Thursday, August 4, 2016

25. இன்னும் நீச்சத்தை பற்றி 

நீச்சனும் உச்சனும் சேர அதனை நீச்ச பங்க இராஜயோகம் என்று ஒரு சாரார் சொல்லுகின்றனர். ஆனால் அதனை அனுபவத்தில் முழுமையாக ஏற்று கொள்ள இயலவில்லை.

விருட்சிக லக்கினத்துக்கு 9 இல் குரு உச்சமாயும், உடன் அருகில் செவ்வாய் நீச்சமாயும் இருக்கையில் -  அதனை இராஜ யோகம் என்று சொல்வதா? அல்லது அது அவ்வாறு இல்லை என்று சொல்வதா?

இங்கு ஒன்றை உணர்த்தியே ஆக வேண்டும். ஒரு கிரகம் தனித்து நீச்சம் அடைந்தாலும் அல்லது ஒரு கிரகம் இன்னொரு நீச்ச கிரகத்துடன் சேர்ந்தாலும் அக்கிரக காரக உறவினரை தாழ்த்தியே சொல்ல வேண்டும்.

விருட்சிக லக்கினத்துக்கு ஒன்பதில் நீச்சனும் உச்சனும் அருகருகே ஒன்று சேர - அவ்விரு கிரகங்களின் உறவினர்களான குழந்தை மற்றும் சகோதரர்கள் ஆகியோர் இல்லாது போவர். அல்லது இருந்தும் பயனற்று போவாராம்.

இந்த ஜாதகனுக்கு மகன் இல்லை. ஒரே ஒரு மகள் தான் உண்டு. குருவுடன் செவ்வாய் கூடியதால் இந்த பலனாம். இந்த ஜாதகனுக்கு நிறைய சகோதரர்கள் பிறந்து அதில் பலர் இறந்து - இருவர் மட்டுமே நிலைத்தனர். அவர்களும் வாழ்வில் உயர் நிலைக்கு போக வில்லை.

ஆனால் குருவும் செவ்வாயும் கூடியதால் - அது நீச்ச பங்கம் ஆவதால் - இந்த ஜாதகன் ஒரு விதமான இராஜ யோகத்தை அனுபவித்து வருகின்றான். ஒன்பதாமிடம் தெய்வங்களை குறிக்கும் இடம். குரு தெய்வ வழிபாட்டை  சொல்பவர். செவ்வாய் பிடிவாதம் - சாகசம் ஆகியவற்றை சொல்பவர். இந்த ஜாதகன் ஒரு மந்திரவாதியாய் இருக்கின்றான். நிறைய சம்பாதிக்கவும் செய்கின்றான்.

இதே லக்கினத்துக்கு ஒன்பதில் குரு 28 பாகையிலும் செவ்வாய் 15 பாகையிலும் - சற்று விலகி - இருக்க, (இருவரும் ஒரே பாவத்தில் இருந்த போதிலும், ஒருவரை ஒருவர் பாராததால்)  இது உண்மையான நீச்ச பங்கம் ஆகுமாம். அதாவது அம்சையில் இருவரும் ஆட்சி ஆகின்றனர்.

ஆகவே நீச்சனுடன் சேராத உச்சன் குரு, ஜாதகனுக்கு மகனை கொடுத்து விடுவார். அந்த மகனும் உயர் நிலைக்கு வந்தும் விடுவார். செவ்வாய் தனித்து நீச்சம் அடைந்தாலும், அவர் அம்சையில் ஆட்சி அடைந்ததால், சகோதரர்களும் அவரவரது முப்பது வயது வாக்கில், வாழ்வில் உயர வாய்ப்புண்டாம்.

உச்சனை ஒரு நீசன் பார்த்தாலும் இந்த கதி தான்! மகர லக்கினத்துக்கு ஐந்தில் நின்ற உச்ச சந்திரனை, லக்கினத்தில் நின்ற நீச்ச குரு பார்த்தாலும், - -- அது உறவுகளான - அன்னை மற்றும் குழந்தையை கெடுக்கும் என்பதை அறிக. ஆனால் அன்னையையும் குழந்தையையும் கொடுத்தே குழப்பங்களை அளிப்பாராம். ஐந்தில் உச்சன் அமர்ந்ததால் இப்பலனாம்.

கன்னி லக்கினத்துக்கு ஏழில் சுக்கிரனும் புதனும் அருகருகே சேர, அவனுக்கு அம்மானும் மனைவியும் ஏதேனும் குறையுடன் இருப்பர். சுக்கிரன் உச்சம் ஆவதால் மனைவி நீண்ட ஆயுளையும், புதன் நீச்சம் ஆவதால் அம்மான் மத்திய ஆயுளையும் பெற்றிருப்பராம்.

ஏழில் இரு சுபர் இருப்பது கேந்திர தோஷத்தை குறிப்பதாம். என்றாலும் உச்ச சுக்கிரனுடன் நீச்ச புதன் சேர்ந்ததால் - இருவரும் சுபர் ஆவதால் - ஜாதகன் இளமையில் கல்வியில் தடையை அனுபவிப்பான். ஆனால் முப்பது வயதுக்கு மேல் ஜாதகன் வாக்கு சம்பந்த தொழிலில் ஈடுபடுவான்.

ஒருவரது தொழிலை நிர்ணயம் செய்ய, ஒன்றாமிடம், இரண்டாமிடம், பத்தாமிடம், இலாப பாவம் ஆகியவற்றில் நின்ற வலுவான கிரகங்கள் மற்றும் மேற்சொன்ன இடங்களின் அதிபதியுடன் கூடிய வலுத்த கிரகத்தால் அறிய வேண்டும் என்பர் ஜோதிட வல்லுனர்கள். இதை ஓட்டியே மேலே பலன் சொல்லப்பட்டதாம்.

இந்த நீச்ச பங்கத்துக்கும் முப்பது வயதுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. முப்பது வயது வரை மோசமான பலன்களை அடைந்த பிறகு தான் வாழ்வில் முன்னேறும் நிலை அமையும்.

இன்னும் நீச்சத்தை பற்றி உதாரணத்துடன் பேச வேண்டியுள்ளது.

அடுத்த பகுதியில் சந்திப்போம்.

அன்பன்

அ .வீ . மாரிமுத்து   04 - 08 - 2016

No comments:

Post a Comment