Saturday, August 6, 2016

26. பிறந்த நாள்

நான் ஏன் பிறந்தேன் என்று புரட்சி தலைவர் எழுதினார். I am not Mahatma; I am an alpathma என்று தன்னை தாழ்த்தியே தேசத் தந்தை தன் சுய சரிதயை துவங்கியுள்ளார். இப்புவியில் பிறந்ததே நம் குறைகளால் மட்டுமே என்றும் அப்படி பிறந்த நாம் நம் தவறுகளை இப்பூமியில் உள்ள போதே திருத்தி வாழ்ந்தால், உன்னத நிலையை அடையலாம் என்றும் பல நீதி நூல்கள் சொல்லுகின்றன.

நீதி நூல்கள் சொல்லுவனவற்றுள் நமக்கு சாதகமாக எது உள்ளது என்று பார்ப்பதிலேயே இன்றுள்ளவர்கள் இருப்பதால் - மனித நேயமும் மாண்பும் பலரிடம் வற்றியே காணப்படுகின்றது.

என்றாலும் இன்றும் அடுத்தவருக்கு இரங்கும் மனிதர் ஓரு சிலர் இல்லாமல் போகவில்லை. அன்னை தந்தையரை சாகும் வரை கண்ணும் கருத்துமாய் காப்பாற்றும் புத்திரர்கள் இருக்கவும் செய்கிறார்கள். மாமனார், மாமியாரை நேசிக்கும் எத்தனையோ மங்கையரும் தான் உள்ளார்கள். அண்டை அயலாரை நேசிக்கும் விந்தை மனிதரும் உள்ளனர்.

என் இனிய இந்த பிறந்த நாளில் நான் கேக் வெட்டுவதை விட, மேற்சொன்ன அந்த நல்ல உள்ளங்களுக்கு எனது ஆசிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

இன்று என் பேத்தியிடம் ஓரு கதை சொன்னேன்.

ஒரு உக்கிரமான வெயில் கால பகல் போதில், ஒரு தவ முனிவர் அலைந்து திரிந்து ஒரு வேப்ப மர நிழலில் வந்து நின்றார். அவருக்கு அந்த வேப்ப மர நிழல் அவ்வளவு இதமாக இருந்தது. ஆகவே, அவர் அவ்விடத்தை விட்டு அகலும் முன்பு, அம்மரத்திடம் என்ன வேண்டும் என்று கேட்டார்.

மரம் உடனே அழாத குறையாக - முனிவரே! நான் முப்பது அடி வரை வளர்ந்து என்ன பயன்? என் பழங்களை மனிதர் யாரும் புசிப்பதில்லையே! பறவைகள் மட்டுமே கொத்தி தின்னுகின்றன. ஆகவே ஆப்பிள் பழம் போல சுவை மிகுந்ததாயும் தேங்காயை போல் உறுதியான தோலும் உள்ள பழமாய் நான் உருவாக்கிட அருளுங்கள் என்றது.

உடனே அம்முனிவர் அம்மர அடியில் அமர்ந்து கண்களை மூடி ஈசனை நினைந்து - அந்த மரத்துக்கு கடின தோலுடைய சுவை மிகுந்த பழத்தை பெரிய அளவில் படைக்குமாறு வேண்டினார்.

ஈசன் சொன்னார் - கேட்பதற்கு முன்னர் யோசித்து கேள் என்றார். முனிவரும் பிடிவாதமாய் இருந்ததால், ஈசன் முனிவரிடம் ஒரு நிபந்தனை விதித்தார்.

இறைவன் அம்மர உச்சியில் முதலில் ஒரு பழத்தை மட்டும் படைப்பதாயும், அப்பழத்தினால் நன்மை உண்டாகும் என்று முனிவர் தன் வாயால் சொன்னால், பின்னர் அந்த மரம்  முழுவதும் பெரிய அளவு பழங்களை படைப்பதையும் ஈசன் ஒத்துக் கொண்டார்.

வேறு வழியில்லாமல் முனிவரும் அம்மரத்தின் அடியிலேயே சில காலம் தங்க வேண்டி வந்தது.

பூ, பிஞ்சு, காய், பழம் என்று சில நாட்களில் முனிவரின் மனம் குளிர, வேப்ப மரம் பழம் ஒன்றை தன்னுள் கொண்டிருந்தது.

அதனை பார்த்த அந்த முனிவர், அந்த பழத்துக்கு நேர் கீழே அமர்ந்து கண்களை மூடி, தலைவிரி கோலமாய் தவம் செய்ய ஆரம்பித்தார். பழம் விழும் நேரமும் வந்ததால், கீழே விழுந்தது. மிக உயரத்தில் இருந்து விழுந்ததால் முனிவர் கபால மோட்சம் அடைந்தார்.

இனி இது மாதிரி பழங்களையே அந்த மரம் தர வேண்டும் என்று சொல்ல வேண்டிய முனிவரும் இறந்து போனதால், வேப்ப மரம் இது வரை வேப்பம் பழங்களை மட்டுமே தந்த வண்ணம் உள்ளன.

அடுத்த முனிவர் யாரேனும் வருவாரா என்று ஏக்கத்துடன் அந்த வேப்ப மரம் இன்னும் எதிர் நோக்கி காத்துள்ளது.

அம்முனிவருக்கு ஏற்பட்ட கபால மோட்சத்தை அறிந்த மற்ற முனிவர்களும் அம்மரத்திடம் செல்லாமல் இன்றும் விலகி போவதை பலர் சொல்ல நானும் கேட்டிருக்கின்றேன்.

நல்ல வேளை! நியூட்டன் மேல் பலாப் பழம் விழவில்லை. புவி ஈர்ப்பு விதி நமக்கு கிடைக்க வேண்டும் என்பதுவும் அதற்கு ஒரு காரணமோ?

எல்லோருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

எல்லா நலமும் எல்லா வளமும் அனைவரும் பெருக!

வாழ்க வளமுடன்!

அன்பன்

அ .வீ .மாரிமுத்து    07 - 08 - 2016

No comments:

Post a Comment