Sunday, July 31, 2016

16. மறைவிடங்களும் தன இலாப மூன்றாமிடங்களும் 

3, 6, 8, 12 ஆமிடங்களை பொதுவாக மறைவிடங்கள் என்பர். இவற்றுள் 6, 8, 12 ஆமிடங்களை முழுதும் கொடிய பாவம் என்பர்.

ஆனால் மூன்றாமிடத்தை பாதி சுப பாவம் என்பர். அதாவது பாதி அசுப பாவமும் ஆகும். இந்த மூன்றாமிடம் சுபரது பாவமாகிய கடகம், மிதுனம், கன்னி, துலாம், ரிஷபம், தனுசு, மீனம் ஆனால், அவை முழு சுப பாவம் ஆகும். இந்த பாவங்களை சுபர்  மட்டும்பார்க்க அல்லது அதில் இருக்க அந்த மூன்றாமிடம் பூரண சுப பாவம் ஆகி விடும்.  இவற்றை அசுபர் மட்டும் பார்க்க அல்லது அதில் இருக்க அந்த மூன்றாமிடம் ஓரளவே நல்ல பாவம் ஆகும்.

இதே மூன்றாமிடம் அசுபரது பாவமாகிட, அவை அசுப பாவம் ஆகிவிடும். இவற்றை அசுபர் மட்டும் பார்க்க அல்லது அங்கிருக்க, அவை முற்றிலும் கொடிய பாவம் ஆகி விடும். இந்த அசுப மூன்றாமிடத்தை சுபர் மட்டும் பார்க்க ஓரளவு நல்ல பாவமாக மாறும்.

இரண்டாம் இடத்தை தன பாவம் என்றும், பதினோராம் இடத்தை இலாப பாவம் என்றும் சொல்வர். இவற்றை நல்ல பாவம் அல்லது அசுப பாவம் என்று சொல்வதற்கு முன்னர், வேறொரு விஷயத்தை இங்கு சொல்லியாக வேண்டும்.
இராசிகளில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவற்றை சர பாவம் என்பர். சரம் என்றால் எப்போதும் இயங்கி கொண்டிருப்பது என்று பொருள். அதாவது சர லக்கினத்தில் பிறந்தவர்கள் எப்போதும் உழைத்து கொண்டே இருப்பர். இவர்கள் ஓய்வெடுத்து பழக்கப் பட்டவர்கள் அல்ல. இவர்கள் பொதுவாக பிறந்த ஊரில் இருக்க மாட்டார்கள். திருமணத்துக்கு பின்னர் அல்லது வேலை வந்த பிறகு வேறொரு ஊருக்கு போய் அங்கேயே தங்கி விடுவர்.

சர இராசியில் பிறந்தவர்களோ, இன்று ஒன்றை பேசி, நாளை ஒன்றை பேசும் நிலையற்றவராய் இருப்பார். இப்படிப்பட்ட சர இராசி அல்லது லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 2 ஆமிடம், 7 ஆமிடம், 11 மிடம் ஆகியவை மாரக பாவங்கள் ஆகும். அதாவது ஜாதகனுக்கு மரணத்தை செய்யும் இடங்களாகும். இந்த இடங்களில் நின்ற அசுபர்களோ அல்லது இந்த இடத்து அதிபதிகளோ ஜாதகருக்கு அவரவரது திசை, புத்திகளில் மரணத்தை தருவாராம்.  அதாவது அவர்களுள் எவர் அதிகம் அசுபரோ அவர் தம் திசையில் நிச்சயம் பூரண ஆயுள உள்ளவருக்கு மரணத்தை தருவார். குறை ஆயுள் உள்ளவருக்கு முதலில் வரும் மாரகரது திசையில் நிச்சயம் மரணம் ஏற்படும்.

ரிஷபம், சிம்மம், விருட்சிகம், கும்பம் ஆகிய இராசிகளை ஸ்திர பாவம் என்பர். இப்படிப்பட்ட லக்கினங்களில் பிறந்தவர்கள் நிலையான மனமும், நிலையான கொள்கையும் உடையவர்கள். பொதுவாக பிறந்தது முதல் இறக்கும் வரை ஒரே ஊரில் இருக்கும் தன்மை கொண்டவர்கள். இந்த லக்கினம் அல்லது இராசியில் பிறந்தவர்களுக்கு 3, 8, 9 ஆகிய இடங்கள் மாரக பாவங்களாகி விடும். இந்த பாவங்களில் உள்ள அசுபரும், அந்த பாவங்களுக்கு அதிபர்களும் ஜாதகருக்கு மரணம் அல்லது தீய பலனை செய்யும் அதிகாரிகளாம்.

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய பாவங்களாம். இவை ஒரே இடத்தில் இருந்தும் - ஆனால் சுழன்ற வண்ணம் இருக்கும் இராசிகளாம். கொஞ்சம் உங்கள் மனக்குதிரையை கொண்டு, அந்த காலத்து செக்கையும் அல்லது இந்த காலத்து மணிமுள், நிமிட முள் உள்ள சுவர் கடிகாரத்தையும் எண்ணி பாருங்கள். அவையே உபய லக்கினத்திற்கு சரியான உதாரணம் ஆகும்.

இவற்றை லக்கினமாகவோ அல்லது இராசியாகவோ கொண்டவர்கள் கிணற்று தவளையாக இருப்பர். வெளியூரில் வேலை செய்தாலும் பொழுது போவதற்குள் வீட்டை எட்டி பார்த்து விடுவார்கள். இவர்கள் பாசமும் பந்தமும் மிக்கவர்கள். ஆனால் சுய நலமும் மிக்கவர்கள். கடின உழைப்பாளிகள்.

இந்த பாவங்களை லக்கினமாகவோ அல்லது இராசியாகவோ கொண்டவருக்கு 7, 11 ஆகிய இடங்கள் மாரக பாவங்களாம். இவ்விடத்தில் நின்ற அசுபர்களும் அல்லது அவ்விடத்து அதிபதிகளும் ஜாதகனுக்கு மரணம் அல்லது தீய பலனை செய்வாராம்.

சரத்தில் உதித்தோர்க்கு தனமேழு இலாபம் ஆகா என்பதையும், ஸ்திரத்தில் உதித்தோருக்கு மூன்றெட்டு நவம் ஆகா என்பதையும், உபயத்தில் உதித்தார்க்கு ஏழும் இலாபமும் ஆகா என்பதையும் மறவாமல் நினைவில் கொள்க.

இபோது பன்னிரண்டாம் பாவம் மட்டுமே நல்ல பாவமா அல்லது கெட்ட பாவமா என்பது நம் முன் முடிவு செய்யப்படாமல் உள்ளது. இதுவும் பாதி சுபம் மிக்கதும், பாதி அசுபம் மிக்கதுமான பாவமாம். இது சுபரது இராசியானால் சுப பாவமென்றும், அசுபரது பாவமானால் அசுப பாவமென்றும் கொள்வோரும் உண்டு.

ஒரு லக்கினம் அல்லது இராசிக்கு (இராசி என்றால் இனி சந்திரன் அமைந்த இடம் என கொள்க) எந்த கிரகம் சுபர், எந்த கிரகம் அசுபர், எந்த கிரகம் மாரகர் என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.

அன்பன்
அ . வீ . மாரிமுத்து     31 -07 -2016


Saturday, July 30, 2016

வாலாய் இருந்தாலும் சாதிக்கும் அது அனுமனது ஆனால்

15. கேந்திரம், கோணம் போன்றவை

ஒரு ஜாதகத்தில் லக்கினம் கிழக்கையும், பத்தாமிடம் தெற்கையும், ஏழாமிடம் மேற்கையும், நான்காமிடம் வடக்கையும் குறிக்கும் இடங்களாகும். இதனை கேந்திர பாவங்கள் என்று சொல்வர். இதனை விஷ்ணு பாவம் என்றும் குறிப்பிடுவர்.

இந்த விஷ்ணு அசுரர்களை அழிப்பதுவும் உண்டு. நம்பியவர்களையும் தேவர்களையும் காப்பதுவும் உண்டு. ஆக இந்த பாவங்கள் சுபத்வம் அடைந்து இருந்தால், உயரிய நல்ல பலன்களை தரும். அசுபத்வம் அடைந்தால தீமையும் செய்யும்.
அதனை பின்னர் பார்க்கலாம்.

1, 5, 9 ஆகிய இடங்கள் ஒன்றுக்கொன்று 120 பாகையில் அமைந்த பாவங்களாகும். இவை புண்ணிய பாவங்களாகும். இவற்றை லட்சுமீ பாவம் என்பர்.

இவை சுப பாவங்களாகவும், சுபர் அமையப் பெற்றோ அல்லது சுபர் மட்டும் பார்த்திருந்தோ அமைய, உயர் பலன் மட்டுமே நடக்கும்.

அசுபர் இவ்வீடுகளில் அமர்ந்தாலும், அக்கிரகம் வலுவடையும் என்பர்.
ஆனால் அசுபர் மட்டும்அ அங்கு அமர, ஜாதகனின் குணங்களில் அல்லது பொருளாதார நிலையில் தொய்வு உண்டாகும் எனலாம்.

லக்கினத்துக்கு 6, 8, 12 ஆகிய இடங்கள் முற்றிலும் அசுப பாவங்களாம். இந்த பாவங்களுள் எது அசுபரது (சூரியன், செவ்வாய், சனியின்வீடுகள்) பாவங்களாய் உள்ளதோ  அது வெகு மோசமான அசுப பாவம் ஆகின்றது.  இந்த 6, 8, 12 மாதிகளும் அசுபராம். அதிலும் அசுப கிரகமாகிட இன்னும் அதிக அசுபராய் விளங்குவர்.

அதுபோலவே, பொதுவாக கேந்திராதிபதிகள் நல்லவர்கள் தாம்!
ஆனால் எல்லா கேந்திராதிபதிகளும் நல்லவர் அல்ல. அசுபராகிய சூரியன், செவ்வாய், சனி, ஆகியோர் கேந்திராதிகள் ஆனால், அவர்கள் நல்லவர்களே. என்றாலும் இவர்கள் நின்ற இடம் கொஞ்சம் பாதிப்பை அடையலாம்.

வெள்ளை ஆடையில் பட்ட ஒரு துளி அழுக்கு பெரிதாக தெரிவது போல், சுபர்களாகிய சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் கேந்திர தோஷம் அடைகிறார்கள் எனலாம்.

