன் செலவு செய்வானாம்.
 
மேற்சொன்ன இடங்களில் நின்ற அசுபத்வ கிரக உறவினரும் ஜாதகனை விட மாட்டார்களாம். அப்படிப்பட்ட உறவினர்களை காலப் போக்கில் ஜாதகனே கழற்றி விட்டு விடுவான்.

நீச்சம் என்று வந்த பிறகு, நீச்ச பங்கத்தை சொல்லாமல் போனால் அது நன்றாய் இராது.

ஒரு கிரகம் நீச்சம் ஆகி, அவர் வர்க்கோத்தமம் ஆனால் (இராசியிலும் அம்சையிலும் ஒரே பாவத்தில் இருப்பதை வர்க்கோத்தமம் என்பர்)
அல்லது வக்கிரம் ஆனால்
அல்லது அவ்விரண்டு நிலையையும் பெற்றால்
 அல்லது நீச்சன் நின்ற அதிபதி இராசியில் ஆட்சி அல்லது உச்சம் ஆனால் அல்லது நீசன் நின்ற இராசியின் உச்ச கிரகம் இராசியில் ஆட்சி அல்லது உச்சமாக
அல்லது நீச்சனுடன் அவரது நட்பு கிரகம் உச்சமாகி கூட
அல்லது நீசன் அம்சையில் ஆட்சி அல்லது உச்சமாக
நீச்ச கிரகம் தனது நீச்ச நிலையிலிருந்து உயர்ந்து நீச்ச பங்க இராஜ யோகத்தை செய்யும்.

ஆனால் இந்த யோகம் ஜாதகன் பிறந்தவுடன் நிகழாது. முப்பது வயது வரை ஜாதகனையும் அவனது குடும்பத்தாரையும் பலவிதமாக பாதிக்கும். அந்த முப்பது வயதுக்கும் மேல் திடீரென்று ஒரு வாய்ப்பு வந்து அதன் மூலம் ஜாதகன் வெகுவாய் முன்னேறி விடுவான்.

அதன் பின் அவன் வாழ்வில் சரிவென்பதே இராது.  ஆனாலும் நீச்ச கிரகத்தின் உறவினர் இவனை இவனது அறுபது வயது வாக்கில் படுத்தி எடுத்து விடுவார்.

இன்னும் சொல்ல வேண்டியுள்ளது.

அடுத்த பகுதிக்கு செல்வோம்.

அன்பன்
அ .வீ . மாரிமுத்து  03 - 08 - 2016

Tuesday, August 2, 2016

21. உதாரணத்துடன் 

சுந்தர சேகரம் என்ற நூல் வெகு எளிய அருமையான நூல். அதில் கிரக சேர்க்கை மற்றும் பார்வையை பற்றி வெகு நன்றாக கூறப் பட்டுள்ளது.

ஒரு கேந்திராதிபதி சுபரானால் அவர் தன் திக் வலு பெற்ற கேந்திரத்தில் நின்றால் உயர் வலு அடைகின்றார்.

மேஷத்துக்கு சந்திரன் நான்கில் ஆட்சி பெற்று சுபரது பார்வை அல்லது கூடல் பெற உயர் பலனாம். ஏழாமாதி சுக்கிரன் நான்கில் இருப்பது நன்று தான். ஆனாலும் அங்கு அவர் பகையாவதால் நல்லதில்லை. ஒருவேளை அவர் அம்சையில் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நல்ல பலனை செய்வாராம்.

கடகத்துக்கு சந்திரன் லக்கினத்தில் நின்று சுபரும் நண்பருமான குருவுடன் சேர அல்லது பார்க்கப்பட அவர் நல்லவராம். ஒரு பாவாதிபதி தன் சொந்த பாவத்தை பார்ப்பது உயர்வு என்ற அடிப்படையில்.

கடகத்துக்கு நான்காமாதி சுக்கிரன் நான்கில் இருப்பது உயர்வாம். ஆனால் அவரே இலாபாதியும் ஆவதால், சர லக்கினத்துக்கு இலாபாதி ஆகார் என்னும் விதியின்படி இவர் நான்கில் இருந்து செவ்வாயின் பார்வை பெற்றால் உயர் பலனை செய்வாராம்.

இங்கு ஒரு கேள்வி எழுகின்றது. கடகத்துக்கு நான்கில் நின்ற சுக்கிரன் ஆட்சி தானே என்று. ஆட்சி பெற்ற எந்த கிரகமும் தன் கார பலனை மட்டும் உயர்த்தும் என்றும், காரக பலனை தாழ்த்திவிடும் என்றும் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது.

அது அப்படியாயின் அந்த சுக்கிரனை கடக லக்கினத்துக்கு சுபராகிய குரு பார்க்கலாமா என்று!

இன்னொரு விதியையும் இங்கு சொல்ல வேண்டும். இரு அல்லது அதற்கும் மேம்பட்ட கிரகங்கள் ஒரு வீட்டில் சம்பந்தப்படுகையில், அதில் ஒருவர் ஆட்சியானால், எல்லா கிரகங்களின் ஆதிபத்தியங்களையும் வைத்து தான் அவ்விடத்து பலனை கார, காரகப்படி முடிவு செய்ய வேண்டும்.

ஆக கடக லக்கினத்துக்கு நான்கில் ஆட்சியாய் உள்ள சுக்கிரனை குரு பார்க்கலாமா? பார்க்கலாம். நல்ல மனைவி, குழந்தைகள், வசதி வாய்ப்புக்கள் என்று ஜாதகனுக்கு அமையும் தான். ஆனால் அதனை தக்க வைத்து கொள்ள ஜாதகனுக்கு தெரியாது. ஏன்?

கடக லக்கினத்துக்கு நான்கில் நிற்கும் சுக்கிரன் திக் வலு அடைவதால் அவர் நல்லவரே. அதே லக்கினத்துக்கு குருவும் பூரண நல்லவர் தாம். என்றாலும் இருவரும் எதிரிகள் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

சுக்கிரனை பொறுத்தவரை குருவை பாக்கியாதிபதி என்று கருத மாட்டார். குருவை ஆறாமாதி என்றே பார்ப்பார். அதுபோல, குருவை பொறுத்த வரை சுக்கிரனை நான்காமாதி என கருத இடமில்லை. மாறாக இலாபாதிபதியாம் மாரகர் என்றே கருதுவார்.

விளைவு என்ன? நான்காமிடத்து கார, காரக பலன்களை சுக்கிரன், குரு ஆகியோரை பொறுத்தவரை கெடுப்பர். வாகனம், கால் நடைகள், சுகம், உறவினர்கள், சுப சடங்குகளில் தாமதம், கவலை போன்றவற்றை அளிப்பர்.

ஆனால் குரு சுக்கிரனை பார்த்ததால் நீண்ட ஆயுளுடைய மனைவியும் அமைவாள். ஆனால் அவளோடு ஒத்து போக இயலாமல் ஜாதகனின்  இயல்பு அல்லது மனைவியின் போக்கு அமையும்.

மேஷ லக்கினத்துக்கோ அல்லது கடக லக்கினத்துக்கோ கடகத்தில் குருவும் சந்திரனும் கூடுவது உயர்வாம். காரணம், அவ்விருவரில் ஒருவர் ஆட்சியாகி அவ்விருவரும் நல்ல ஆதிபத்தியராய் மாறுவதே.

கடக லக்கினத்துக்கு குரு ஆறாமாதிபதி ஆனாலும், சந்திரனை பொறுத்த அளவில் குரு ஒன்பதாம் அதிபதியாய் மட்டுமே விளங்குவார்.

மேஷ லக்கினத்துக்கு குரு விரயாதிபதி ஆனாலும், சந்திரனை பொறுத்த அளவில் குரு பாக்கியாதியாய் மட்டுமே இருப்பார்.

ஆக கோள்களின் கூடலில் ஏதேனும் ஒரு கிரகம் ஆட்சியாய் இருந்திட, எல்லா கிரகங்களின் ஆதிபத்தியத்தை கருத்தில் கொண்டும், அவ்விரு கிரகங்களும் பரஸ்பரம் நட்பா அல்லது பகையா அல்லது சமமா மற்றும் அவ்விரு கிரகங்களும் சுபரா அல்லது அசுபரா என்று கண்ட பிறகே ஒரு முடிவுக்கு வரல் வேண்டும்.

