Friday, July 29, 2016

லக்கினம் கண்டோம்

துர்முகி வருடம் ஆடி மாதம் ஐந்தாம் தேதி முன்னிரவு பத்து மணி ஐந்து நிமிடத்துக்கு ஒரு குழந்தை  பிறந்துள்ளது என்று அறிகின்றீர்கள். பொதுவாக திங்கள், புதன், வெள்ளியில் முதல் அரை மணி நேரத்தில் பெண் குழந்தையே பிறக்கும். இது பொது விதியாகும்.  அடுத்த அரை மணியில் ஆண்குழந்தை பிறக்கும் என்பதுவும் உண்மையே.
ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளின் முன் அரை மணியில் ஆண் குழந்தையும், பின் அரை மணியில் பெண் குழந்தையும் பிறக்கும் என்பதுவும் ஜோதிட கருத்து ஆகும்.
இப்போதெல்லாம் அறுவை சிகித்சையிலேயே எல்லா குழந்தைகளும் பிறப்பதால் இதனை கூர்ந்து பார்க்க வேண்டியதே இல்லை.
ஆம்! இது பெண் குழந்தை தான்!
குழந்தை பிறந்த தேதி, குழந்தை பிறந்த நேரம், குழந்தை பிறந்த இடம் ஆகியவை கேட்டாயிற்று.
குழந்தை பிறந்த இடத்தில் வழக்கில் உள்ள பஞ்சாங்கத்தை மட்டுமே ஜாதகம் குறிப்பதற்கு உபயோகப்படுத்த வேண்டும்.
கோயம்புத்தூரில் பிறந்த குழந்தைக்கு சென்னையில் உள்ள பஞ்சாங்கத்தை உபயோகித்தால் சில சமயங்களில் ஜாதகத்தில் குறைகள் ஏற்பட வாய்ப்புண்டாம்.
பஞ்சாங்கத்தில் அந்தந்த ஊருக்கு அல்லது பக்கத்து ஊருக்கு ஏற்றபடி - ஒவ்வொரு இராசிக்கும் உள்ள நாழிகை போடப் பட்டிருக்கும். அதைத் தான் நாம் லக்கினம் கணிப்பதற்கு உபயோகப்படுத்த வேண்டும்.
துர்முகி வருடத்தின் ஆடி மாதத்தில் 5 ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. அதாவது ஆடி மாதத்தில் ஏற்கனவே நான்கு முழு  நாட்கள் முடிந்துள்ளன. ஆடி மாதத்தில் மொத்தம் 32 நாட்கள் உள்ளன. ஆடி மாதத்தில் இன்னும் 28 நாட்கள் செல்ல வேண்டியுள்ளது.
கடக இராசியில் தான் சூரியன் உள்ளார். ஆக இங்கிருந்து தாம் லக்கினத்தை கணிக்க துவங்க வேண்டும். கடக இராசிக்கு மொத்தம 5 நாழிகை 20 விநாழிகை உண்டென்றாலும் குழந்தை பிறந்த அன்று - அந்த கடக இராசியில் அன்றைய சூரிய உதயத்தில் - கடக இராசியின் இருப்பு மீதியுள்ள 28 நாட்களை பொறுத்து சற்று குறைந்தே இருக்கும்.
ஆக ஆடி மாதத்துக்கான கடகத்தின் நாழிகையான ஐந்து நாழிகை இருபது விநாழிகையில் மீதி  இருப்பை காண - 5 நாழிகை 20 வினாழிகைக்கு உண்டான மொத்த வினாழிகையாம் 320 வினாழிகையை 32 ஆல் வகுத்து 28 ஆல்  பெருக்கினால் - வருவது 280 விநாழிகை ஆகும். அதாவது  4 நாழிகை  40 விநாழிகை ஆகும். (ஒரு வேளை சூரியன் கடகத்தில் நுழைந்தது இரவில் என்றால் இந்த காலம் சற்று கூடுதலாய் இருக்கும்.)
எனவே பஞ்சாங்கத்தில் அந்த தேதிக்கு அருகில் போட்டிருக்கும் கடக இருப்பு என்று குறித்திருக்கும் அந்த நேரத்தை எடுத்து கொள்ளுங்கள்.
பஞ்சாங்கத்தில் 4  நாழிகை 44 விநாழிகை என்று போடப்பட்டுள்ளது.
நமக்கு சூரியன் தினந்தோறும் காலை ஆறு மணிக்கு தான் உதிக்கிறார் என்று நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அவர் வெவ்வேறு நேரத்தில் உதிக்கிறார் என்பதை பஞ்சாங்கத்தில் நாம் அறியலாம்.
பஞ்சாங்கத்தில் அன்றைய சூரிய உதயம் காலை 5 மணி 55 நிமிடத்துக்கு உதித்து இருக்கிறார் என்று போடப்பட்டுள்ளது.
ஆக சூரியன் உதித்ததில் இருந்து குழந்தை பிறந்த நேரமான இரவு 10 மணி 05 நிமிடத்துக்கு - 22 மணி 05 நிமிடத்துக்கு ( 22 - 05 இல் 5 மணி 55 நிமிடத்தை கழிக்க ) சூரிய உதயம் தொட்டு குழந்தை பிறந்த நேரம் வரை  காலம் 16 மணி 10 நிமிட நேரம் ஆகும்.
இதனை நாழிகையாக்க (ஒரு மணிக்கு இரண்டரை நாழிகை என்ற முறையில்) சூரியன் உதித்ததில் இருந்து குழந்தை பிறந்தவரை உள்ள காலம் 40 நாழிகை 25 விநாழிகை ஆகும்.
இதனை ஜோதிடர்கள் உதயாதி நாழிகை என்பர்.
மீண்டும் சந்திப்போம்
அன்பன்
அ.வீமாரிமுத்து   27 - 07 - 2016


No comments:

Post a Comment