சந்திரனும், சுக்கிரனும் நான்கில் தனித்து இருந்தால் அது அவர்களுக்கு திக் வலிமை மிகுந்துள்ளது என்று பொருள். இதுவல்லாமல் ஏழு, பத்தில் அவர்கள் இருக்க தனிக்க, அவர்கள் வலுவற்றவராய் போகின்றார்கள். அதிலும் பத்தாமிடத்திலோ அவர்கள் மிகவும் பலம் இழந்து போகின்றார்கள்.
ஆனால் இவர்கள் இலக்கின கேந்திரத்தில் நின்றால், ஆட்சியாவதால் இவர்களுக்கு ஏற்படும் கூடல் அல்லது பார்வையின்படி, இவர்கள் உயர் சுபராய் அல்லது அசுபராய் ஆவராம்.

சந்திரனோ அல்லது சுக்கிரனோ நான்காம் அதிபதியானால் அவர்கள் பூரண சுபர் ஆகின்றனர். இதில் சுக்கிரன் நான்காம் அதிபதியாகி அவரது இன்னொரு வீடு ஒன்பதாம் வீடு ஆனால், அவர் பூரண சுபராயும் - பதினோறாமிடமானால் அவர் பாவியாயும் ஆகின்றார் எனலாம்.
இது ஏன் என்பதை இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
குருவும், புதனும் ஒன்றில் தனிக்க, அவர்கள் பூரண திக் வலு அடைந்து, உயர் பலனை அளிப்பராம். மேலும் அவ்வீட்டில் அவர்கள் நட்பு, ஆட்சி, உச்சம், நீச்ச பங்கம் ஆனால், இதனை உறுதியாய் சொல்லலாம்.  மாறாக பகை நீச்சம் ஆனால் சுமார் பலனை மட்டுமே தருவராம்.

குருவும் புதனும் நான்கு, ஏழு, பத்தில் தனித்து நிற்க, அவர்கள் நன்மை செய்யாராம். அதிலும் பகை, நீச்சமானால் நிச்சயம் தீமையே செய்வாராம்.
குருவோ அல்லது புதனோ லக்கினாதிபதி அல்லாத ஏழாமாதி அல்லது பத்தாமாதி ஆனால் அவர்கள் நிச்சயம் அசுபராம்.
அதிலும் அவர்கள் அசுபர் பாவத்தில் அசுபர்களுடன் சேர்ந்தோ அல்லது பார்வை பெற்றோ இருக்க நிச்சயம் மோசமான பலனை மட்டுமே செய்வாராம்.

அடுத்த பகுதியில் இன்னும் இதனை சிறப்பாக அறிந்து கொள்ளலாம்.

அன்பன்
அ.வீ.மாரிமுத்து
30 - 07 - 2016

Friday, July 29, 2016

அரிது அரிது மனிதராய் பிறப்பது
எளிது எளிது இனிதாய் வாழ்வது
பெரிது பெரிது பேர்பெற சிறப்பது
இனிது இனிது இவ்வுல வாழ்வது!

14. லக்கினத்தில் எந்த இடம்?
பசு பால் தரும் தான்! ஆனால் அதற்கு உரிய இடம் அதன் மடியே! ஸ்ரீ ராமன் கடகத்தில் பிறந்தவர் தான்! ஆனால் கடகத்தில் பிறந்தவர் எல்லாம் ஸ்ரீ ராமன் ஆவதில்லை.
ஆக எல்லா லக்கினங்களும் நல்ல லக்கினங்கள் தான் என்று சொல்லி விட இயலாது. ஒரே லக்கினத்தில் பிறந்த உத்தமரும் உண்டு, கயவரும் உண்டு. இதனை விரிவாக சொல்வதற்கு பல விதிகளை நான் சொல்ல வேண்டி உள்ளது.
லக்கினம் மீனம் என்று கொள்வோம்,. அந்த மீனத்தின் ஐந்து பாகையில் லக்கினம் அமைந்துள்ளது என்றால் - அந்த மீனத்தின் ஐந்து பாகையை லக்கினத்தின் துவக்கம் எனலாம்.
அதாவது மீன ராசியின் ஐந்து பாகையில் தான் லக்கினம் துவங்குகின்றது என்று பொருள்.
சூரியன் தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்பின்னாக 15 பாகை அளவு பார்க்கும் திறன் கொண்ட கிரகம் ஆகும்.
சந்திரனோ தான் நின்ற இடத்தில் இருந்து முன்பினாக 12 பாகை தூரம் வரை பார்க்கும் வலிமை உடையது ஆகும்.
குருவும் சநீஸ்வரரும் தாம் நின்ற இடத்தில் இருந்து முன்பின்னாக  9 பாகை அளவுக்கு பார்க்க சக்தி உடையவர்களாம்.
செவ்வாய் தான் நின்ற இடத்தில் இருந்து, முன்பின்னாக 8 பாகை அளவுக்கு பார்க்கும் திறன் படைத்தவர் ஆவார்.
மற்ற கிரகங்களான இராகு, கேது, புதன், சுக்கிரன் ஆகியோர் தாம் நின்ற இடத்தில் இருந்து முன்பின்னாக 7 பாகை தூரத்துக்கு மட்டும் பார்ப்பவர்களாக இருப்பர்.
இப்போது மீன லக்கினம் 5 பாகையில் இருந்து, சூரியன் 22 பாகையில் இருந்தால், சூரியன் லக்கினத்தில் இருந்த போதிலும் - அவரது பார்வை வீச்சால் லக்கினம் நின்ற பாகையை பார்க்க இயலாததால், சூரியன் லக்கினத்தை பார்க்கவில்லை என்றாகின்றது.
அதாவது சூரியன் ஒன்மிறாடத்தில் உள்ளார். ஆனால் சூரியன் லக்கினத்தை பார்க்கவில்லை என்று பொருள்!
ஆனால், மீனத்தின்  9 பாகையில் சுக்கிரன் உச்சமாய் நின்றால், அவரது பார்வை வீச்சான 7 பாகையின்படி அவர் லக்கினத்தை பின் பார்வை திறனால் பார்த்து விடுவதால், அவர் ஒன்மிறாடத்திலும் நிற்கிறார் ;மற்றும் லக்கினத்தையும் பார்க்கிறார் என்றாகின்றது.
ஆக மீன லக்கினமாகி அங்கு விலகிய நிலையில் சூரியன் நின்றும், அருகில் சுக்கிரன் நின்றும் உள்ளதால், லக்கினத்தை சுக்கிரனே அதிக அதிகாரத்துடன் நடத்துவார் எனலாம்.
அதாவது, சுகம், சுகபோகம், பெண்களால் நன்மை அடைவது, நில, புல வாகன வசதிகள் அடைவது, ஆடை அணிகன்களை அதிகம் பெறுவது போன்ற நற்பலனை ஜாதகன் அடைவான்.
லக்கினத்தில் சூரியன் நட்பாய் உள்ளதால் அதிகாரம் தூள் பறக்கும் என்றாலும் வளைந்து கொடுக்கும் வேலையில் மற்றவரை அனுசரித்து செல்லும் குணமும் இல்லாது போகாது. சூரியனின் குணமும் இருக்கும். ஆனால் சுக்கிரனின் பலனோ சூரியனின் பலனை விட விகசித்து உயர்ந்து நிற்கும்.
ஒரு அரசன் வீரர்கள் புடை சூழ அரச மாளிகையில் இருப்பதற்கும், அதே அரசன் யாரும் இல்லாது ஒரு காட்டில் தனித்து நிற்பதற்கும் உள்ள வித்தியாசத்தை ஒப்பு நோக்குங்கள். அல்லது ஒரு அரசன் ஒரு சக்கரவர்த்தியின் அருகில் இருப்பதற்கு உள்ள ஒப்புமையை உற்று நோக்கி உணர்ந்து பாருங்கள்.
மேலே சொன்ன உதாரணம் நன்கு புரியும்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
அன்பன்
அ.வீ.மாரிமுத்து
30 -07 - 2016