கூடலில் எந்த கிரகமும் ஆட்சி இல்லை எனில், அக்கூடலில் உள்ள கிரகங்களை வெறும் காரகர்களாகவே கருதி, அவர்கள் தங்களுக்குள் பகையா, சமமா, நட்பா என்றும், சுப அசுபரா என்றும், அவ்வீட்டில் அவர்கள் பெற்ற வலுவையும் கொண்டு பலனை நிர்ணயிக்க வேண்டுமாம்.

இன்னும் உதரணங்களை தர வேண்டியுள்ளதால் அடுத்த பகுதியில் சந்திப்போம்.

அன்பன்

அ .வீ . மாரிமுத்து  03 - 08 - 2016


21. ஆட்சி கிரகங்களை பார்த்தல்

நான் ஏற்கனவே சொன்னது மாதிரி ஒரு கிரகம் தன சொந்த வீட்டிலேயே இருந்து யாராலும் பார்க்கப்படாமலும், யாருடனும் கூடாமலும் இருந்தால், அதற்கு தனித்த கிரகம் என்று பெயர்.

அப்படி ஒரு கிரகம் தனித்து ஆட்சி பெற்றால் அக்கிரகத்தின் கார பலன் அவ்வீட்டில் உயர்ந்தும், காரக பலன் தாழ்ந்தும் போகும் என்பதை ஏற்கனவே சொல்லி விட்டேன்.

விருட்சிக லக்கினத்துக்கு நான்கில் சனி ஆட்சியாகி தனிக்க, காரபலனாம் (நான்காம் அதிபதி நான்கில் உள்ளதால்) அன்னை நீண்ட ஆயுள் உள்ளவளாக இருப்பாள். ஆனால் காரக பலன் (அதாவது நான்கில் சனி உள்ளதால்) ஜாதகன் கபடனாயும், கூட்டு குடும்பத்தில் பற்றற்றவனாயும் இருப்பான். சுய நலம் மிக்கவன் ஆவான். யாராவது சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று இவனிடம் சொன்னால், உடனே இவனுக்கு வயிறு எரிய ஆரம்பித்து விடும்.

இதே ஜாதகனுக்கு சந்திரன் வலுத்து இருக்க அன்னை சிறந்தவளாயும், கடின உழைப்பாளியாகவும் இருப்பாள். ஆனால் சந்திரன் வலுவற்று போக, அன்னையின் ஆயுள் அதிகம் ஆயினும், அன்னை துர் நடத்தை கொண்டவள் ஆவாள்.

மகர லக்கினத்துக்கு நான்கில் செவ்வாய் ஆட்சியாகி தனிக்க, சந்திரன் உச்சமாகிட, சாதகனின் அன்னை நீண்ட ஆயுளும் சிறந்த குணவதியும் ஆவாள். அவள் எதையும் சாதிக்கும் தன்மையும் அமைந்தவள் ஆவாள். ஆனால் நான்கில் செவ்வாய் இருப்பதால் அன்னையிடம் உறவு மத்திய வயதில் இருந்து பாதிக்கப்படும். மேலும் ஜாதகன் நிலபுலம் இல்லாத வீட்டில் பிறந்திருப்பான். அப்படியே இருந்தாலும் இவன் அந்த நிலபுலன்களை அனுபவிக்க இயலாது போகும்.

ஆனால் இந்த விருட்சிக லக்கினத்தின் நான்காம் இடத்தில் உள்ள சனியை ஐந்தாமாதியாம் குருவோ அல்லது பதினோராம் அதிபதியாம் புதனோ கூட அல்லது பார்க்க ஜாதகன் நல்ல அன்னையையும், நாளடைவில் நல்ல உள்ளத்தையும் அடைவானாம்.

இங்கு புதன் எட்டாமாதியாயிற்றே அவர் கூடினால் நன்மை இராதே என நீங்கள் கேட்கலாம்.

சனியும் புதனும் நல்ல நண்பர்கள். எனவே இருவரும் கூடுகையில் சனியானவர் புதனை இலாபாதியாக மட்டுமே பார்ப்பார். அவரை சனி எட்டாமாதியாக நினைக்கவும் மாட்டார். ஆகவே கார பலனோ அல்லது காரக பலனோ  நல்ல பலனை மட்டுமே செய்வாராம்.

அது போலவே சனியும் குருவும் சமர்கள். எனவே விருட்சிக லக்கினத்துக்கு சனியும் நல்லவர் தாம். குருவும் பூரண சுபர் தாம். ஆகவே அக்கூடலும் நல்லதாகவே இருக்கும்.

ஆகவே ஆட்சி பெற்று தனித்த கிரகத்தை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை இங்கு உணர்ந்திருப்பீர்கள் என்று நான் உணர்கின்றேன்.

விருட்சிக லக்கினத்துக்கு நான்கில் உள்ள சனியை ஆறில் இருந்து இராகு பார்த்தால் நிச்சயம் அது கார பலனையும் காரக பலனையும் கெடுக்கும் தான். ஆனால் முற்றிலும் கெடுக்காது. ஏன் எனில் சனி ஆட்சியாய் இருப்பது தான். ஆனால் நான்கில் இராகுவும் சேர ஜாதகனின் அன்னையும், ஜாதகனும் முதல் தர கேடியாய் இருப்பர். இவரது வேலையே மற்றவரை கெடுப்பதாய் தான் இருக்கும். காரணம் இராகு எந்த வீட்டில் உள்ளாரோ அவ்வீட்டின் ஆட்சி கிரகம் ஆவதே. ஒரே வீட்டில் இரு அரசர்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். என்றாலும் இருவரும் நட்பாய் இருப்பதால் கொஞ்சமாவது மட்டு மரியாதை இருக்கும்.

மகர லக்கினத்துக்கு நான்கில் உள்ள செவ்வாயுடன் இராகு சேர - இங்கு கார, காரக பலன்கள் இன்னும் மோசமாகவே நடக்கும். காரணம், இங்கு இருவரும் அசுபர்கள் மட்டும் அல்ல! எதிரிகளும் கூட! ஆக இப்படிப்பட்ட ஜாதகர் மட்டு மரியாதை எல்லாம் துறந்தே போய் விடுவராம்.

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வையுங்கள். இரு கிரகங்கள் ஒரு வீட்டில் இருந்தால் - அவர்களில் ஒருவர் ஆட்சியானால் - அவ்விருவரும் நல்ல ஆதிபத்தியம் உள்ளவர் ஆனால் - அவ்வீட்டின் கார காரக பலன்கள் அவ்விருவரை பொறுத்த அளவில் வெகு உயர்வாக நடக்கும். அதிலும் அவ்விருவரும் அமர்ந்த இடம் சுபர் வீடாகி, அவ்விருவரும் சுபராகி, அவ்விருவரும் நட்பு அல்லது சமராகிட வெகு உயர்வான பலனை தருவராம்.

ஒரு வீட்டில் கூடிய அவ்விருவரில் ஒருவர் ஆட்சியாகி, அவ்விருவரில் ஒருவர் நல்லாதிபத்தியராயும், இன்னொருவர் மோசமான ஆதிபத்தியராயும் இருக்க, அவ்வீட்டில் அவ்விருவரின் கார, காரக பலன்கள் கெடுமாம். அதிலும் அவ்விருவரும் பரஸ்பரம் எதிரிகளானால் இன்னும் மோசமான பலனையே தருவராம்.

அவ்விருவரும் அசுபர்களாகியும், இருவரும் அசுப ஆதிபத்தியராயும் அல்லது மாரகராயும் இருந்து, இருவரும் எதிரிகளாக, அக்கூடலின் பலன்கள் மோசமாகுமாம்.

இவற்றை உதாரணங்களுடன் சொன்னால் இன்னும் நன்றாக உங்களால் புரிந்து கொள்ள இயலும் என்பதால் அடுத்த பகுதியில் அவ்வாறு சந்திப்போம்.

நண்பன்
அ .வீ. மாரிமுத்து   02 - 08 - 2016
.


