Tuesday, August 2, 2016

21. உதாரணத்துடன் 

சுந்தர சேகரம் என்ற நூல் வெகு எளிய அருமையான நூல். அதில் கிரக சேர்க்கை மற்றும் பார்வையை பற்றி வெகு நன்றாக கூறப் பட்டுள்ளது.

ஒரு கேந்திராதிபதி சுபரானால் அவர் தன் திக் வலு பெற்ற கேந்திரத்தில் நின்றால் உயர் வலு அடைகின்றார்.

மேஷத்துக்கு சந்திரன் நான்கில் ஆட்சி பெற்று சுபரது பார்வை அல்லது கூடல் பெற உயர் பலனாம். ஏழாமாதி சுக்கிரன் நான்கில் இருப்பது நன்று தான். ஆனாலும் அங்கு அவர் பகையாவதால் நல்லதில்லை. ஒருவேளை அவர் அம்சையில் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நல்ல பலனை செய்வாராம்.

கடகத்துக்கு சந்திரன் லக்கினத்தில் நின்று சுபரும் நண்பருமான குருவுடன் சேர அல்லது பார்க்கப்பட அவர் நல்லவராம். ஒரு பாவாதிபதி தன் சொந்த பாவத்தை பார்ப்பது உயர்வு என்ற அடிப்படையில்.

கடகத்துக்கு நான்காமாதி சுக்கிரன் நான்கில் இருப்பது உயர்வாம். ஆனால் அவரே இலாபாதியும் ஆவதால், சர லக்கினத்துக்கு இலாபாதி ஆகார் என்னும் விதியின்படி இவர் நான்கில் இருந்து செவ்வாயின் பார்வை பெற்றால் உயர் பலனை செய்வாராம்.

இங்கு ஒரு கேள்வி எழுகின்றது. கடகத்துக்கு நான்கில் நின்ற சுக்கிரன் ஆட்சி தானே என்று. ஆட்சி பெற்ற எந்த கிரகமும் தன் கார பலனை மட்டும் உயர்த்தும் என்றும், காரக பலனை தாழ்த்திவிடும் என்றும் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது.

அது அப்படியாயின் அந்த சுக்கிரனை கடக லக்கினத்துக்கு சுபராகிய குரு பார்க்கலாமா என்று!

இன்னொரு விதியையும் இங்கு சொல்ல வேண்டும். இரு அல்லது அதற்கும் மேம்பட்ட கிரகங்கள் ஒரு வீட்டில் சம்பந்தப்படுகையில், அதில் ஒருவர் ஆட்சியானால், எல்லா கிரகங்களின் ஆதிபத்தியங்களையும் வைத்து தான் அவ்விடத்து பலனை கார, காரகப்படி முடிவு செய்ய வேண்டும்.

ஆக கடக லக்கினத்துக்கு நான்கில் ஆட்சியாய் உள்ள சுக்கிரனை குரு பார்க்கலாமா? பார்க்கலாம். நல்ல மனைவி, குழந்தைகள், வசதி வாய்ப்புக்கள் என்று ஜாதகனுக்கு அமையும் தான். ஆனால் அதனை தக்க வைத்து கொள்ள ஜாதகனுக்கு தெரியாது. ஏன்?

கடக லக்கினத்துக்கு நான்கில் நிற்கும் சுக்கிரன் திக் வலு அடைவதால் அவர் நல்லவரே. அதே லக்கினத்துக்கு குருவும் பூரண நல்லவர் தாம். என்றாலும் இருவரும் எதிரிகள் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

சுக்கிரனை பொறுத்தவரை குருவை பாக்கியாதிபதி என்று கருத மாட்டார். குருவை ஆறாமாதி என்றே பார்ப்பார். அதுபோல, குருவை பொறுத்த வரை சுக்கிரனை நான்காமாதி என கருத இடமில்லை. மாறாக இலாபாதிபதியாம் மாரகர் என்றே கருதுவார்.

விளைவு என்ன? நான்காமிடத்து கார, காரக பலன்களை சுக்கிரன், குரு ஆகியோரை பொறுத்தவரை கெடுப்பர். வாகனம், கால் நடைகள், சுகம், உறவினர்கள், சுப சடங்குகளில் தாமதம், கவலை போன்றவற்றை அளிப்பர்.

ஆனால் குரு சுக்கிரனை பார்த்ததால் நீண்ட ஆயுளுடைய மனைவியும் அமைவாள். ஆனால் அவளோடு ஒத்து போக இயலாமல் ஜாதகனின்  இயல்பு அல்லது மனைவியின் போக்கு அமையும்.

மேஷ லக்கினத்துக்கோ அல்லது கடக லக்கினத்துக்கோ கடகத்தில் குருவும் சந்திரனும் கூடுவது உயர்வாம். காரணம், அவ்விருவரில் ஒருவர் ஆட்சியாகி அவ்விருவரும் நல்ல ஆதிபத்தியராய் மாறுவதே.

கடக லக்கினத்துக்கு குரு ஆறாமாதிபதி ஆனாலும், சந்திரனை பொறுத்த அளவில் குரு ஒன்பதாம் அதிபதியாய் மட்டுமே விளங்குவார்.

மேஷ லக்கினத்துக்கு குரு விரயாதிபதி ஆனாலும், சந்திரனை பொறுத்த அளவில் குரு பாக்கியாதியாய் மட்டுமே இருப்பார்.

ஆக கோள்களின் கூடலில் ஏதேனும் ஒரு கிரகம் ஆட்சியாய் இருந்திட, எல்லா கிரகங்களின் ஆதிபத்தியத்தை கருத்தில் கொண்டும், அவ்விரு கிரகங்களும் பரஸ்பரம் நட்பா அல்லது பகையா அல்லது சமமா மற்றும் அவ்விரு கிரகங்களும் சுபரா அல்லது அசுபரா என்று கண்ட பிறகே ஒரு முடிவுக்கு வரல் வேண்டும்.

கூடலில் எந்த கிரகமும் ஆட்சி இல்லை எனில், அக்கூடலில் உள்ள கிரகங்களை வெறும் காரகர்களாகவே கருதி, அவர்கள் தங்களுக்குள் பகையா, சமமா, நட்பா என்றும், சுப அசுபரா என்றும், அவ்வீட்டில் அவர்கள் பெற்ற வலுவையும் கொண்டு பலனை நிர்ணயிக்க வேண்டுமாம்.

இன்னும் உதரணங்களை தர வேண்டியுள்ளதால் அடுத்த பகுதியில் சந்திப்போம்.

அன்பன்

அ .வீ . மாரிமுத்து  03 - 08 - 2016


No comments:

Post a Comment