Tuesday, August 2, 2016

20. லக்கினங்களும் மூன்று நான்காமாதிகளும் 

பொதுவாக எந்த லக்கினம் ஆயினும் மூன்றாமாதி பாதி சுபரும் பாதி அசுபரும் ஆவாராம். ஆனால் சுபரே மூன்றாமாதியானால் அவர் பூரண சுபர் ஆவாராம். ஆனால் அசுபர் மூன்றாமாதியானால் அவர் அசுபராம்.

மேஷத்துக்கு புதன் மூன்றாமாதியும் ஆறாமாதியும் ஆவதால் அவர் அசுபராம். இவர் கேந்திர கோணங்களில், தன இலாபத்தில் நிற்பது வரவேற்க தக்கதல்ல. மறைவிடத்தில் நின்று வலுத்து, சுபர் பார்வை பெறுவது நல்லதாம். அசுபர் பார்வை மட்டும் பெற்றால் தீதாம்.

ரிஷபத்துக்கு சுபராம் சந்திரன் மூன்றாமாதிபதி ஆவதால் அவர் நல்லவராம். ஆனால் அவர் மாரகரும் கூட!. ஆகவே இவர் அசுபர் சம்பந்தம் பெற்றால் தீமையே செய்வார்.

மிதுனத்துக்கு சூரியன் மூன்றாமாதிபதி ஆவதால் இவர் அசுபரே.

கடகத்துக்கு மூன்றாம் மற்றும் பன்னிரண்டாம் அதிபதி ஆவதால் புதனை சமர் என்றே சொல்ல வேண்டும். இவர் சுபருடன் சேர சுபராகவும், அசுபருடன் சேர அசுபராகவும் மாறுவார்.

சிம்மத்துக்கு சுக்கிரன் மூன்று மற்றும் பத்தாமிடங்களுக்கு அதிபதி ஆகின்றார். சுக்கிரன் பத்தாமாதி ஆவதால் அவர் கேந்திர தோஷம் மிக்கவராகி, அசுபர் ஆகின்றார். என்றாலும் இவர் 9 இல் அமர்ந்து செவ்வாயுடன் கூட அல்லது அவர் தம் பார்வையை பெற்றிட உயர் பலனை செய்வாராம்.

கன்னிக்கு மூன்றாமாதியாம் செவ்வாயே எட்டாமாதியாகவும் ஆவதால் அவர் அசுபராம்.

துலாவுக்கு மூன்றாமதியே ஆறாமாதியும் ஆவதால் குரு அசுபரே.

விருத்சிகத்துக்கு  மூன்றாமாதியே நான்காமாதியும் ஆவதால் சனி சமரே.

தனுசுக்கு மூன்றாமாதியே இரண்டாமாதியும் ஆவதால் அவர் சமரே.

மகரத்துக்கு மூன்றாமாதியே ஆறாமாதி ஆவதால் குரு அசுபராம்.

கும்பத்துக்கு மூன்றாமாதியாம் செவ்வாய் பத்துக்கும் அதிபதி ஆவதால் - இவருக்கு கேந்திர தோஷம் இல்லாததால் - இவர் சுபராம்.

மீனத்துக்கு மூன்றாமாதியாம் சுக்கிரனே எட்டாமாதியும் ஆவதால் அவர் பூரண அசுபராம்.

சுபராயின் அவர்கள் கேந்திர கோணம், தன, இலாபத்தில் நல்ல வலிமை யுடன் சுபர் சகிதம் இருக்க, உயர் பலனை தருவர் என்பது பொது விதியாம். இவர்கள் மறைவிடங்களில் இருப்பதும், அங்கு வலுவற்று போவதும் அக்கிரகத்தின் கார காரக பலன்களை குறைக்கும்.