20. லக்கினங்களும் மூன்று நான்காமாதிகளும் 

பொதுவாக எந்த லக்கினம் ஆயினும் மூன்றாமாதி பாதி சுபரும் பாதி அசுபரும் ஆவாராம். ஆனால் சுபரே மூன்றாமாதியானால் அவர் பூரண சுபர் ஆவாராம். ஆனால் அசுபர் மூன்றாமாதியானால் அவர் அசுபராம்.

மேஷத்துக்கு புதன் மூன்றாமாதியும் ஆறாமாதியும் ஆவதால் அவர் அசுபராம். இவர் கேந்திர கோணங்களில், தன இலாபத்தில் நிற்பது வரவேற்க தக்கதல்ல. மறைவிடத்தில் நின்று வலுத்து, சுபர் பார்வை பெறுவது நல்லதாம். அசுபர் பார்வை மட்டும் பெற்றால் தீதாம்.

ரிஷபத்துக்கு சுபராம் சந்திரன் மூன்றாமாதிபதி ஆவதால் அவர் நல்லவராம். ஆனால் அவர் மாரகரும் கூட!. ஆகவே இவர் அசுபர் சம்பந்தம் பெற்றால் தீமையே செய்வார்.

மிதுனத்துக்கு சூரியன் மூன்றாமாதிபதி ஆவதால் இவர் அசுபரே.

கடகத்துக்கு மூன்றாம் மற்றும் பன்னிரண்டாம் அதிபதி ஆவதால் புதனை சமர் என்றே சொல்ல வேண்டும். இவர் சுபருடன் சேர சுபராகவும், அசுபருடன் சேர அசுபராகவும் மாறுவார்.

சிம்மத்துக்கு சுக்கிரன் மூன்று மற்றும் பத்தாமிடங்களுக்கு அதிபதி ஆகின்றார். சுக்கிரன் பத்தாமாதி ஆவதால் அவர் கேந்திர தோஷம் மிக்கவராகி, அசுபர் ஆகின்றார். என்றாலும் இவர் 9 இல் அமர்ந்து செவ்வாயுடன் கூட அல்லது அவர் தம் பார்வையை பெற்றிட உயர் பலனை செய்வாராம்.

கன்னிக்கு மூன்றாமாதியாம் செவ்வாயே எட்டாமாதியாகவும் ஆவதால் அவர் அசுபராம்.

துலாவுக்கு மூன்றாமதியே ஆறாமாதியும் ஆவதால் குரு அசுபரே.

விருத்சிகத்துக்கு  மூன்றாமாதியே நான்காமாதியும் ஆவதால் சனி சமரே.

தனுசுக்கு மூன்றாமாதியே இரண்டாமாதியும் ஆவதால் அவர் சமரே.

மகரத்துக்கு மூன்றாமாதியே ஆறாமாதி ஆவதால் குரு அசுபராம்.

கும்பத்துக்கு மூன்றாமாதியாம் செவ்வாய் பத்துக்கும் அதிபதி ஆவதால் - இவருக்கு கேந்திர தோஷம் இல்லாததால் - இவர் சுபராம்.

மீனத்துக்கு மூன்றாமாதியாம் சுக்கிரனே எட்டாமாதியும் ஆவதால் அவர் பூரண அசுபராம்.

சுபராயின் அவர்கள் கேந்திர கோணம், தன, இலாபத்தில் நல்ல வலிமை யுடன் சுபர் சகிதம் இருக்க, உயர் பலனை தருவர் என்பது பொது விதியாம். இவர்கள் மறைவிடங்களில் இருப்பதும், அங்கு வலுவற்று போவதும் அக்கிரகத்தின் கார காரக பலன்களை குறைக்கும்.

அசுபராயின் அவர்கள் மறைவிடங்களில் நல்ல வலு பெற்றும் சுபர் பார்வையும் அடைந்திருக்க - விபரீத இராஜ யோகமாகி - உயர் பலனை அளிப்பார். ஆனால் அசுபர் சகிதம் இருக்க மோசமான பலனை மட்டுமே தருவார். இவர்கள் கேந்திர கோண தன, இலாபத்தில் இருக்க, அந்த இடத்து பலனில் அக்கிரக கார, காரக பலன்கள் சற்று தாழ்வுறும். மேலும் அசுபர் சகிதம் இருக்க, இன்னும் அவ்விடத்து பலன்கள் குறையுமாம்.

மேஷத்துக்கு நான்காம் அதிபதி சந்திரன் ஆவதால் - அது அவரது திக் வலு பாவம் ஆவதால் - அவர்   பூரண சுபராம்.

ரிஷபத்துக்கு நான்காம் அதிபதி சூரியன் ஆவதால் அவர் பூரண சுபராம்.

மிதுனத்துக்கு லக்கினாதிபதியாம் புதனே நான்காம் அதிபதி ஆவதால், அவர் சமராம். இவர் லக்கினத்தில் தனித்து நின்றால் பூரண சுபராம். நான்கில் அசுபருடன் நின்றால் பூரண சுபராம். இவர் ஏழு பத்தில் தனித்தோ அல்லது சுபருடன் சம்பந்தமுற்றோ நிற்க அசுபராம். அசுபருடன் நிற்க சுபராம். இவர் மறைவிடங்களில் இருப்பது நல்லதில்லையாம்.

கடகத்துக்கு நான்காம் அதிபதியே இலாபாதியான மாரகாதியும் ஆவதால் சுக்கிரன் அசுபராம். ஆனாலும் நான்கில் அமர்ந்து செவ்வாயின் பார்வை பெற உயர் பலனை தருவாராம்.

சிம்மத்துக்கு நான்காம் அதிபதியாம் செவ்வாய் ஒன்பதுக்கும் அதிபதி ஆவதால் - அவர் பூரண சுபராம்.

கன்னிக்கு நான்குக்கு அதிபதியாம் குரு ஏழுக்கும் அதிபதி ஆவதால் - அவ்விரண்டு பாவங்களும் குருவுக்கு கேந்திர தோஷமாய் ஆவதால் - குரு அசுபராம் மற்றும் மரணம் செய்யும் மாரகராம்.

துலாவுக்கு நான்காம் அதிபதியே ஐந்துக்கும் அதிபதி ஆவதால், சனி பூரண சுபர் ஆகின்றார்.

விருட்சிகத்துக்கு சனி சமராம். ஏனென்று ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது.

தனுசுக்கு லக்கினாதிபதியே நான்காம் அதிபதியும் ஆவதால் இவரும் சமராம். என்றாலும் லக்கினத்தில் அல்லது நான்கில் உள்ள குருவை செவ்வாய் அல்லது சூரியன் பார்க்க இவர் உயர் பலனை செய்வாராம்.

மகரத்துக்கு நான்காம் அதிபதியாம் செவ்வாயே இலாபாதியும் ஆவதால் இவர் மரணத்தை தரும் மாரகர் ஆகின்றார். இவர் லக்கினத்திலோ அல்லது நான்கிலோ ஐந்திலோ அமர்ந்து சுக்கிரனின் பார்வையை பெற்றால் உயர் பலனை செய்வாராம். செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து பத்து அல்லது இலாபத்தில் அமரவும் உயர் பலன் தருவார்களாம். இவர் கடகத்தில் சந்திரனுடன் கூடிட நீச்ச பங்க இராஜ யோகம் அடைந்து, முப்பது வயதுக்கு மேல் நன்மை அடைய வைப்பாராம்.

கும்பத்துக்கு நான்காம் அதிபதியாம் சுக்கிரனே ஒன்பதாம் அதிபதியும் ஆவதால் அவர் பூரண சுபராம்.

மீனத்துக்கு நான்காம் அதிபதியாம் புதனே ஏழாமாதியும், ஆவதால், அவர் மாரகராம்.

இனி அடுத்த பகுதியில் சந்தித்து சிந்திப்போம்

அன்பன்
அ .வீ. மாரிமுத்து  02 - 08 - 2016





Monday, August 1, 2016

19. லக்கினங்களும் தனாதிபதியும் 

இரண்டாம் அதிபதியே மூன்றாம் அதிபதியானால் - இது தனுசு லக்கினத்துக்கு மட்டுமே பொருந்தும் - அவரை நல்லவர் என்று சொல்ல இயலாது. என்றாலும் இவர்கேந்திரம் அல்லது கோணத்தில் வலுக்க, சுபத்வம் அடைந்திட உயர் பலனை செய்வார். இவர் மறைவிடங்களில் அசுபத்வம் அடைந்திட தீய பலனே.