யார் வள்ளல்
நான் மகாபாரதம் படித்துள்ளேன். ஆனால் இந்த மாதிரி கதைகளை நான் மூலத்தில் கண்டதில்லை. ஏதோ ஒரு ஊரில் ஒரு கோயிலில் ஒருவர் இக்கதையை சொன்னதாக ஞாபகம்.
அர்ஜுனன் கண்ணனை பார்த்து கேட்டான். "கண்ணா! பாண்டவர்களில் யார் சிறந்த பக்தன்" என்று!
எல்லோருமே தான் என்று கண்ணன் சொன்னான். இப்பதிலில் திருப்தியுறாத அர்ஜுனன் இன்னும் கேட்டான். பாண்டவர்களுள் எவர் அதி சிறந்த பக்திமான் என்றான்.
கண்ணனுக்கு புரிந்து விட்டது. இந்த அர்ஜுனன் எப்போதும் தன கூட இருப்பதால் அர்ஜுனனே சிறந்த பக்தன் என்று கண்ணன் தன் வாய்பட  சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் என்று!
ஆனால் உண்மையை சொல்லியாக வேண்டும் என்ற உந்தம் காரணமாக அர்ஜுனனிடம், பாண்டவர்களுள் சிறந்த பக்தன் என்று பார்த்தால் தருமன் தானென்றான். ஆனாலும் அவன் எப்போதும் தர்ம வழி நடப்பதால் அவனை, பக்தி மார்க்கத்தில் சேர்க்க இயலாது என்ற கண்ணன் - நகுலனும் சகாதேவனும் ஜோதிடத் தொழில் மற்றும் பிராணிகள் வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவதால் - அவர்களையும் முழு நேர பக்தி மார்க்கத்தில் சேர்க்க இயலாது என்றான். அவ்விருவரும் கர்ம மார்க்கத்தில் சிறப்பு பெற்றவர்கள் என்றான்.
மீதியுள்ள வீமனும், அர்ஜுனனும் மட்டுமே இந்த பக்தி மார்க்கத்தினுள் வருகின்றார்கள். அவர்களுள் வீமனே சிறந்த பக்தன் என்றான் கண்ணன். அர்ஜுனனுக்கு கோபமே வந்து விட்டது.
இதை நீ நிரூபிக்க வேண்டும் கண்ணா என்றான் அர்ஜுனன். அவ்வாறே என்று ஒத்து கொண்ட கண்ணன், மறு நாள் காலையில் தன்னை வந்து காணும்படி பணித்தான்.
அன்றிரவு அர்ஜுனன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து இருந்ததால்  சரியாக உறங்கினானில்லை.
அதிகாலை நான்கு மணிக்கு வீமன் எழுந்து கொல்லைக்கு சென்று சிறு நீர் கழித்து விட்டு வரும் வழியில், நிறைய பூக்கள் நிறைய செடிகளில் பூத்து இருப்பதை பார்த்து உள்ளம் குதூகலிக்க, அம்மலர்கள் யாவும் கண்ணனின் திருமேனிக்கு செல்லட்டும் என்று உளமார வேண்டிக் கொண்டு, மீண்டும் உள் சென்று படுத்து தூங்கியே போனான்.
அன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்த அர்ஜுனன், காலை கடன்களை முடித்து பொழுது புலர்வதற்குள் பூங்காவில் உள்ள மலர்கள் அனைத்தையும் பறித்து, பெரிய மாலையாக கட்டி, காலை ஆறு மணிக்கெல்லாம் கண்ணனை காண சென்றான்.
என்ன ஆச்சரியம்! தன் கையில் வைத்துள்ள அதே மலர் மாலை போலவே,  கண்ணனின் மார்பில் இன்னொரு மாலை கிடக்க அர்ஜுனன் கண்டான்.
கிருஷ்ணன் சிரித்தான். "அர்ஜுனா! உனக்கு முன்பே உனது அண்ணன் வீமன் மனதால் இம்மாலையை எனக்கு அளித்து விட்டான்" என்றார்.
அப்போது தான் அர்ஜுனனுக்கு புரிந்தது. அவரவரது கடமையே அவரவருக்கு முக்கியமாகும் என்று! எவனொருவன் தன் சொந்த முயற்சியிலும், உழைப்பிலும் நம்பிக்கை வைத்து, தன கடமையை ஒழுங்காக செய்கின்றானோ, அவனே கடவுளின் அருகில் நிற்கும் அருகதை உள்ளவன் என்று! எப்போதும் கண்ணை மூடி தவம் செய்பவருக்கு, இதுவரை ஆண்டவன் பல காலம் கழித்தே தரிசனம் தந்து இருகிகின்றான்.
ஆனால் வீமனை போன்ற முயற்சியும், நம்பிக்கையும் கொண்டவர்களுக்கோ  அவர்களது சிறு பக்தி கூட, கடவுளை அவர்கள் பக்கம் கொண்டு செலுத்திடும் வலிமை உள்ளது என்பதை கண்ணனின் மந்தகாச சிரிப்பு அர்ஜுனனுக்கு புரிந்தது.
அன்புடன்
அ.வீ.மாரிமுத்து
29- 07- 2016
முத்து சா மீ
நான் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற போது, அங்கு கிருஷ்ணமூர்த்தி என்ற ஆசிரியர் இருந்தார். அவர் ஆங்கில பாடம் நடத்தும் முறையே அலாதியாகும். சிறிதாய் சொல்லி பெரிய விஷயங்களையும் மனதுள் புகுத்தி விடுவார்.
அவர் ஆங்கில இலக்கணம் எடுக்கும் அழகில் ஒரு வித்தையை இங்கே சொல்வதில் எனக்கு அலுப்பு எப்போதும் ஏற்பட்டதில்லை.
Rama ate a mango - ராமன் ஒரு மாம்பழம் சாப்பிட்டான்.
இது நேரிடை வாக்கியம் - அதாவது active voice.
A mango was eaten by Rama - ஒரு மாம்பழம் ராமனால் சாப்பிடப்பட்டது. இது எதிரிடை வாக்கியம் - அதாவது Passive voice.
இவ்வாறு பற்பல உதாரணங்களை சொல்லிய பின்பு - முத்துசாமீ என்றார்.
எங்களைப் பார்த்து - நான் சொன்ன இந்த வார்த்தை என்ன வகை வாக்கியம் (active or passive voice) என்றார்.
முத்துசாமீ என்பது பெயர் சொல் அல்லவா? அது எப்படி நேரிடை அல்லது எதிரிடை வாக்கியம் ஆகும் என்றோம் நாங்கள்.
அவர் சிரித்தபடி கரும்பலகையில் - Muthu saw me - என்று எழுதினார். இப்போது இது என்ன வாக்கியம் என்றார்.
அது நேரிடை வாக்கியம் என்றோம்.
இதற்கு எதிரிடை வாக்கியம் என்ன என்றார். நாங்கள் சொன்னோம்.
நான் அவரை கேட்டேன். இவ்வாறு சொல்கிறீர்களே, இது எவ்வாறு ஐயா என்று வினவினேன்.
நாங்கள் (ஆசிரியர்கள்) உங்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கிறோமே. எதற்காக?
நாங்கள் கற்று கொண்டதை புரிந்து கொண்டோமா என்று சோதிப்பதற்காக!
நாங்கள் சொன்ன பதிலை கேட்ட பின்னர் அவர் சொன்னார்.
அதுபோல் நாங்களும் வீட்டில் Home work செய்வோம். உங்களுக்கு எப்படி எப்படி சொன்னால் எளிதில் புரியும் என்று!
ஆம்! கலைமகளே இன்னும் படித்து கொண்டு தானே இருக்கிறாள்!
எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால் இப்போது புரிகின்றது.
அன்பன்          
அ.வீ.மாரிமுத்து
24 - 07 - 2016   
லக்கினம், இராசி, பாவம்
 