அசுபராயின் அவர்கள் மறைவிடங்களில் நல்ல வலு பெற்றும் சுபர் பார்வையும் அடைந்திருக்க - விபரீத இராஜ யோகமாகி - உயர் பலனை அளிப்பார். ஆனால் அசுபர் சகிதம் இருக்க மோசமான பலனை மட்டுமே தருவார். இவர்கள் கேந்திர கோண தன, இலாபத்தில் இருக்க, அந்த இடத்து பலனில் அக்கிரக கார, காரக பலன்கள் சற்று தாழ்வுறும். மேலும் அசுபர் சகிதம் இருக்க, இன்னும் அவ்விடத்து பலன்கள் குறையுமாம்.

மேஷத்துக்கு நான்காம் அதிபதி சந்திரன் ஆவதால் - அது அவரது திக் வலு பாவம் ஆவதால் - அவர்   பூரண சுபராம்.

ரிஷபத்துக்கு நான்காம் அதிபதி சூரியன் ஆவதால் அவர் பூரண சுபராம்.

மிதுனத்துக்கு லக்கினாதிபதியாம் புதனே நான்காம் அதிபதி ஆவதால், அவர் சமராம். இவர் லக்கினத்தில் தனித்து நின்றால் பூரண சுபராம். நான்கில் அசுபருடன் நின்றால் பூரண சுபராம். இவர் ஏழு பத்தில் தனித்தோ அல்லது சுபருடன் சம்பந்தமுற்றோ நிற்க அசுபராம். அசுபருடன் நிற்க சுபராம். இவர் மறைவிடங்களில் இருப்பது நல்லதில்லையாம்.

கடகத்துக்கு நான்காம் அதிபதியே இலாபாதியான மாரகாதியும் ஆவதால் சுக்கிரன் அசுபராம். ஆனாலும் நான்கில் அமர்ந்து செவ்வாயின் பார்வை பெற உயர் பலனை தருவாராம்.

சிம்மத்துக்கு நான்காம் அதிபதியாம் செவ்வாய் ஒன்பதுக்கும் அதிபதி ஆவதால் - அவர் பூரண சுபராம்.

கன்னிக்கு நான்குக்கு அதிபதியாம் குரு ஏழுக்கும் அதிபதி ஆவதால் - அவ்விரண்டு பாவங்களும் குருவுக்கு கேந்திர தோஷமாய் ஆவதால் - குரு அசுபராம் மற்றும் மரணம் செய்யும் மாரகராம்.

துலாவுக்கு நான்காம் அதிபதியே ஐந்துக்கும் அதிபதி ஆவதால், சனி பூரண சுபர் ஆகின்றார்.

விருட்சிகத்துக்கு சனி சமராம். ஏனென்று ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது.

தனுசுக்கு லக்கினாதிபதியே நான்காம் அதிபதியும் ஆவதால் இவரும் சமராம். என்றாலும் லக்கினத்தில் அல்லது நான்கில் உள்ள குருவை செவ்வாய் அல்லது சூரியன் பார்க்க இவர் உயர் பலனை செய்வாராம்.

மகரத்துக்கு நான்காம் அதிபதியாம் செவ்வாயே இலாபாதியும் ஆவதால் இவர் மரணத்தை தரும் மாரகர் ஆகின்றார். இவர் லக்கினத்திலோ அல்லது நான்கிலோ ஐந்திலோ அமர்ந்து சுக்கிரனின் பார்வையை பெற்றால் உயர் பலனை செய்வாராம். செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து பத்து அல்லது இலாபத்தில் அமரவும் உயர் பலன் தருவார்களாம். இவர் கடகத்தில் சந்திரனுடன் கூடிட நீச்ச பங்க இராஜ யோகம் அடைந்து, முப்பது வயதுக்கு மேல் நன்மை அடைய வைப்பாராம்.

கும்பத்துக்கு நான்காம் அதிபதியாம் சுக்கிரனே ஒன்பதாம் அதிபதியும் ஆவதால் அவர் பூரண சுபராம்.

மீனத்துக்கு நான்காம் அதிபதியாம் புதனே ஏழாமாதியும், ஆவதால், அவர் மாரகராம்.

இனி அடுத்த பகுதியில் சந்தித்து சிந்திப்போம்

அன்பன்
அ .வீ. மாரிமுத்து  02 - 08 - 2016





No comments:

Post a Comment