அது என்ன சுபத்வம் என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகின்றது. ஒரு கிரகம் சுபர் பாவத்தில் நிற்பது சுபத்வம் ஆகும். அக்கிரகமே நட்பு, ஆட்சி, உச்சம் பெறுவதோ இன்னும் சுபத் தன்மையை அதிகரிக்கும். நட்பு ஆட்சி, உச்சம் பெற்றாலும் அம்சையில் உச்சம், ஆட்சி, நட்பு பெறுவது மிக முக்கியம்.

ஆட்சி பெற்றவர் அம்சையிலும் ஆட்சி பெற்றால் அது அவ்வளவு நல்லதில்லை. அதனால் நன்மையையும் தீமையும் கலந்தே பலன் அமையும். அது போல இராசியிலும் அம்சையிலும் உச்சம் பெற்றால் - இதனை வர்க்கோத்தமம் என்பர் - அக்கிரகத்தின் பலனை ஜாதகன் ஏற்கனவே பெற்றிருந்தாலும், அதற்கு மேல் முன்னேற இயலாது. அதாவது மாடி வீட்டு ஏழை தான்!

இராசியில் எப்படியோ அம்சையில் ஆட்சி, உச்சம், நீச்சபங்கம் அடைந்தால் அக்கிரகம் வலுவும் சுபத்வமும் அடைந்து விடும். ஒரு கிரகம் தனது  சொந்த விண்மீனில் நின்று இராசி அல்லது அம்சையில் அக்கிரகம் ஆட்சி, உச்சம் அல்லது நீச்ச பங்கம் ஆகிட அக்கிரகம் வலுவுள்ளதாகின்றது. ஏதேனும் இரு கிரகங்கள் நல்ல பரிவர்த்தனை அடைந்திட, அவ்விரு கிரகங்களும் வலு அடைகின்றனவாம். அந்த கிரகங்கள் இருப்பில் நட்பு, உச்சம் ஆனால் அப்பல ன்கள் இளமையில் இருந்தே நடக்குமாம். பகை, நீச்சம் ஆனால் பொதுவாக இளமைக்கு மேல் நல்ல பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.

ஒரு கிரகம் எவர் வீட்டில் நின்றதோ அவ்வீட்டு நாதர் வலுக்க முன் கிரகத்தின் பலன் வலுவடையுமாம்.

எக்கிரகமும் பகை, நீச்சம் அடைந்த கிரகத்துடன் கூடவோ அல்லது பார்வை அடையவோ கூடாது. அது அவ்வாறானால் அக்கிரக காரக உறவினர் அவருக்கு எதிரி ஆவார். அல்லது கூடவே இருந்து குடி கெடுப்பார். நீச்ச பங்க கிரகத்துடன் இருந்தால் அவ்வுறவினரை நம்ப இயலாது. ஆனால் எப்போதும் உடன் இருப்பார்.

எந்த கிரகமும் சுபருடன் கூட அல்லது பார்வை அடைய அவை சுபத்வம் அடைகின்றன.

தனாதிபதியே ஐந்தாமாதியானால் அவர் பூரண சுபர் ஆகின்றார். இது ரிஷபம் மற்றும் விருட்சிக லக்கினங்களுக்கு மட்டுமே சாத்தியம்.

தனாதிபதியே ஏழாமாதியானால் அவர் அசுபரும் மாரகரும் ஆகின்றார். இது மேஷம் மற்றும் துலா லக்கினங்களுக்கு மட்டுமே அமையும்.

இவர்கோணத்தில் நின்று சுபத்வம் பெற்றிட நல்ல வருமானமும், நல்ல குடும்ப நிலையையும், நல்ல மனைவி மக்களையும் அடைவார். ஆனால் அசுபத்வம் அடைய தமது திசை, புத்திகளில் மோசமான பலனை மட்டுமே தருவார். இவர் இன்னொரு மாரக பாவத்தில் அல்லது லக்கினத்தில் நின்று அசுபத்வம் அடைய அவரது திசையில் மாரகம் அல்லது முற்றிலும் கொடிய பலனையும் மட்டுமே தருவார்.

தனாதிபதியே ஒன்பதாம் அதிபதியானால், அவர் பூரண சுபராவார். இது மீனம் மற்றும் கன்னி லக்கினங்களுக்கு மட்டுமே அமையும்.

தனாதிபதியே பதினோறாமாதியானால் அவரை சமர் என்றே சொல்ல வேண்டும். இது சிம்மம் மற்றும் கும்ப லக்கினங்களுக்கு மட்டுமே அமையும்.  இவர் பெற்ற வலுவை கொண்டே, இவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று முடிவு செய்யவேண்டும்.

கோணாதிபதி கோணத்திலேயே இருந்து வலுவும் சுபத்வமும் அடைவது உன்னத வலுவை அக்கிரத்துக்கு கொடுக்கும். இவருடன் இன்னொரு கோணாதிபதி அல்லது கேந்திராதிபதி கூடுவது அல்லது பார்ப்பது அக்கிரக வலுவை இன்னும் உயர்த்தும்.

கோணாதிபதி ஏதேனும் ஒரு கேந்திரத்தில் நின்று சுபத்வம் அல்லது வலுவடைய அது அக்கிரக வலுவை உயர்த்தும். இவருடன் இன்னொரு கோணாதிபதி அல்லது கேந்திராதிபதி கூட அல்லது பார்க்க அக்கிரக வலு இன்னும் கூடும்.

கோணாதிபதி தனம் அல்லது இலாபத்தில் நின்று வலுக்க, அதுவும் அக்கிரக வலுவை கூட்டுமாம். ஆனால் அவ்விடங்கள் மாரக பாவங்களாகி அக்கிரகம் அசுபத்வம் அடைய அவர் கெட்டதையே செய்வாராம்.

பொதுவாக கோணாதிபதி மறைவிடங்களில் நின்று அசுபத்வம் அடைவது தீதாம்.

அசுப கிரகம் கேந்திராதிபதியாகி எந்த கேந்திரத்திலும் அல்லது எந்த கோணத்திலும் நின்று வலுக்க, அவர் நல்லவர் ஆகி விடுகின்றார். ஆனாலும் அவர் நின்ற இடத்தில் சற்று மிதமான பலனை மட்டுமே தருவார்.

அசுப கேந்திராதிபதி தனம் அல்லது இலாபத்தில் வலுத்து நிற்க சமமான  பலனையும், அசுபத்வம் அடைய தீய பலனையும் செய்வாராம்.

அசுப கேந்திராதிபதி மறைவிடங்களில் அசுபத்வம் அடைந்து நிற்பது மிக மோசமான பலனை மட்டும் செய்வார் எனலாம். இவர் சுபத்வம் அடைய சமமான பலனை செய்வார். அதிகம் பாதிக்க மாட்டார்.

சுப கிரகங்கள் கேந்திராதியாகும் போது - அது சுக்கிரன், சந்திரனாயின் ஏழு பத்தாமாதியாகி, ஏழு பத்தில் அமர்வதுவும் - அது குரு, புதனாயின் அவர் நான்கு, ஏழு, பத்தாமாதியாகி, நான்கு, ஏழு, பத்தில் அமர்வது தீதாம்

மிதுன லக்கினமாகி, நான்காமாதியாகிய புதன் நான்கில் உச்சமாகி அமரலாம். அது உயர்வே. தனுசு லக்கினமாகி நான்காம் அதிபதியாகிய குறு நான்கில் அமர்வது நன்மையையும் தீமையும் கலந்த பலனையே தரும். இவரை சூரியன் அல்லது செவ்வாய் பார்க்க உயர் பலனை தருவார். ஆனால் சுக்கிரன் அல்லது பாம்புகள், சனி ஆகியோரால் பார்க்கப்பட தீய பலனையே தருவாராம்.

தனாதிபதி, மூன்றாமாதிபதி, இலாபாதிபதி மற்றும் விரயாதிபதி ஆகியோர் கோணத்தில் சுபத்வம் அடைந்து இருக்க அவர்கள் நல்லவர் ஆவாராம். ஆனால் இவர்களே அசுபராகி அவ்வாறு இருக்க - அவ்வீட்டு பலன் சுமார் தாம்.