லக்கினம் எப்படி அமைகிறது என்று இதுவரை பார்த்தோம். இந்த லக்கினம் தான் ஒருவரது குணத்தை, நிறத்தை, உயரமாஅல்லது குள்ளமா என்பதை, உயர்வை அல்லது தாழ்வை, அவர் யார் மூலம் பயனுறுவர் அல்லது ஏமாற்றப்படுவார் என்பதை, அவரது வருமானத்தின் தன்மை போன்றவற்றை சொல்லும் இடமாகும்.
லக்கினம் தான் ஜாதகனின் முழு அங்க அடையாளம், குணம், நடத்தை, வருமானம், பக்தி, புகழை சொல்லும்.
லக்கினத்துக்கு அடுத்த இராசியை இரண்டாம் பாவம் என்கிறோம். இது தனம், செல்வம், குடும்பம், குடும்பத்தினர், வாக்கு, கல்வி, பேச்சு, செய்தொழில், வருமானம் போன்றவற்றை சொல்லுமாம்.
ஆக இராசி என்றால் மேஷம், ரிஷபம் என்று இவ்வாறு வருவதை குறிக்கும் என்றும், பாவம் என்றால் ஒருவரது லக்கினத்தில் இருந்து எண்ணப்படுவது என்றும் அறிக.
லக்கினத்தில் இருந்து வலம்புரியாக எண்ண வரும் மூன்றாவது இடத்தை மூன்றாம் பாவம் அல்லது சகோதர பாவம் என்பர். இதனை வைத்து ஜாதகரின் உத்தியோகம், கோழைத்தன்மை, வீர தீரம், பராக்கிரமம், தொலைத் தொடர்பு வசதிகள், சிறு தூர பிரயாணங்கள், பழகும் தன்மை, கடித போக்கு வரத்து, பக்தி, மாமனார் போன்றவற்றை அறியலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் நான்காம் இடத்தை சுக பாவம் என்கிறோம். சுகம், அன்னை, நிலம், குளம், கால்நடைகள், கார் போன்ற வாகனங்கள் மனதில் எழும் எண்ணங்கள், சுக போகம், விபத்து போன்றவற்றை அறியலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் ஐந்தாம் இடத்தை புத்திர பாவம் என்கிறோம். பூர்வீக சிறப்பு, பூர்வீக நிலபுலம், வீடு, சொத்து, பூர்வ புண்ணியம் அல்லது பாவம், கடவுள் வணக்கம், மகன் அல்லது மகள், மன சுத்தம் ஆகியவற்றை அறியலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் ஆறாம் இடத்தை சத்ரு பாவம் என்கிறோம். மறைமுக எதிரி, கடன், தொல்லைகள், நோய், சிறைபடல், அவமானப்படல், வசக்குகள், சண்டைகள், உத்தியோகம், அரசியல் போன்றவற்றை அறியலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் ஏழாம் இடத்தை களத்திர பாவம் என்கிறோம். மனைவி, வியாபாரம், திருமணம், நண்பர், வியாபாரத்தில் பங்குதாரர், பிரயாணம், இல்லறம், மனைவியின் குணம், நேரடியான  எதிரிகள் ஆகியவற்றை காணலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் எட்டாம் இடத்தை ஆயுள் பாவம் என்கிறோம். ஆயுள், தொல்லைகள், துயரங்கள், விபத்துக்கள், சாபங்கள், ஏழ்மை, மனைவியின் பிறந்த வீட்டு நிலைமை ஆகியவற்றை காணலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் ஒன்பதாம் இடத்தை பாக்கிய பாவம் எனலாம். பொக்கிஷம், பாக்கியம், செல்வம், தந்தை, பக்தி, தந்தை வழி சொத்து, நற்குணங்கள் அல்லது பொல்லாத குணம், மச்சான், கொழுந்தியாள் போன்றவற்றை அறியலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் பத்தாம் இடத்தினை ஜீவன பாவம் என்கிறோம். மாமியார், செய்தொழில், உத்தியோகம், வியாபாரம், நல்ல அல்லது தீய வினைகள், பிழைக்கும் வழி, முயற்சி போன்றவற்றை இப்பாவம் மூலம் காணலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் பதினோறாம் இடத்தை இலாப பாவம் என்கிறோம். இதன் மூலம் சம்பாதனை, இலாபம், மூத்த சகோதரர் அல்லது மூத்த சகோதரி, மூத்தோரின் நல்லுறவு, வருமானத்தின் தன்மை, சொத்து சேர்க்கை போன்றவற்றை அறியலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் பன்னிரண்டாம் இடத்தினை நஷ்ட பாவம் என்போம். இதன் மூலம் ஒருவருக்கு ஏற்படும் செலவு, பொருள் அல்லது சொத்து இழப்பு, பக்தி, ஞானம், மோட்சம், மறு பிறவி, இடம் பெயர்தல் போன்றவற்றை காணலாம்.
லக்கினத்தை ல என்று ஜாதகத்தில் குறித்து இருப்பர். இதனை விதி லக்கினம் என்றும் சொல்வர்.
ஒரு ஜாதகத்தில் சந்திரன் உள்ள இடத்தை ச என்று குறித்திருப்பர். இதனை மதி லக்கினம் என்பர். இவ்விடத்தை வைத்து ஒருவரது உடல் நிலை, மன ஓட்டம், சகிப்புத் தன்மை ஆகியவற்றை காணலாம்.
இந்த விதி லக்கினமும் மதி லக்கினம் என்கிற இராஸியும் எல்லா ஜாதகரின் பொது பலன்களையும் திஸா புத்தி பலன்களையும் காண உபயோகமாகும்.
ஒருவருக்கு லக்கினமும் வலுத்த சந்திரனும் ஒரே இராசியில் இருந்தாள் அவன் உலகமே புகழும் வாய்ப்பினை பெருவராம். அனுமனைப் போல் அல்லது இராமனைப் போல் அவர்கள் போற்றப்படுவராம்.
விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். அது ஞானிகளுக்கே கஷ்டமாம். ஆனாலும் இவ்வாக்கியம் முழுக்க முழுக்க ஜோதிடத்துக்கே உரித்தானதாகும்.  கிரகங்கள் லக்கினப்படி கெட்டு இருந்தாலும், சந்திரனை பொறுத்து வலுத்து இருக்க அந்த ஜாதகன் வாழ்வில் உயர்வான் என்பதை தான் விதிப்படி கெட்டு போனாலும்  மதியாகிய சந்திரனின்படி வலுத்து இருக்க அவன் தனது வாழ்வில் உயர்வான் என்றனர்.
ஆக இந்த பகுதியில் லக்கினம் என்பது பற்றியும், இராசி என்பது பற்றியும், பாவம் என்றால் என்னவென்பதையும், இராஸி என்றால் சந்திரன் இருக்கும் வீடு என்பதையும் கண்டுள்ளோம்.
சூரியன் உள்ள இடத்தை சூ என குறிப்பர். அரசர், மந்திரி போன்ற VIP களுக்கு சூரியா லக்கினத்தின்படியும் பொது பலனையும், திஸா புத்தி பலனையும் காண்பது ஜோதிடர்களின் கடமை ஆகும்.
ஒருவருக்கு லக்கினமும், அச்தமனமில்லாத வலுவான சந்திரனும், சூரியனும் ஒரே பாவத்தில் இருக்க, அவர் உலகுக்கே தெரிந்த பெரும் புள்ளியாய் புகழோடு வாழ்வார்.
இனி அடுத்த பகுதியில் சந்திப்போம்!
அன்பன்
அ.வீ.மாரிமுத்து
29 - 07 - 2016
மீண்டும் நினைவூட்டுகின்றேன்
ஒரு ஜாதகரின் லக்கினம் காண்பதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை கடை பிடியுங்கள்.
  • அந்தந்த ஊரில் விற்பனையாகும் - அருகில் உள்ள நகரத்து பஞ்சாங்கத்தை மட்டும் - ஜாதகம் குறிப்பதற்கு பயன் படுத்த வேண்டும்.
  • குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை நிர்ணயம் செய்யவும். அறுவை சிகித்சையில் பிறந்திருந்தால் இதனை ஜோதிட விதியின்படி நிர்ணயம் செய்ய இயலாது.
  • குழந்தை பிறந்த ஆண்டு, மாதம், தேதி, இரவு அல்லது பகல், நேரம் ஆகியவற்றை துல்லியமாக பெற்றுக் கொள்.
  • குழந்தை பிறந்த நேரத்துக்கான நாழிகை மற்றும் விநாழிகையை குறி.
  • குழந்தை பிறந்த அன்று சூரிய உதயம் எது என்று பஞ்சாங்கத்தின் மூலம் அறிக.
  • அந்த சூரிய உதயத்தில் இருந்து, குழந்தை பிறந்த நேரம் வரை உள்ள உதயாதி நாழிகையை கணக்கிடு.
  • குழந்தை பிறந்த அன்று காலை உதயத்தில், அப்போதுள்ள மாதத்துக்கான இராசியின் பாக்கி நாழிகை என்ன என்று பஞ்சாங்கத்தின் மூலம் அறிக.
  • அந்த பாக்கியுடன் இராசிகளின் வலமாக - தொடர்ச்சியாக வரும ஒவ்வொரு இராசியின் நாழிகைகளை கூட்டி, எந்த இராசியில் குழந்தை பிறந்த நேரம் வருகின்றது என்பதை காண்க.
  • இதுவே அந்த குழந்தை பிறந்த லக்கினம் ஆகும்.
  • அந்த லக்கினத்தின் மொத்த நாழிகையில் எத்தனை நாழிகை சென்றுள்ளது என்று கண்டு, அந்த லக்கினத்தின் அமைவிட பாகையையும், அந்த லக்கினத்தின் நவாம்ச லக்கினத்தையும் காண்க.
இந்த விதிகளை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு ஜாதகத்தில் லக்கினத்தை காண இயலும்.
அன்பன்
அ.வீ.மாரிமுத்து
28 - 07 - 2016
ஒழுகைமங்கல மாரியம்மன்
எங்கள் ஊருக்கு பக்கத்தில் தென் மேற்கு மூலையில் அமைந்துள்ள ஒழுகை மங்கலம் என்னும் ஊரின் நாயகியாய் - எங்களை போன்ற பல லட்சம் மக்களுக்கு அன்னையாய் உள்ளவள் இந்த மாரியம்மன். இவளது உன்னத லீலைகளை சொல்லி மாளாது.
அதில் ஒன்று தான் இந்த உண்மை சம்பவம்.
சுப்பையா என்பவர் ( பெயரை மாற்றி உள்ளேன்) வெகு சாதாரண ஏழை. அவர் நான் படித்த உயர் நிலை பள்ளியில் ஒரு உதவியாளர். சம்பளமோ வெகு சொற்பம். அவரது மனைவி ஒரு பெண் பிள்ளையை பெற்றெடுத்து சிறிது காலத்திலேயே கண்ணை மூடி விட்டார். அவர் உயிரோடு இருந்த போது, இருபது கல் தொலைவில் உள்ள மாயூரத்தில் வாழ்ந்து வந்த அந்த அம்மையாரின் தம்பி தன மகனுக்கு சுப்பையாவின் மகளை திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதி கொடுத்து இருந்தார்.
தன் மனைவி தன்னை விட்டு பிரிந்தாலும், தன் சுகத்தை மறந்து, தன மகளுக்காக மறு மணம்  புரியாது வாழ்ந்து வந்தார் சுப்பையா. காலம் சுழன்று சுப்பையாவின் மச்சானை உயர் நிலைக்கு உந்தி தள்ளியது. அவர் பெரிய தனவந்தராகி விட்டார்.
ஆனால் சுப்பையா அதே நிலையில் தான் இருந்தார். ஆனால் ஒழுகைமங்கல  மாரியம்மன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையோடு இருந்து வந்தார். அவருக்கு இந்த உலகில தெரிந்த இடங்களே மாரியம்மன்இருக்கும்  ஒழுகை மங்கலம், அவர் வேலை செய்து வந்த உயர் நிலைப்பள்ளி, அவர் வாழ்ந்து வந்த வீடு, அவரது மச்சானின் ஊரான மாயூரம் ஆகிய நான்கு ஊர் மட்டுமே.
பெண்ணுக்கு திருமண வயது வந்ததும், மாயூரத்துக்கு சென்று, தன் மச்சானிடம் தன் மகளை அவரது மகனுக்கு திருமணம் செய்து கொள்ள சொன்னார். ஆனால் அவரோ துரோணரை பரிகசித்த துருபதன் மாதிரி ஏளனம் செய்து அனுப்பி விட்டார். உள்ளம் சோர்ந்து ஒழுகை மங்கல கோயிலில் அமர்ந்து சுப்பையா  புலம்பிய காட்சியை அங்கு கோயிலுக்கு சென்ற நான் பார்த்ததை இன்று எண்ணினாலும் என் கண்கள் பணிக்கும்.
மாதங்கள் சில உருள, மாயூரத்து மச்சான் தன மகனுக்கு பெரிய இடத்தில் பெண்ணை பார்த்து, பத்திரிகை அடித்து, சுப்பையாவின் வீட்டுக்கு வந்து பத்திரிகை கொடுத்தார். "பார்த்தாயா! என் பிள்ளைக்கு எப்படிப்பட்ட பணக்கார பெண்ணை மனைவி ஆக்கப் போகிறேன்" என்கிற கர்வம் சுப்பையாவின் மச்சானுக்கு இருந்ததை சுப்பையா உணர்ந்தாலும் அந்த பத்திரிக்கையை வாங்கி கொண்டு, மறு வார்த்தை பேசாமல் மாரியம்மன் கோயிலுக்கு வந்து அழுதார் சுப்பையா.
திருமணம நடக்க இருந்த இடமோ அதே ஒழுகை மங்கல மாரியம்மன் ஆலயமே. திருமணத்துக்கும் முதல் நாள் மாப்பிள்ளை விட்டார் தடபுடலாக கோயிலுக்கு அருகில் உள்ள கல்யாண மண்டபத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் பெண் வீட்டாரோ அதிகாலை மூன்று மணி வரை கோயிலுக்கு வந்து சேரவில்லை. மூன்றரை மணி வாக்கில் பெண் வீட்டில் இருந்து ஒருவர் வந்து, "அந்த பெண் யாரோ ஒருவனுடன் ஓடி விட்டது" என்று சொன்னார்.
இப்போது சுப்பையாவின் மச்சானுக்கு அழும் நேரம்!
சுப்பையாவின் மச்சான் இப்போது என்ன செய்வது என்று அதிகாலை நான்கு மணி வரையும் யோசித்து பார்த்தார். தன் மனைவியுடன் தன் காரில் ஏறி சுப்பையாவின் வீட்டுக்கு வந்து கதவை தட்டினார்.
கதவை திறந்த சுப்பையாவை தாண்டி உள்ளே சென்ற அவரது மச்சானும் அவரது மனைவியும், உறங்கி கொண்டிருந்த சுப்பையாவின் பெண்ணை தட்டி எழுப்பினர். தங்கள் கொண்டு வந்திருந்த பெண் அழைப்பு புடைவைய கொடுத்து கட்டி கொண்டு வரும்படி சொன்னார்கள்.
இப்போதும் சுப்பையா பேசவில்லை. ஆனால் மாரியம்மனை மனதால் துதி செய்ய ஆரம்பித்து விட்டார்.
காலையில் ஒன்பது மணி வாக்கில் சுப்பையாவின் மகளின் திருமணம் சுப்பையாவின் மனம் குளிர - ஒரு காசு செலவில்லாமல் - நடந்தே விட்டது.
இவ்விஷயம் இன்னும் என் மனதில் ஒரு அதிசயமாகவே உள்ளது. இன்னாருக்கு இன்னார் என்பது எவ்வளவு பெரிய உண்மை. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு  உண்மையோ - அது போல அவனின்றி அணுவும் அசையாது என்பதையும் ஒழுகை மங்கல மாரியம்மன் அந்த சுப்பையாவுக்கும் மட்டும் அல்ல, எல்லோருக்கும் புரிய வைத்துள்ளாள்.
என் பெயரை கூட அந்த மாரியம்மனின் பெயரில் தான் என் பெற்றோர்கள் வைத்துள்ளனர் என்பது இன்னும் ஒரு உபரி தகவல்.
அசைக்க முடியாத நம்பிக்கையும் மன உறுதியும் மட்டுமே சுப்பையா போன்றவர்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.
அன்பன் 
அ.வீ.மாரிமுத்து    
28 - 07 - 2016