எப்போதும் தனாதிபதியும் விரயாதிபதியும் விரயம், லக்கினம, தனத்தில் கூடவோ அல்லது பரிவர்த்தனை அடையவோ கூடாது.

அதுபோல எப்போதும் இலாபாதியும் விரயாதிபதியும் இலாபம் மற்றும் விரயத்தில் கூடவோ அல்லது லக்கினத்தில் நிற்கவோ கூடாது. அவ்விருவரும் பரிவர்த்தனையும் அடைதல் கூடாது.

அதுபோலவே பாக்கியாதியும் எட்டாமாதியுமாம்.

மீண்டும் அடுத்த பகுதியில் காண்போம்.

அன்பன்
அ .வீ. மாரிமுத்து
02 - 08 - 2016


18. லக்கினமும் சுப அசுபர்களும்

பொதுவாக சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது ஆகியோரை அசுபர் என்றும், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோரை சுபர் என்றும் சொல்வதுண்டு. ஆனால் முற்றும் உணர்ந்த ஜோதிடர் தேய்பிறை சந்திரனையும் அசுபர் என்றே கருதுவர். அதுபோல சுபருடன் சேர்ந்த புதனை சுபர் என்றும், அசுபருடன் சேர்ந்த புதனை அசுபர் என்றும் குறிப்பிடுவர்.

சுபர்களில் கூட குருவை முழு சுபர் என்றும், சுக்கிரனை முக்கால் சுபர் என்றும், புதனை அரை சுபர் என்றும் அழைப்பதுண்டு.

சந்திரன் வளர்பிறையிலும், சுபருடன் கூடிய நிலையிலும் முற்றிலும் சுபர் ஆகின்றார். அவரே தேய் பிறையிலும், அசுபருடன் கூடிய நிலையிலும் அசுபர் ஆகின்றார்.

ஆனால் இவ்விதிகளை ஒவ்வொரு லக்கினமும் அப்படியே ஏற்று கொள்வதில்லை. அவற்றுக்கு காரணத்தையும் விதிகளாக்கி ஜோதிட வல்லுனர்கள் நமக்கு தந்துள்ளார்கள்.

லக்கினாதிபதியே சூரியன் அல்லது சந்திரன் ஆனால் அவர்கள் நல்லவராம்.
இவ்விதி கடகம் மற்றும் சிம்மத்துக்கு பொருந்தும்.

லக்கினாதிபதியே எட்டாமாதியும் ஆனால் அவர் பூரண சுபர் ஆவாராம். இவ்விதி மேஷத்துக்கும் துலாத்துக்கும் மட்டுமே பொருந்தும்லு. ஆனாலும் இவர் எட்டில் அமர்ந்தால் சுமார் பலனையும், லக்கினத்தில் அமர்ந்தால் உயர் பலனையும் தருவர் என்றும் ஒரு சாரார் சொல்வர்.

ஆட்சி பெற்ற கிரகம் தனித்தால் அவர் அவ்வீட்டின் கார பலனை உயர்த்தியும், காரக பலனை தாழ்த்தியும் விடுவார் என்பது இன்னொரு சாரார் சொல்லும் விதியாகும்.

ஒரு கிரகம் தன்னுடன் இன்னொரு கிரகம் இல்லாமலும் அல்லது இன்னொரு கிரகத்தால் பார்க்கப் படாமலும் இருத்தலை தனித்துள்ளது என்று குறிப்பர்.

மகர லக்கினம் என்று கொண்டு நான்கில் செவ்வாய் ஆட்சி பெற்று தனித்து நிற்க - இவர் நான்காமாதி ஆகி நான்கில் அமர்ந்துள்ளதால் - இதனை கார பலன் என்பர் - நீண்ட ஆயுளுடைய அன்னை இருப்பாள் எனலாம். நான்கில் பூமி காரகராம் செவ்வாய் இருப்பதால் - இதனை காரக பலன் என்பர் - இந்த ஜாதகருக்கு நிலபுலம் இல்லாது போகும் என்றும், அப்படியே பூர்வீக நிலபுலம் இருப்பினும் அவற்றை அனுபவிக்க இயலாது போகும் என்றும் - அல்லது அப்பூமியை விற்று தொலைப்பான் என்றும் சொல்லலாம்.

நான்கில் செவ்வாய் உள்ளதால் - அவர் அசுபர் ஆவதால் - அன்னை நீண்ட ஆயுள் கொண்டவள் ஆயினும் - ஜாதகனை வெறுப்பாள் அல்லது பிரிந்திருப்பாள் எனலாம்.

லக்கினாதிபதியே ஆறாமாதியானால் அவரை அசுபர் என்றே கொள்ள வேண்டும். என்றாலும் இவர் கேந்திர கோணத்தில் சுபத்வம் அடைந்து, சுபரால் மட்டும் பார்க்கப்பட, இவரை சுபர் என்று கொள்ளலாம். இவர் ஆறு, எட்டு, பன்னிரண்டில் நட்பு ஆட்சி, உச்சமாகி சுபர் பார்வை அடைய - கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் இராஜ யோகம் என்னும் விதியின்படி - விபரீத இராஜ யோகத்தையும் செய்ய தயாராகி விடுவார். ஆனால் மறைவிடத்தில் உள்ள இந்த லக்கினாதிபதி, எக்காரணம் கொண்டும் அசுபத்வம் அடைந்தும் பாவியின் சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற கூடாது. அது அவ்வாறாயின் அவர் முழு பாவி ஆவது நிச்சயம்.

லக்கினாதிபதியே நான்காம் அதிபதியானால் அவர் கேந்திர தோஷமும் அடைவதால், அது நல்லது அல்ல. ஒருவேளை இவர் லக்கினம், கோணம், தன இலாபத்தில் வலுவாய் இருக்க அவரை சுபர் எனலாம். நான்கு ஏழு பத்தில் இவர் இருப்பது கேந்திர தோஷத்தை கொடுக்கும்.

இவ்வித அமைப்பு மிதுனம் மற்றும் தனுசு ஆகிய லக்கினங்களுக்கே பொருந்தும். மிதுனம் லக்கினமாகி புதன் அசுபருடன் கூடினால் அவர் லக்கினத்தில் அமர்தல் கூடாதாம். மாறாக அவர் நான்கு, ஏழு, பத்தில் அமரலாம். அவர் நன்மையே செய்வாராம். அசுபருடன் சேர்ந்த புதன் அசுபர் ஆவதால், அவர் நான்கு, ஏழு, பத்தில் அமர்தல் நல்லதையே செய்யும். ஆனால் அவர் லக்கினத்தில் அமர்வது தீமையை மட்டும் செய்யும்.

இந்த புதன் நல்லவரோ அல்லது கெட்டவரோ கோணத்தில் சுபத்வம் அடைந்து சுபரால் பார்க்கப்பட்டிருக்க உயர் பலனை செய்வாராம்.

லக்கினாதிபதியே பத்தாமாதியும் ஆனால் அவர் கோணம்,, லக்கினம், தன, இலாபத்தில் சிறக்க சுபர் பார்வை அல்லது சேர்க்கையுடன் இருக்கலாம். எக்காரணம் கொண்டும் நான்கு, ஏழு, பத்து மற்றும் மறைவிடங்களில் அசுபத்வம் அடைந்து நிற்றல் கூடாது.

கன்னி மற்றும் மீனம் ஆகிய லக்கினங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

ஆனால் கன்னி லக்கினத்துக்கு மட்டும் அசுபருடன் சேர்ந்த புதன் லக்கினம் தவிர்த்த மற்றைய கேந்திரங்களில் சுபர் பார்வையுடன் நிற்கலாம். சுபருடன் சேர்ந்த புதன் லக்கினத்தில் மட்டும் அமரலாம். ஆனால் கோணத்தில் - நல்லவரோ அல்லது கெட்டவரோ - புதன் அமர்ந்து வலுவும் சுபத்வமும் அடைய உயர் பலனாம்.

லக்கினாதிபதியே இரண்டாம் அதிபதியானால் அவர் சுபரும் மாரகரும் ஆகின்றார். இது மகர லக்கினத்துக்கு மட்டுமே பொருந்தும்
.
இந்த லக்கினாதிபதி கேந்திரம், கோணம், தனம், இலாபத்தில் நட்பு, ஆட்சி, உச்சம் அடைந்து இருப்பது நல்லதாம். இவர் மற்ற மாரக பாவங்களில் அசுபத்வமும், அசுபர்களின் சம்பந்தமும் பெற்று நிற்பது தீயதாம். இவர் மறைவிடங்களில் அசுபத்வம் அடைவது தீதாம்.

லக்கினாதிபதியே பன்னிரண்டாம் அதிபதி ஆனால், அவரை சுபர் என்றே கொள்ள வேண்டும். இது கும்ப லக்கினத்துக்கு மட்டுமே பொருந்தும். இவர் கேந்திர, கோணத்தில் சுபத்வம் மற்றும் சுபர் சகிதம் இருக்க, உயர் பலனை நல்குவர். மறைவிடத்தில் அசுபத்வம் அடைவது தீதாம்.

இனி இரண்டாம் அதிபதி நல்லவரா அல்லது கெட்டவரா என அடுத்த பகுதியில் காண்போம்.

அன்பன்

அ .வீ. மாரிமுத்து   01 -08 -2016

Sunday, July 31, 2016

16. மறைவிடங்களும் தன இலாப மூன்றாமிடங்களும் 

3, 6, 8, 12 ஆமிடங்களை பொதுவாக மறைவிடங்கள் என்பர். இவற்றுள் 6, 8, 12 ஆமிடங்களை முழுதும் கொடிய பாவம் என்பர்.

ஆனால் மூன்றாமிடத்தை பாதி சுப பாவம் என்பர். அதாவது பாதி அசுப பாவமும் ஆகும். இந்த மூன்றாமிடம் சுபரது பாவமாகிய கடகம், மிதுனம், கன்னி, துலாம், ரிஷபம், தனுசு, மீனம் ஆனால், அவை முழு சுப பாவம் ஆகும். இந்த பாவங்களை சுபர்  மட்டும்பார்க்க அல்லது அதில் இருக்க அந்த மூன்றாமிடம் பூரண சுப பாவம் ஆகி விடும்.  இவற்றை அசுபர் மட்டும் பார்க்க அல்லது அதில் இருக்க அந்த மூன்றாமிடம் ஓரளவே நல்ல பாவம் ஆகும்.

இதே மூன்றாமிடம் அசுபரது பாவமாகிட, அவை அசுப பாவம் ஆகிவிடும். இவற்றை அசுபர் மட்டும் பார்க்க அல்லது அங்கிருக்க, அவை முற்றிலும் கொடிய பாவம் ஆகி விடும். இந்த அசுப மூன்றாமிடத்தை சுபர் மட்டும் பார்க்க ஓரளவு நல்ல பாவமாக மாறும்.

இரண்டாம் இடத்தை தன பாவம் என்றும், பதினோராம் இடத்தை இலாப பாவம் என்றும் சொல்வர். இவற்றை நல்ல பாவம் அல்லது அசுப பாவம் என்று சொல்வதற்கு முன்னர், வேறொரு விஷயத்தை இங்கு சொல்லியாக வேண்டும்.
இராசிகளில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவற்றை சர பாவம் என்பர். சரம் என்றால் எப்போதும் இயங்கி கொண்டிருப்பது என்று பொருள். அதாவது சர லக்கினத்தில் பிறந்தவர்கள் எப்போதும் உழைத்து கொண்டே இருப்பர். இவர்கள் ஓய்வெடுத்து பழக்கப் பட்டவர்கள் அல்ல. இவர்கள் பொதுவாக பிறந்த ஊரில் இருக்க மாட்டார்கள். திருமணத்துக்கு பின்னர் அல்லது வேலை வந்த பிறகு வேறொரு ஊருக்கு போய் அங்கேயே தங்கி விடுவர்.

சர இராசியில் பிறந்தவர்களோ, இன்று ஒன்றை பேசி, நாளை ஒன்றை பேசும் நிலையற்றவராய் இருப்பார். இப்படிப்பட்ட சர இராசி அல்லது லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 2 ஆமிடம், 7 ஆமிடம், 11 மிடம் ஆகியவை மாரக பாவங்கள் ஆகும். அதாவது ஜாதகனுக்கு மரணத்தை செய்யும் இடங்களாகும். இந்த இடங்களில் நின்ற அசுபர்களோ அல்லது இந்த இடத்து அதிபதிகளோ ஜாதகருக்கு அவரவரது திசை, புத்திகளில் மரணத்தை தருவாராம்.  அதாவது அவர்களுள் எவர் அதிகம் அசுபரோ அவர் தம் திசையில் நிச்சயம் பூரண ஆயுள உள்ளவருக்கு மரணத்தை தருவார். குறை ஆயுள் உள்ளவருக்கு முதலில் வரும் மாரகரது திசையில் நிச்சயம் மரணம் ஏற்படும்.

ரிஷபம், சிம்மம், விருட்சிகம், கும்பம் ஆகிய இராசிகளை ஸ்திர பாவம் என்பர். இப்படிப்பட்ட லக்கினங்களில் பிறந்தவர்கள் நிலையான மனமும், நிலையான கொள்கையும் உடையவர்கள். பொதுவாக பிறந்தது முதல் இறக்கும் வரை ஒரே ஊரில் இருக்கும் தன்மை கொண்டவர்கள். இந்த லக்கினம் அல்லது இராசியில் பிறந்தவர்களுக்கு 3, 8, 9 ஆகிய இடங்கள் மாரக பாவங்களாகி விடும். இந்த பாவங்களில் உள்ள அசுபரும், அந்த பாவங்களுக்கு அதிபர்களும் ஜாதகருக்கு மரணம் அல்லது தீய பலனை செய்யும் அதிகாரிகளாம்.

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய பாவங்களாம். இவை ஒரே இடத்தில் இருந்தும் - ஆனால் சுழன்ற வண்ணம் இருக்கும் இராசிகளாம். கொஞ்சம் உங்கள் மனக்குதிரையை கொண்டு, அந்த காலத்து செக்கையும் அல்லது இந்த காலத்து மணிமுள், நிமிட முள் உள்ள சுவர் கடிகாரத்தையும் எண்ணி பாருங்கள். அவையே உபய லக்கினத்திற்கு சரியான உதாரணம் ஆகும்.

இவற்றை லக்கினமாகவோ அல்லது இராசியாகவோ கொண்டவர்கள் கிணற்று தவளையாக இருப்பர். வெளியூரில் வேலை செய்தாலும் பொழுது போவதற்குள் வீட்டை எட்டி பார்த்து விடுவார்கள். இவர்கள் பாசமும் பந்தமும் மிக்கவர்கள். ஆனால் சுய நலமும் மிக்கவர்கள். கடின உழைப்பாளிகள்.

இந்த பாவங்களை லக்கினமாகவோ அல்லது இராசியாகவோ கொண்டவருக்கு 7, 11 ஆகிய இடங்கள் மாரக பாவங்களாம். இவ்விடத்தில் நின்ற அசுபர்களும் அல்லது அவ்விடத்து அதிபதிகளும் ஜாதகனுக்கு மரணம் அல்லது தீய பலனை செய்வாராம்.

சரத்தில் உதித்தோர்க்கு தனமேழு இலாபம் ஆகா என்பதையும், ஸ்திரத்தில் உதித்தோருக்கு மூன்றெட்டு நவம் ஆகா என்பதையும், உபயத்தில் உதித்தார்க்கு ஏழும் இலாபமும் ஆகா என்பதையும் மறவாமல் நினைவில் கொள்க.

இபோது பன்னிரண்டாம் பாவம் மட்டுமே நல்ல பாவமா அல்லது கெட்ட பாவமா என்பது நம் முன் முடிவு செய்யப்படாமல் உள்ளது. இதுவும் பாதி சுபம் மிக்கதும், பாதி அசுபம் மிக்கதுமான பாவமாம். இது சுபரது இராசியானால் சுப பாவமென்றும், அசுபரது பாவமானால் அசுப பாவமென்றும் கொள்வோரும் உண்டு.