உதாரணம்
துர்முகி வருடம் ஆடி மாதம் 5 ஆம் தேதியின் காலை சூரிய உதயத்தில் ஆடி மாதத்துக்கான கடக இராசியின் பாக்கி 4 நாழிகையும்  44 வினாழிகையும் உள்ளதாக கண்டோம்.
ஆனால் ஜாதகி பிறந்ததோ 40 நாழிகை  25 விநாழிகை ஆகும்.
கடக இருப்பு               4 - 44
சிம்மம்                          5 - 04          இதுவரை  மொத்தம்              09 - 48
கன்னி                           5 - 00           கன்னி வரை நாழிகை          14 - 48
துலாம்                          5 - 12            துலாம் வரை நாழிகை         20 - 00
விருட்சிகம்                5 - 27            விருட்சிகம் வரை நாழிகை 25 - 27
தனுசு                           5 - 20            தனுசு வரை நாழிகை            30 - 47
மகரம்                         4 - 48            மகரம் வரை நாழிகை          35 - 35
கும்பம்                       4 - 20            கும்பம் வரை நாழிகை         39 - 55
மீனம்                         4 - 14
இந்த மீன இராசியில் அன்றைய சூரிய உதயத்தில் இருந்து நாழிகை 39 -55 இல் இருந்து நாழிகை 44 - 09 வரை மீனம் கிழக்கில் உள்ளதாக அர்த்தம் ஆகின்றது. அதாவது அப்போது பிறந்த அந்த ஜாதகியின் லக்கினம் மீனம் ஆகும்.
இதிலும் துல்லியமாக மீனத்தின் இத்தனையாவது பங்கில் லக்கினம் உள்ளது  என்று கூட, ஜாதக கணிப்பில் ஜோதிடர்கள் அக்கறை காட்டுகின்றார்கள்.
ஒரு இராசியை 9 பங்கு செய்வது நவாம்சம் எனப்படும். அதனை எவ்வாறு காண்பது?
மீனத்தின் நாழிகை 4 - 14 என்று மேலே குறிப்பிட்டு உள்ளது. இதனை வினாழிகை ஆக்க - ஒரு நாழிகைக்கு 6௦ வினாழிகை என்ற முறையின்படி - 254 வினாழிகை என்றாகின்றது.
இந்த 254 விநாழிகையை 9 ஆல் வகுக்க - 28 விநாழிகையும் 13 உப வினாழிகையும் வரும். ஆக மீனத்தில் அமைந்த நவாம்சம் ஒவ்வொன்றுக்கும் 28 வினாழிகையும் 13 உப வினாழிகையும் உண்டு என்பதை அறியுங்கள்.
மீன லக்கினமோ நாழிகை 39 - 55 இலிருந்து 44 - 09 வரை நிலவுகின்றது. குழந்தை பிறந்தது நாழிகை 44 - 25 ஆகும்.
மீன லக்கினத்தின் துவக்கம் 39 -55 ஆகும்.
குழந்தை பிறந்த போது மீனத்தில் லக்கினம் நகர்ந்த நாழிகை ( 44 - 25 இலிருந்து  39 - 55 ஐ கழிக்க 30 விநாழிகை ஆகும்.
ஆனால் மீனத்தின் முதல் நவாம்சம் சுமார் 28 விநாழி ஆகும். குழந்தை பிறந்த போது மீனத்தில் 30 நாழிகை ஏற்கனவே சென்று விட்டது. ஆகவே மீன லக்கினத்தின் இரண்டாவது நவாம்சையில் ஜாதகி பிறந்துல்லாள் என்று அறியலாம்.
இதனை பாகை கணக்குப்படியும் சொல்லலாம்.
மீன லக்கினத்தின் சென்ற விநாழிகை 30 ஆகும். அம்மீனத்தின்  மொத்த விநாழிகை 254 ஆகும். இந்த மீனத்தின் மொத்த நாழிகையாம் 254 அந்த மீனத்துக்கு உண்டான 30 பாகைக்கு சமம் ஆகும்.
ஆகவே மீன லக்கினத்தின் ஒரு பாகை (254/30 = ) 8.46 விநாழிகை ஆகும்.
மீனத்தின் முதல் பாகை மீனத்தின் துவக்கத்தில் இருந்து 8. 46 விநாழிகையாம்.
மீனத்தின் இரண்டாம் பாகை 17 -32 வரை இருக்கும்.
மீனத்தின் மூன்றாம் பாகையோ 26 -18 வரை இருக்கும். அதற்கு மேல் வரும் நான்காம் பாகையோ 35 -04 வரை இருக்கும். ஆனால் மீனத்தில் லக்கினம் சென்ற நாழிகை 3௦ ஆவதால், ஜாதகி மீன லக்கினத்தின் 3 பாகைக்கு மேல் 4பாகைக்குள் பிறந்துள்ளாள் எனலாம்.
அதனையும் இன்னும் துல்லியமாக சொல்லலாம். போக போக அது தானாகவே உங்களுக்கு புரியும்.
மீண்டும் சந்திப்போம்.
அன்பன்  
அ.வீ. மாரிமுத்து    
27 - 07 - 2016

லக்கினம் கண்டோம்

துர்முகி வருடம் ஆடி மாதம் ஐந்தாம் தேதி முன்னிரவு பத்து மணி ஐந்து நிமிடத்துக்கு ஒரு குழந்தை  பிறந்துள்ளது என்று அறிகின்றீர்கள். பொதுவாக திங்கள், புதன், வெள்ளியில் முதல் அரை மணி நேரத்தில் பெண் குழந்தையே பிறக்கும். இது பொது விதியாகும்.  அடுத்த அரை மணியில் ஆண்குழந்தை பிறக்கும் என்பதுவும் உண்மையே.
ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளின் முன் அரை மணியில் ஆண் குழந்தையும், பின் அரை மணியில் பெண் குழந்தையும் பிறக்கும் என்பதுவும் ஜோதிட கருத்து ஆகும்.
இப்போதெல்லாம் அறுவை சிகித்சையிலேயே எல்லா குழந்தைகளும் பிறப்பதால் இதனை கூர்ந்து பார்க்க வேண்டியதே இல்லை.
ஆம்! இது பெண் குழந்தை தான்!
குழந்தை பிறந்த தேதி, குழந்தை பிறந்த நேரம், குழந்தை பிறந்த இடம் ஆகியவை கேட்டாயிற்று.
குழந்தை பிறந்த இடத்தில் வழக்கில் உள்ள பஞ்சாங்கத்தை மட்டுமே ஜாதகம் குறிப்பதற்கு உபயோகப்படுத்த வேண்டும்.
கோயம்புத்தூரில் பிறந்த குழந்தைக்கு சென்னையில் உள்ள பஞ்சாங்கத்தை உபயோகித்தால் சில சமயங்களில் ஜாதகத்தில் குறைகள் ஏற்பட வாய்ப்புண்டாம்.
பஞ்சாங்கத்தில் அந்தந்த ஊருக்கு அல்லது பக்கத்து ஊருக்கு ஏற்றபடி - ஒவ்வொரு இராசிக்கும் உள்ள நாழிகை போடப் பட்டிருக்கும். அதைத் தான் நாம் லக்கினம் கணிப்பதற்கு உபயோகப்படுத்த வேண்டும்.
துர்முகி வருடத்தின் ஆடி மாதத்தில் 5 ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. அதாவது ஆடி மாதத்தில் ஏற்கனவே நான்கு முழு  நாட்கள் முடிந்துள்ளன. ஆடி மாதத்தில் மொத்தம் 32 நாட்கள் உள்ளன. ஆடி மாதத்தில் இன்னும் 28 நாட்கள் செல்ல வேண்டியுள்ளது.
கடக இராசியில் தான் சூரியன் உள்ளார். ஆக இங்கிருந்து தாம் லக்கினத்தை கணிக்க துவங்க வேண்டும். கடக இராசிக்கு மொத்தம 5 நாழிகை 20 விநாழிகை உண்டென்றாலும் குழந்தை பிறந்த அன்று - அந்த கடக இராசியில் அன்றைய சூரிய உதயத்தில் - கடக இராசியின் இருப்பு மீதியுள்ள 28 நாட்களை பொறுத்து சற்று குறைந்தே இருக்கும்.
ஆக ஆடி மாதத்துக்கான கடகத்தின் நாழிகையான ஐந்து நாழிகை இருபது விநாழிகையில் மீதி  இருப்பை காண - 5 நாழிகை 20 வினாழிகைக்கு உண்டான மொத்த வினாழிகையாம் 320 வினாழிகையை 32 ஆல் வகுத்து 28 ஆல்  பெருக்கினால் - வருவது 280 விநாழிகை ஆகும். அதாவது  4 நாழிகை  40 விநாழிகை ஆகும். (ஒரு வேளை சூரியன் கடகத்தில் நுழைந்தது இரவில் என்றால் இந்த காலம் சற்று கூடுதலாய் இருக்கும்.)
எனவே பஞ்சாங்கத்தில் அந்த தேதிக்கு அருகில் போட்டிருக்கும் கடக இருப்பு என்று குறித்திருக்கும் அந்த நேரத்தை எடுத்து கொள்ளுங்கள்.
பஞ்சாங்கத்தில் 4  நாழிகை 44 விநாழிகை என்று போடப்பட்டுள்ளது.
நமக்கு சூரியன் தினந்தோறும் காலை ஆறு மணிக்கு தான் உதிக்கிறார் என்று நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அவர் வெவ்வேறு நேரத்தில் உதிக்கிறார் என்பதை பஞ்சாங்கத்தில் நாம் அறியலாம்.
பஞ்சாங்கத்தில் அன்றைய சூரிய உதயம் காலை 5 மணி 55 நிமிடத்துக்கு உதித்து இருக்கிறார் என்று போடப்பட்டுள்ளது.
ஆக சூரியன் உதித்ததில் இருந்து குழந்தை பிறந்த நேரமான இரவு 10 மணி 05 நிமிடத்துக்கு - 22 மணி 05 நிமிடத்துக்கு ( 22 - 05 இல் 5 மணி 55 நிமிடத்தை கழிக்க ) சூரிய உதயம் தொட்டு குழந்தை பிறந்த நேரம் வரை  காலம் 16 மணி 10 நிமிட நேரம் ஆகும்.
இதனை நாழிகையாக்க (ஒரு மணிக்கு இரண்டரை நாழிகை என்ற முறையில்) சூரியன் உதித்ததில் இருந்து குழந்தை பிறந்தவரை உள்ள காலம் 40 நாழிகை 25 விநாழிகை ஆகும்.
இதனை ஜோதிடர்கள் உதயாதி நாழிகை என்பர்.
மீண்டும் சந்திப்போம்
அன்பன்
அ.வீமாரிமுத்து   27 - 07 - 2016


 லக்கினம் காண

இராசிகள் பன்னிரண்டும் நட்சத்திரங்கள் இருபத்தேழும் எவ்வாறு அமைந்துள்ளன என்று பார்த்தோம். ஒவ்வொரு நாளும் விடியும் போது சூரியன் இருக்கும் இராசியே கிழக்கில் உள்ளதாக - அதாவது லக்கினமாக அமைகின்றது என்று அறிந்து கொண்டோம்.
விடிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக லக்கினமும் வலம்புரியாக மாறிக் கொண்டே வருகின்றது. ஒவ்வொரு இராசிக்கும் 30 பாகைகள் என்று சொன்னாலும் - ஒரு நாளைய 24 மணி நேரத்துக்கான 60 நாழிகையில் -
மேஷத்துக்கு நாலே கால் நாழிகையாகவும், ரிஷபத்துக்கு நாலே முக்கால் நாழிகையாகவும், மிதுனத்துக்கு ஐந்தே கால் நாழிகையாகவும், கடகத்துக்கு ஐந்தரை நாழிகையாகவும், சிம்மத்திற்கு ஐந்தே கால் நாழிகையாகவும், கன்னிக்கு ஐந்து நாழிகையாகவும், துலாத்துக்கு ஐந்து நாழிகையாகவும், விருத்சிகத்துக்கு ஐந்தே கால் நாழிகையாகவும், தனுசுக்கு ஐந்தரை நாழிகையாகவும், மகரத்துக்கு ஐந்தேகால் நாழிகையாகவும், கும்பத்துக்கு நாலே முக்கால் நாழிகையாகவும், மீனத்துக்கு நாலே கால் நாழிகையாகவும் - ஆக மொத்தம் அறுபது நாழிகையாக ஒவ்வொரு இராசிக்கும் நேர அளவில் அன்றாடம் லக்கினம் கடக்க வேண்டிய தூரத்தை அளவிட்டு முனிவர்கள் நமக்கு சொல்லியுள்ளனர்.
ஆனால் இந்த நாழிகைகள் ஒவ்வொரு ஊரும் அமைந்துள்ள இடத்துக்கு தக்கவாறு சற்று கூடுதலாக அல்லது குறைவாக அவையவை அமைந்துள்ள அட்சாம்சத்துக்கு தகுந்த மாதிரி மாறுபடும். இதனை பஞ்சாங்கத்தில் துல்லியமாக் கண்டு கொள்ளலாம்.
சூரியன் ஒரு மாதத்தில் ஒரே இராசியில் இருந்த போதிலும், ஒவ்வொரு நாளிலும் அவர் இருக்கும் இடம் மாறுபடும். புரட்டாசி மாதத்தில் சூரியன் மூன்றாம் தேதி முடிவில் கன்னி இராசியில் அதன் ஆரம்பத்தில் இருந்து கிட்டத்தட்ட மூன்று பாகையில் இருப்பார். அதாவது கன்னியின் நாழிகையான ஐந்து நாழிகையில் (300 விநாழிகையில்) 30 விநாழி கடந்து நிற்பார். அதாவது கன்னியில் புரட்டாசி மாதம் 4 ஆம் தேதி காலையில் கன்னி லக்கினம் கடக்க இன்னும் நாலரை நாழிகை உள்ளது என்று பொருள்.
அவரே புரட்டாசி மாதத்தின் 20 ஆம் தேதியின் முடிவில் கன்னியின் 20 பாகையில் இருப்பதால் புரட்டாசி மாதத்தின் 21 ஆம் தேதியின் காலையில் கன்னி இலக்கின இருப்பு ( 300 - 20X 10 = 100 விநாழி) ஒரு நாழிகை நாற்பது விநாழிகையாக இருக்கும்.
இனி புரட்டாசி மாதத்தில் எந்த நேரத்தில் குழந்தை பிறந்ததோ அந்த நேரம் வரை லக்கினம் எந்த ராசிக்கு நகர்ந்துள்ளது என்று கண்டு, பிறந்துள்ள குழந்தையின் லக்கினத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
அடுத்து வரும் பகுதியில் ஒரு உதாரணத்துடன் நாம் சந்திப்போம்.
ஜோதிடம் புரட்டு அல்ல. அதில் பல விதிமுறைகள் உள்ளன. அவற்றை புரிந்து கொள்ளாததே புரட்டு என்பதற்கு வழி கோலுகின்றது. ஜோதிடம் ஒரு கலை. அது ஒரு விஞ்ஞானம்.
இந்த ஜோதிடத்தில் கரை கண்டவர் பிரம்மனை தவிர வேறொருவரும் இவ்வுலகில் இதுவரை பிறக்கவில்லை. ஆனாலும் கொஞ்சம் சிரமப்பட்டால் எந்த ஒரு ஜாதகத்திலும் என்பது விழுக்காடாவது உண்மையை கண்டு பிடித்து விடலாம்.
யானும் இதுவரை முழு கிணறு தாண்டியதில்லை. ஆனால் அதற்கு இன்னும் முயன்று கொண்டிருக்கின்றேன்.
அன்பன்
அ.வீ.மாரிமுத்து.

சூரியனும் மாதமும்


நவக் கிரகங்களில் சூரியன் பிரதான அங்கம் வகிக்கிறார். மற்ற எட்டு கிரகங்களும் சூரியனை வைத்தே சுழன்று வருகின்றனர். ஆகவே சூரியன் முதல் கேது வரை உள்ள நவக் கிரகங்களை சூரியக் குடும்பம் என்கின்றோம்.
இந்த சூரியன் மேஷத்தில் ஒரு மாத காலம் இருக்கின்றார். அக்காலத்தை சித்திரை மாதம் என்கின்றோம். இவ்வாறே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இராசியில் சூரியன் தங்குகின்றார். ஆனால் அந்த இராசியில் ஒரே இடத்தில் இருப்பதில்லை.
ஒரு புள்ளிக்கு 360 பாகை உண்டு என்று சொல்வர். அதுபோல இவ்வுலகில் நாம் இருக்கும் அவ்விடத்துக்கு 360 பாகை உண்டல்லவா? அப்படியானால் நாம் உள்ள இடத்தின் மேலே உள்ள வான வீதியின் சுற்று வட்ட பாதையில் அமைந்துள்ள மேஷம் முதல் மீனம் வரையில் உள்ள 12 இராசிகளுக்கும் ஒட்டு மொத்தமாக 360 பாகைகளும், ஒவ்வொரு இராசிக்கும் தலா  30 பாகைகளும் உண்டு என்பது உண்மையல்லவா!
இப்போது சூரியன் மேஷத்தில் பிரவேசிக்கும் போது, அவர் மேஷத்தின் துவக்கத்தில் வந்து ஒரு நாள் வரை 1 பாகைக்குள் இருந்து நகர்ந்து வருகின்றார். அடுத்த நாள் அவர் `1 பாகையிலிருந்து நகர்ந்து 2 பாகை நோக்கி நகர்கிறார்.
சித்திரை மாத கடைசியில் மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு நகர்ந்து விடுகின்றார். இவ்வாறு சூரியனின் நகர்வு ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பாகையாக இருக்கும். கிட்டத்தட்ட மாதம் ஒன்றுக்கு ஒரே பாவத்தில் அவர் இருப்பார். சூரியனின் இந்த நகர்வு எப்படி எப்போது நடக்கிறது என்பதை பஞ்சாங்கத்தில் போட்டிருப்பர்.
சூரியன் இருக்கும் இடமே அன்றைய சூரிய உதய காலத்தில் கிழக்கு திசை என்று ஜோதிட வல்லுனர்கள் சொல்லுகின்றனர். அன்றைய மதியமோ சூரியன் இருக்கும் இடத்தின் நான்காம் இடம் கிழக்கு திசை ஆகின்றது.
அன்றைய மாலை ஆறு மணிக்கு, சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் ஏழாம் இடமே கிழக்கு திசை ஆகின்றது. அன்று நள்ளிரவில் அந்த கிழக்கு திசை அன்றைய சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் பத்தாமிடமாக அமையும்.
ஆக கிழக்கு திசை என்பதுவும் நகர்ந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதை அறியுங்கள்.
இந்த கிழக்கு திசையை தான் வல்லுனர்கள் லக்கினம் என்கின்றனர். அதாவது குழந்தை பிறந்த போது அமையும் கிழக்கு திசையே அக் குழந்தையின் லக்கினமாக அமைகின்றது.
இந்த லக்கினத்தை எவ்வாறு ஜோதிடர்கள் கணிக்கின்றார்கள் என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.
அன்பன்
அ . வீ . மாரிமுத்து
26 - 07 - 2016
சிதம்பரத்தில் 