ஒரு லக்கினம் அல்லது இராசிக்கு (இராசி என்றால் இனி சந்திரன் அமைந்த இடம் என கொள்க) எந்த கிரகம் சுபர், எந்த கிரகம் அசுபர், எந்த கிரகம் மாரகர் என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.

அன்பன்
அ . வீ . மாரிமுத்து     31 -07 -2016


Saturday, July 30, 2016

வாலாய் இருந்தாலும் சாதிக்கும் அது அனுமனது ஆனால்

15. கேந்திரம், கோணம் போன்றவை

ஒரு ஜாதகத்தில் லக்கினம் கிழக்கையும், பத்தாமிடம் தெற்கையும், ஏழாமிடம் மேற்கையும், நான்காமிடம் வடக்கையும் குறிக்கும் இடங்களாகும். இதனை கேந்திர பாவங்கள் என்று சொல்வர். இதனை விஷ்ணு பாவம் என்றும் குறிப்பிடுவர்.

இந்த விஷ்ணு அசுரர்களை அழிப்பதுவும் உண்டு. நம்பியவர்களையும் தேவர்களையும் காப்பதுவும் உண்டு. ஆக இந்த பாவங்கள் சுபத்வம் அடைந்து இருந்தால், உயரிய நல்ல பலன்களை தரும். அசுபத்வம் அடைந்தால தீமையும் செய்யும்.
அதனை பின்னர் பார்க்கலாம்.

1, 5, 9 ஆகிய இடங்கள் ஒன்றுக்கொன்று 120 பாகையில் அமைந்த பாவங்களாகும். இவை புண்ணிய பாவங்களாகும். இவற்றை லட்சுமீ பாவம் என்பர்.

இவை சுப பாவங்களாகவும், சுபர் அமையப் பெற்றோ அல்லது சுபர் மட்டும் பார்த்திருந்தோ அமைய, உயர் பலன் மட்டுமே நடக்கும்.

அசுபர் இவ்வீடுகளில் அமர்ந்தாலும், அக்கிரகம் வலுவடையும் என்பர்.
ஆனால் அசுபர் மட்டும்அ அங்கு அமர, ஜாதகனின் குணங்களில் அல்லது பொருளாதார நிலையில் தொய்வு உண்டாகும் எனலாம்.

லக்கினத்துக்கு 6, 8, 12 ஆகிய இடங்கள் முற்றிலும் அசுப பாவங்களாம். இந்த பாவங்களுள் எது அசுபரது (சூரியன், செவ்வாய், சனியின்வீடுகள்) பாவங்களாய் உள்ளதோ  அது வெகு மோசமான அசுப பாவம் ஆகின்றது.  இந்த 6, 8, 12 மாதிகளும் அசுபராம். அதிலும் அசுப கிரகமாகிட இன்னும் அதிக அசுபராய் விளங்குவர்.

அதுபோலவே, பொதுவாக கேந்திராதிபதிகள் நல்லவர்கள் தாம்!
ஆனால் எல்லா கேந்திராதிபதிகளும் நல்லவர் அல்ல. அசுபராகிய சூரியன், செவ்வாய், சனி, ஆகியோர் கேந்திராதிகள் ஆனால், அவர்கள் நல்லவர்களே. என்றாலும் இவர்கள் நின்ற இடம் கொஞ்சம் பாதிப்பை அடையலாம்.

வெள்ளை ஆடையில் பட்ட ஒரு துளி அழுக்கு பெரிதாக தெரிவது போல், சுபர்களாகிய சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் கேந்திர தோஷம் அடைகிறார்கள் எனலாம்.

சந்திரனும், சுக்கிரனும் நான்கில் தனித்து இருந்தால் அது அவர்களுக்கு திக் வலிமை மிகுந்துள்ளது என்று பொருள். இதுவல்லாமல் ஏழு, பத்தில் அவர்கள் இருக்க தனிக்க, அவர்கள் வலுவற்றவராய் போகின்றார்கள். அதிலும் பத்தாமிடத்திலோ அவர்கள் மிகவும் பலம் இழந்து போகின்றார்கள்.
ஆனால் இவர்கள் இலக்கின கேந்திரத்தில் நின்றால், ஆட்சியாவதால் இவர்களுக்கு ஏற்படும் கூடல் அல்லது பார்வையின்படி, இவர்கள் உயர் சுபராய் அல்லது அசுபராய் ஆவராம்.

சந்திரனோ அல்லது சுக்கிரனோ நான்காம் அதிபதியானால் அவர்கள் பூரண சுபர் ஆகின்றனர். இதில் சுக்கிரன் நான்காம் அதிபதியாகி அவரது இன்னொரு வீடு ஒன்பதாம் வீடு ஆனால், அவர் பூரண சுபராயும் - பதினோறாமிடமானால் அவர் பாவியாயும் ஆகின்றார் எனலாம்.
இது ஏன் என்பதை இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
குருவும், புதனும் ஒன்றில் தனிக்க, அவர்கள் பூரண திக் வலு அடைந்து, உயர் பலனை அளிப்பராம். மேலும் அவ்வீட்டில் அவர்கள் நட்பு, ஆட்சி, உச்சம், நீச்ச பங்கம் ஆனால், இதனை உறுதியாய் சொல்லலாம்.  மாறாக பகை நீச்சம் ஆனால் சுமார் பலனை மட்டுமே தருவராம்.

குருவும் புதனும் நான்கு, ஏழு, பத்தில் தனித்து நிற்க, அவர்கள் நன்மை செய்யாராம். அதிலும் பகை, நீச்சமானால் நிச்சயம் தீமையே செய்வாராம்.
குருவோ அல்லது புதனோ லக்கினாதிபதி அல்லாத ஏழாமாதி அல்லது பத்தாமாதி ஆனால் அவர்கள் நிச்சயம் அசுபராம்.
அதிலும் அவர்கள் அசுபர் பாவத்தில் அசுபர்களுடன் சேர்ந்தோ அல்லது பார்வை பெற்றோ இருக்க நிச்சயம் மோசமான பலனை மட்டுமே செய்வாராம்.

அடுத்த பகுதியில் இன்னும் இதனை சிறப்பாக அறிந்து கொள்ளலாம்.

அன்பன்
அ.வீ.மாரிமுத்து
30 - 07 - 2016

Friday, July 29, 2016

அரிது அரிது மனிதராய் பிறப்பது
எளிது எளிது இனிதாய் வாழ்வது
பெரிது பெரிது பேர்பெற சிறப்பது
இனிது இனிது இவ்வுல வாழ்வது!