ஒரு நாள் நான் சிதம்பரத்தில் நடராஜரையும் பெருமாளையும் தரிசித்து கொண்டிருந்தேன். அப்போது இரு நண்பர்கள் அங்கு வந்து பேசியதை இங்கு சொல்ல விழைகிறேன்.
அதில் ஒருவர் விஷ்ணு பக்தர். அவர் சிவ பக்தரான தன் நண்பரிடம் சொன்னார் - பார்த்தாயா? என் விஷ்ணு எத்தனை அசட்டையுடன் உன் கடவுள் சிவனை நோக்கி கால் காட்டி படுத்துள்ளார் என்று!
அதற்கு அந்த சிவ பக்தர் விளக்கம் கூறினார் - அட போப்பா! எங்க கடவுள் சிவன் உங்கள் கடவுளை - அப்படியே கிட! இல்லாவிட்டால் மிதித்து விடுவேன் - என்று காலை தூக்கி காட்டுகிறாரே என்றார்.
அவ்விருவரும் பேசியதை கேட்டு அங்கு நின்ற ஒரு வயதானவர் அவ்விருவரிடமும் சொன்னார்.
விஷ்ணு காக்கும் தெய்வம் ஆவார். அவர் தமது காக்கும் தொழிலை செய்து அலுத்து வந்து ஓய்வெடுக்கும் போதும், நடராஜனின் ஆடலில் மயங்கி ரசிப்பதற்காக, அவர் பக்கம் பார்த்த வண்ணம் படுத்து ரசிக்கின்றார் என்றார்.
அந்த காக்கும் தெய்வமாம் விஷ்ணுவின் அயர்வு தீர, நடராஜரும் தன் நடனம் மூலம் விஷ்ணுவின் களைப்பையும், அயர்வையும் நீக்குகின்றார்.
நம் இந்து மதத்தில் பல கடவுளரை படைத்தது அவர்களிடையே பேதம் காண்பதற்கு அல்ல. இவ்வுலகில் பல தரப்பட்ட மனிதர் இருப்பினும் சிவன், விஷ்ணு போல் ஒருவருக்கொருவர் பாசத்துடனும் அன்புடனும் அனைவரும் இருக்க வேண்டும் என்று உணர்த்திடவே
எல்லா மனிதரும் ஒரே மாதிரி ஒத்த உயர் குணம் கொண்டவர் அல்ல என்று காட்டுவதே இறைவனின் தத்துவம் ஆகும். ஒருவரது ஆக்கத்திலும் செய்கையிலும், பேச்சிலும், நடவடிக்கைகளிலும் நல்லவற்றை ஏற்றும், கெட்டவற்றை விடுத்தும், மதித்து நேசிப்பதே மனிதரின் கடமை ஆகும் என்பதை அறியுங்கள் என்றார்.
ஒரு இந்துவாக இருந்து கொண்டு, இந்து கடவுளரிடையே பேதமும் துவேஷமும் கொள்ளும் நீங்கள், மற்ற மதத்தையோ அல்லது மற்ற மதத்து தெய்வங்களையோ எவ்வாறு மதிக்கவும் போற்றவும் போகின்றீர்களோ எனக்கு தெரியாது.
இத்தகைய காழ்ப்புணர்ச்சி தான் பிற்காலத்தில் மத சண்டைக்கும் கலவரத்துக்கும் காரணம் ஆகின்றது. ஆகவே ஒரே கோயிலில் இருக்கும் இந்த இரு கடவுளரையும், வேற்றுமை பார்க்கும் குணத்தை மாற்றி, எல்லா மதங்களும் கடவுளரும் மனிதரின் நன்மைக்கும் உயர்வுக்கும் மட்டும் தான் என்று உணர்ந்து, பின்னர் அத்தெய்வங்களை வணங்க வாருங்கள் என்றார்.
நாம் எல்லாம் அப்படித் தானா?
அன்பன் அ. வீ. மாரிமுத்து   
25 - 07 - 2016
இராசிகளும் கிரகங்களும்
இராசிகள் அல்லது பாவங்கள் 12 என்று சொன்னோம். இவ்வீடுகளுக்கு அதிபர்களாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என்று ஏழு கிரகங்கள் அதிபர்களாக உள்ளனர்.
சூரியனுக்கு சிம்மமும், சந்திரனுக்கு கடகமும், செவ்வாய்க்கு மேஷம், விருட்சிகம் ஆகிய இரண்டு வீடுகளும், புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரு வீடுகளும், குருவுக்கு தனுசு, மீனம் ஆகிய இரு வீடுகளும், சுக்கிரனுக்கு ரிஷபம், துலாம் ஆகிய இரு வீடுகளும், சனிக்கு மகரம், கும்பம் ஆகிய இரு வீடுகளும் சொந்தமாம்.
இராகு கேதுக்களுக்கு சொந்த வீடு கிடையாதாம். ஆனால் அவர்கள் நிற்கும் வீட்டை அவர்கள் தன சொந்த வீடாக கருதி ஆட்சி செய்வராம்.
ஜோதிடத்தில் சொந்தம் என்பதற்கு ஆட்சி வீடு என்று குறிக்கும் வழக்கம் உள்ளதை அறியவும். ஒருவர் தனது வீட்டில் இருக்கையில் அவரது இஷ்டத்துக்கு இருக்கலாம். அவரது சுதந்திரம் அளவற்று இருக்கும். அதுபோல் ஆட்சி பெற்ற கிரகமும் நூறு விழுக்காடு வலு அடைந்து முழு பலனை கொடுக்கும்.
என்றாலும் இவ்விதிக்கும் சிறு விதிவிலக்குகளும் உள்ளன. அதனை பின்னர் சொல்ல உள்ளேன்.
ஒருவர் தனது மாமியார் வீட்டுக்கு சென்றால் அவருக்கு கிடைக்கும் மரியாதைகளும் வரவேற்பும் மிக உயர்வாக இருக்கும். அது போலவே சூரியன் மேஷத்திலும், சந்திரன் ரிஷபத்திலும், செவ்வாய் மகரத்திலும், புதன் கன்னியிலும், குரு கடகத்திலும், சுக்கிரன் மீனத்திலும், சனி துலாத்திலும் இருக்க - அந்தந்த கிரகங்கள் உச்சம் பெறுவதாக ஜோதிட வல்லுனர்கள் சொல்வர். அங்கு அந்தந்த கிரகங்கள் 125% வலு பெறுவதால் அங்கு அக்கிரகங்கள் இன்னும் உயரிய பலன்களை தருமாம்.
இதற்கும் ஒரு சில விதி விலக்குகள் உண்டு.
நம் வீட்டுக்கு பிரதம மந்திரி அல்லது முதன் மந்திரி அல்லது புகழ் பெற்ற ஒரு மனிதர் வந்தால், அவருக்கு நம் வீட்டில் எவ்வளவு மரியாதைகளும் வரவேற்பும் அளிக்கப்படும் என்பதை சற்று நினைத்து பாருங்கள்.
அது போல சூரியன் சிம்மத்திலும், சந்திரன் ரிஷபத்திலும், செவ்வாய் மேஷத்திலும், புதன் கன்னியிலும், குரு தனுசிலும், சுக்கிரன் துலாத்திலும், சனி கும்பத்திலும், இராகு அல்லது கேது விருத்சிகத்திலும் இருந்தால் அந்நிலையை மூலத் திரிகோணம் என்கிறோம்.  அங்கு அந்தந்த கிரகங்கள் 108% வலு அடைவதாக ஜோதிட வல்லுனர்கள் சொல்லுகின்றனர்.
ஒரு சில இடங்களுக்கு நாம் செல்லுகையில் அங்குள்ள பலர் நம்மை நன்கு மதிப்பதுவும், அங்குள்ள வேறு சிலர் நம்மை வந்தால் வந்து விட்டு போகட்டுமே என்று இருப்பதுவும் நமக்கு தெரியாமல் போவதில்லை. அதுபோலவே கிரகங்கள் ஒரு சில இடங்களில் நட்பு என்ற நிலை அடைந்து - அவ்விடத்தில் தமது பலனை கூடியவரையில் நன்மையாகவே நடத்தி செல்வதும் உண்டு. அவ்வப்போது எதிர்பாராத தீய பலன்களும் வந்து போவதுண்டு. கிரகங்கள் நட்பு பெறும் இராசிகளில் 75% வலு அடைகிறார்கள்.
ஒரு சில இடங்களுக்கு நாம் போனால் இவன் ஏண்டா இங்கு வந்து தொலைத்தான் என்று அங்குள்ள பலரும் நினைப்பதை சற்று மனதில் நிறுத்தி பாருங்கள். அதுபோலவே கிரகங்கள் ஒரு சில இடங்களில் நிற்கையில், அவ்வீடு அவர்களுக்கு பகை வீடு ஆகின்றன. இங்கு அக்கிரக பலன்கள் நன்மையாக அமையாது. கிரகங்கள் அப்படிப்பட்ட பகை வீட்டில் 50% வலுவை அடைகின்றன.
பகைவன் வீடாக இருந்தாலும் காரியம் ஆக வேண்டி இருந்தால், மரியாதை கிடைக்காது என்றாலும், போய் தானே ஆக வேண்டியுள்ளது. கிரகங்கள் பகை பெறும் வீடுகளில், பயனுள்ள பலன்களை சிறப்பாக அடைய விடுவதில்லை.
ஒரு சில இடங்களில் கிரகங்கள் தன் வலிமையை 25% அளவுக்கு இழந்து போகின்றன. அவ்வீடுகளை நீச்ச வீடுகள் என்கிறோம். மனைவியை மதிக்காதவன், மாமியார் வீட்டுக்கு போனால் அவனுக்கு என்ன வரவேற்பும், மரியாதையும் கிடைக்கும் என்பதை ஒப்பு நோக்கி இந்த இடத்தில் கிரக வலுவை நிர்ணயம் செய்ய வேண்டும்.
பொதுவாக உச்ச வீட்டுக்கு நேர் எதிர் வீடு அக்கிரகத்துக்கு நீச்ச வீடாக இருக்கும்.
இது வரை கிரக வலிமையை பார்த்தோம்.
இன்னும் சொல்ல உள்ளேன், அடுத்த பகுதியில்.
அ. வீ. மாரிமுத்து   24 - 07 - 2016
 
இராசிகள்
பன்னிரண்டு இராசிகள் உண்டென்றும், அவை மேஷம் முதல் மீனம் வரை வானவீதியின் உச்சியில் உள்ளது என்றும் கண்டோம்.
சூரியனை தினகரன் என்பர். இவர் தான் ஒரு நாளின் துவக்கத்தை உலகுக்கு உணர்த்துபவர். இவரை மாதகரன் என்றும் சொல்வர். அதாவது மாதத்தை உருவாக்குபவர் என்றும அர்த்தமாம்.
இவர் மேஷத்தில் நிற்கும் காலத்தை சித்திரை என்றும், ரிஷபத்தில் நிற்கும் காலத்தை வைகாசி என்றும், மிதுனத்தில் நிற்கும் காலத்தை ஆனி என்றும், கடகத்தில் நிற்கும் காலத்தை ஆடி என்றும், சிம்மத்தில் நிற்கும் காலம் ஆவணி என்றும், கன்னியில்  உலவும் காலம் புரட்டாசி என்றும், துலாத்தில் நிற்கும் காலம் ஐப்பசி என்றும், விருத்சிகத்தில் இருக்கும் காலம் கார்த்திகை என்றும், தனுசில் பவனி வருகையில் மார்கழி என்றும், மகரத்தில் வலம் வருகையில் தை என்றும், கும்பத்தில் இருக்கும்போது மாசி என்றும், மீனத்தில் செல்லுகையில் பங்குனி என்றும் சொல்வர்.
ஒரு ஜாதகத்தில் சூரியன் எந்த இராசியில் நின்றார் என்று கண்டு அந்த ஜாதகர் பிறந்த மாதத்தை நிச்சயம் சொல்லி விடலாம். சூரியனை இந்த பூமி ஒரு நாளைக்கு ஒருமுறை சுற்றுகின்றது என்பதை அறியவும்.
ஒரு இராசிக்கு முப்பது பாகைகள் உண்டு என்று அறிக. ஒவ்வொரு இராசியிலும் சூரியன் ஒரு நாளைக்கு ஒரு பாகையாக கடக்கிறான் என்று நமக்கு ஜோதிடம் அறிந்த முனிவர்கள் சொல்லியுள்ளனர்.
ஒருவரது ஜாதகத்தில் அவரது லக்கினமும் சந்திரன் நிற்கும் இடமும் - அதனை இராசி என்பர் - வெகு முக்கியம் ஆகும்.
ஜாதகத்தில் ல என்று போட்டிருக்கும் இடம் லக்கினமாம். ச என்று போட்டிருக்கும் இடம் இராசியாம். லக்கினம் என்பது ஜாதகரது அமைப்பு, அவரது உயரம், நிறம், உயர்வு, தாழ்வு, புகழ், கீர்த்தி, அவப்பெயர், அபகீர்த்தி, தனம் வரும் நிலைமை, தடுமாறும் நிலைமை, யார் மூலம் உதவி பெற்று உயர்வார் அல்லது தாழ்வார் என்பதை சொல்லும் இடமாகும்.
அதுபோல ச என்று போட்டிருக்கும் இராசியும் ஒருவரது உடல் நிலை, மனோநிலை முடிவெடுக்கும் தன்மை போன்றவற்றை சொல்லும் இடமாகும். ஆகவே ஒருவரது ஜாதகத்தில் உள்ள லக்கினமும் இராசியும் ஒருவரது உடல் அமைப்பு, நிறம், உயரம், திடகாத்திரம், பயனுருதல், பணம் சம்பாதித்தல், எவர் மூலம் நன்மை அல்லது தீமை வரும், உடல் வன்மை, எண்ண ஓட்டம் போன்ற இவற்றை அறிந்து கொள்ள உதவுகின்றது.
மேஷம் என்பது ஆட்டையும், ரிஷபம் என்பது காளை மாட்டையும், மிதுனம் என்பது பஞ்சணையில் அமர்ந்திருக்கும் யுவன், யுவதியையும், கடகம் என்பது நண்டையும், சிம்மம் என்பது சிங்கத்தையும், கன்னி என்பது தோட்டத்தில் உலவும் மணமாகாத பெண்ணையும், துலாம் என்பது தராசு பிடித்த ஆண் மகனையும், விருட்சிகம் என்பது தேளையும், தனுசு என்பது இடுப்புக்கும் கீழ் மிருக உருவமும் இடுப்புக்கும் மேல் வில் பிடித்த ஆண்மகனாகவும், மகரம் என்பது இறகு உள்ள முதலை மீனாகவும், கும்பம் என்பது குடத்தையும், மீனம் என்பது இரு மீன்கள் ஒன்றை ஒன்று கவ்வி பிடிக்க சுழன்று கொண்டுள்ளவற்றையும் குறிப்பதாம்.
ஒருவரது லக்கினமும் இராசியும் எவை என்று கண்ட பின்னர் அந்த இரு பாவங்களை கொண்டு ஜாதகனின் உருவத்தை, நிறத்தை, குணத்தை, எண்ணங்களை, மேன்மையை, உடல் நிலையை, உயர்வை, தாழ்வை, பயன் பெறுதலை சொல்லி விடலாம்.
என்றாலும் கிரகங்களின் வலுவை, இருப்பை, அவை பெற்ற கூடல் அல்லது பார்வையை பொருத்தும் இப்பலன்களை இன்னும் உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ நிர்ணயிக்க நேரிடும்.
அவற்றை பின்னர் நான் சொல்ல இருப்பதால் இப்போதைக்கு அக்கவலையை விட்டு விடுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளவர்களது ஜாதகத்தில் உள்ள லக்கினமும், இராசியும் எவை எவை என்று கண்டு  அவரவரது உருவம், அமைப்பு போன்றவற்றை இன்றே அலச ஆரம்பியுங்கள்.
மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்.
உங்கள் அன்பன்
அ.வீ.மாரிமுத்து -  23 - 07 - 2016
எல்லா புகழும் சப்த ரிஷிகளுக்கே!
ஜோதிடம் எழுதிய அனைத்து ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் மற்றுமுள்ள ஜோதிட விற்பன்னர்களுக்கும் இந்த விண்தள மேடை நன்றி கூறி உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் இதில் வரும் அனைத்து கருத்துக்களும் பொதுவாக சமர்ப்பிக்கப் படுகின்றது.
யான் எல்லாவற்றையும் இறைவனின் அருளாசியால் சுலபமாக விலை கொடுக்காது கற்றவற்றை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாகவே கொடுக்க உள்ளேன்.
எனக்கு தெரிந்த அனைத்து ஜோதிட கருத்துக்களையும் எளிதாக புரியும்படி சொல்ல அந்த சப்த ரிஷிகள் எனக்கு அருள்வார்களாகுக!
இந்த முன்னுரை போதும் என்று என் பணியில் நுழைய விழைகின்றேன்.
முதன் முதலில்  ஜோதிட அடிப்படைகளை காண்போம்!

எமக்கு தெரிந்தது உமக்கும்

என் பன்னிரண்டு வயதில் நானும் என் தந்தையும் முதன் முதலில் ஜோதிடத்தை பற்றி பேசினோம் என்று நினைக்கிறேன். அவர் மண்பாண்டம் செய்யும் குயவர் ஆவார். அவரது முன்னோர்கள் வாயிலாக ஜோதிடம் அவருக்கு கைவரப் பெற்றது. இரண்டு தொழிலும் சேர்ந்து அவரை நிலம் வாங்க வைத்து அவரை நிலக்கிழார் ஆக்கியது.
காந்தியை போல் கிழே ஒரு வேட்டியும் மேலே ஒரு வேட்டியும் அணிந்திருப்பார். என் தந்தை சட்டை போட்டு நான் பார்த்ததே இல்லை.
அவரது வாழ்வு அவ்வளவு எளிதானது. எனது முக்கியமான நண்பரே என் தந்தை தான்.
அவர் விளையாட்டாக எனக்கு ஜோதிடத்தை போதித்தார். நான் மூன்றாவது வரை பள்ளியையே கிட்டத்தட்ட புறக்கணித்தேன். என் தந்தையும் எனது ஆசிரியரும் தான் என்னை நேரிய வழியில் இட்டு சென்றனர்.
நான் நன்கு படித்தேன். கிட்டத்தட்ட எனது பள்ளி வாழ்வில் ஒவ்வொரு தேர்விலும் நானே முதல் மதிப்பெண் எடுத்துள்ளேன். ஆனாலும் ஜோதிடமும் என் வாழ்வில் எனது பன்னிரண்டு வயதில் இருந்து என் வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது.
ஜோதிடத்தில் நான் இன்னும் முழுமை அடையவில்லை என்ற எண்ணத்தில் யான் இருந்தாலும் போதிக்கும் தகுதி வந்து விட்டதால் – என் தந்தை எனக்கு சொன்னவை – நானே பல நூல்களை வாங்கி படித்து தெரிந்து கொண்டவை – பல ஜாதகங்களை பார்த்த அனுபவங்களை – உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன்.
இடையிடையே மற்ற நிகழ்வுகள், அனுபவங்கள், எனக்கு பிடித்தவை என பலவற்றையும் இதன் மூலம் சொல்ல உள்ளேன்.
ஜோதிடம் – பாடம் ஒன்று 
இவ்வுலகம் நம்மை சுற்றி உள்ளது. அதன் ஒரு குறிப்பிட்ட எல்லையில் தொடர்ச்சியாய் பன்னிரண்டு இடங்கள் உள்ளன. அவற்றை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருட்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்று ரிஷிகளும் முனிவோரும் நமக்கு அருளி சென்றுள்ளனர்.
ஜாதக கட்டத்தில் நடுவில் இராசி என்று ஜோதிடர்கள் எழுதியுள்ள கட்டம் இவ்வுலகை குறிப்பதாகும்.
ல என்று போட்டுள்ள கட்டம் நாம் பிறந்த போது இப்பூமியின் கிழக்கு திக்கை சொல்வதாகும். அதாவது ஜாதகரின் உடல், பெருமை, அமைப்பு, உயர்வு ஆகியவற்றை சொல்லும் இடமாகும். ஆகவே இதனை லக்கினம் என்கிறோம்.
மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கும் போது சிந்திப்போம்.