14. லக்கினத்தில் எந்த இடம்?
பசு பால் தரும் தான்! ஆனால் அதற்கு உரிய இடம் அதன் மடியே! ஸ்ரீ ராமன் கடகத்தில் பிறந்தவர் தான்! ஆனால் கடகத்தில் பிறந்தவர் எல்லாம் ஸ்ரீ ராமன் ஆவதில்லை.
ஆக எல்லா லக்கினங்களும் நல்ல லக்கினங்கள் தான் என்று சொல்லி விட இயலாது. ஒரே லக்கினத்தில் பிறந்த உத்தமரும் உண்டு, கயவரும் உண்டு. இதனை விரிவாக சொல்வதற்கு பல விதிகளை நான் சொல்ல வேண்டி உள்ளது.
லக்கினம் மீனம் என்று கொள்வோம்,. அந்த மீனத்தின் ஐந்து பாகையில் லக்கினம் அமைந்துள்ளது என்றால் - அந்த மீனத்தின் ஐந்து பாகையை லக்கினத்தின் துவக்கம் எனலாம்.
அதாவது மீன ராசியின் ஐந்து பாகையில் தான் லக்கினம் துவங்குகின்றது என்று பொருள்.
சூரியன் தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக 15 பாகை அளவு பார்க்கும் திறன் கொண்ட கிரகம் ஆகும்.
சந்திரனோ தான் நின்ற இடத்தில் இருந்து முன்பினாக 12 பாகை தூரம் வரை பார்க்கும் வலிமை உடையது ஆகும்.
குருவும் சநீஸ்வரரும் தாம் நின்ற இடத்தில் இருந்து முன்பின்னாக  9 பாகை அளவுக்கு பார்க்க சக்தி உடையவர்களாம்.
செவ்வாய் தான் நின்ற இடத்தில் இருந்து, முன்பின்னாக 8 பாகை அளவுக்கு பார்க்கும் திறன் படைத்தவர் ஆவார்.
மற்ற கிரகங்களான இராகு, கேது, புதன், சுக்கிரன் ஆகியோர் தாம் நின்ற இடத்தில் இருந்து முன்பின்னாக 7 பாகை தூரத்துக்கு மட்டும் பார்ப்பவர்களாக இருப்பர்.
இப்போது மீன லக்கினம் 5 பாகையில் இருந்து, சூரியன் 22 பாகையில் இருந்தால், சூரியன் லக்கினத்தில் இருந்த போதிலும் - அவரது பார்வை வீச்சால் லக்கினம் நின்ற பாகையை பார்க்க இயலாததால், சூரியன் லக்கினத்தை பார்க்கவில்லை என்றாகின்றது.
அதாவது சூரியன் ஒன்மிறாடத்தில் உள்ளார். ஆனால் சூரியன் லக்கினத்தை பார்க்கவில்லை என்று பொருள்!
ஆனால், மீனத்தின்  9 பாகையில் சுக்கிரன் உச்சமாய் நின்றால், அவரது பார்வை வீச்சான 7 பாகையின்படி அவர் லக்கினத்தை பின் பார்வை திறனால் பார்த்து விடுவதால், அவர் ஒன்மிறாடத்திலும் நிற்கிறார் ;மற்றும் லக்கினத்தையும் பார்க்கிறார் என்றாகின்றது.
ஆக மீன லக்கினமாகி அங்கு விலகிய நிலையில் சூரியன் நின்றும், அருகில் சுக்கிரன் நின்றும் உள்ளதால், லக்கினத்தை சுக்கிரனே அதிக அதிகாரத்துடன் நடத்துவார் எனலாம்.
அதாவது, சுகம், சுகபோகம், பெண்களால் நன்மை அடைவது, நில, புல வாகன வசதிகள் அடைவது, ஆடை அணிகன்களை அதிகம் பெறுவது போன்ற நற்பலனை ஜாதகன் அடைவான்.
லக்கினத்தில் சூரியன் நட்பாய் உள்ளதால் அதிகாரம் தூள் பறக்கும் என்றாலும் வளைந்து கொடுக்கும் வேலையில் மற்றவரை அனுசரித்து செல்லும் குணமும் இல்லாது போகாது. சூரியனின் குணமும் இருக்கும். ஆனால் சுக்கிரனின் பலனோ சூரியனின் பலனை விட விகசித்து உயர்ந்து நிற்கும்.
ஒரு அரசன் வீரர்கள் புடை சூழ அரச மாளிகையில் இருப்பதற்கும், அதே அரசன் யாரும் இல்லாது ஒரு காட்டில் தனித்து நிற்பதற்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பு நோக்குங்கள். அல்லது ஒரு அரசன் ஒரு சக்கரவர்த்தியின் அருகில் இருப்பதற்கு உள்ள ஒப்புமையை உற்று நோக்கி உணர்ந்து பாருங்கள்.
மேலே சொன்ன உதாரணம் நன்கு புரியும்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
அன்பன்
அ.வீ.மாரிமுத்து
30 -07 - 2016

யார் வள்ளல்
நான் மகாபாரதம் படித்துள்ளேன். ஆனால் இந்த மாதிரி கதைகளை நான் மூலத்தில் கண்டதில்லை. ஏதோ ஒரு ஊரில் ஒரு கோயிலில் ஒருவர் இக்கதையை சொன்னதாக ஞாபகம்.
அர்ஜுனன் கண்ணனை பார்த்து கேட்டான். "கண்ணா! பாண்டவர்களில் யார் சிறந்த பக்தன்" என்று!
எல்லோருமே தான் என்று கண்ணன் சொன்னான். இப்பதிலில் திருப்தியுறாத அர்ஜுனன் இன்னும் கேட்டான். பாண்டவர்களுள் எவர் அதி சிறந்த பக்திமான் என்றான்.
கண்ணனுக்கு புரிந்து விட்டது. இந்த அர்ஜுனன் எப்போதும் தன கூட இருப்பதால் அர்ஜுனனே சிறந்த பக்தன் என்று கண்ணன் தன் வாய்பட  சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் என்று!
ஆனால் உண்மையை சொல்லியாக வேண்டும் என்ற உந்தம் காரணமாக அர்ஜுனனிடம், பாண்டவர்களுள் சிறந்த பக்தன் என்று பார்த்தால் தருமன் தானென்றான். ஆனாலும் அவன் எப்போதும் தர்ம வழி நடப்பதால் அவனை, பக்தி மார்க்கத்தில் சேர்க்க இயலாது என்ற கண்ணன் - நகுலனும் சகாதேவனும் ஜோதிடத் தொழில் மற்றும் பிராணிகள் வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவதால் - அவர்களையும் முழு நேர பக்தி மார்க்கத்தில் சேர்க்க இயலாது என்றான். அவ்விருவரும் கர்ம மார்க்கத்தில் சிறப்பு பெற்றவர்கள் என்றான்.
மீதியுள்ள வீமனும், அர்ஜுனனும் மட்டுமே இந்த பக்தி மார்க்கத்தினுள் வருகின்றார்கள். அவர்களுள் வீமனே சிறந்த பக்தன் என்றான் கண்ணன். அர்ஜுனனுக்கு கோபமே வந்து விட்டது.
இதை நீ நிரூபிக்க வேண்டும் கண்ணா என்றான் அர்ஜுனன். அவ்வாறே என்று ஒத்து கொண்ட கண்ணன், மறு நாள் காலையில் தன்னை வந்து காணும்படி பணித்தான்.
அன்றிரவு அர்ஜுனன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து இருந்ததால்  சரியாக உறங்கினானில்லை.
அதிகாலை நான்கு மணிக்கு வீமன் எழுந்து கொல்லைக்கு சென்று சிறு நீர் கழித்து விட்டு வரும் வழியில், நிறைய பூக்கள் நிறைய செடிகளில் பூத்து இருப்பதை பார்த்து உள்ளம் குதூகலிக்க, அம்மலர்கள் யாவும் கண்ணனின் திருமேனிக்கு செல்லட்டும் என்று உளமார வேண்டிக் கொண்டு, மீண்டும் உள் சென்று படுத்து தூங்கியே போனான்.
அன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்த அர்ஜுனன், காலை கடன்களை முடித்து பொழுது புலர்வதற்குள் பூங்காவில் உள்ள மலர்கள் அனைத்தையும் பறித்து, பெரிய மாலையாக கட்டி, காலை ஆறு மணிக்கெல்லாம் கண்ணனை காண சென்றான்.
என்ன ஆச்சரியம்! தன் கையில் வைத்துள்ள அதே மலர் மாலை போலவே,  கண்ணனின் மார்பில் இன்னொரு மாலை கிடக்க அர்ஜுனன் கண்டான்.
கிருஷ்ணன் சிரித்தான். "அர்ஜுனா! உனக்கு முன்பே உனது அண்ணன் வீமன் மனதால் இம்மாலையை எனக்கு அளித்து விட்டான்" என்றார்.
அப்போது தான் அர்ஜுனனுக்கு புரிந்தது. அவரவரது கடமையே அவரவருக்கு முக்கியமாகும் என்று! எவனொருவன் தன் சொந்த முயற்சியிலும், உழைப்பிலும் நம்பிக்கை வைத்து, தன கடமையை ஒழுங்காக செய்கின்றானோ, அவனே கடவுளின் அருகில் நிற்கும் அருகதை உள்ளவன் என்று! எப்போதும் கண்ணை மூடி தவம் செய்பவருக்கு, இதுவரை ஆண்டவன் பல காலம் கழித்தே தரிசனம் தந்து இருகிகின்றான்.
ஆனால் வீமனை போன்ற முயற்சியும், நம்பிக்கையும் கொண்டவர்களுக்கோ  அவர்களது சிறு பக்தி கூட, கடவுளை அவர்கள் பக்கம் கொண்டு செலுத்திடும் வலிமை உள்ளது என்பதை கண்ணனின் மந்தகாச சிரிப்பு அர்ஜுனனுக்கு புரிந்தது.
அன்புடன்
அ.வீ.மாரிமுத்து
29- 07- 2016