Friday, July 29, 2016

சிதம்பரத்தில் 

ஒரு நாள் நான் சிதம்பரத்தில் நடராஜரையும் பெருமாளையும் தரிசித்து கொண்டிருந்தேன். அப்போது இரு நண்பர்கள் அங்கு வந்து பேசியதை இங்கு சொல்ல விழைகிறேன்.
அதில் ஒருவர் விஷ்ணு பக்தர். அவர் சிவ பக்தரான தன் நண்பரிடம் சொன்னார் - பார்த்தாயா? என் விஷ்ணு எத்தனை அசட்டையுடன் உன் கடவுள் சிவனை நோக்கி கால் காட்டி படுத்துள்ளார் என்று!
அதற்கு அந்த சிவ பக்தர் விளக்கம் கூறினார் - அட போப்பா! எங்க கடவுள் சிவன் உங்கள் கடவுளை - அப்படியே கிட! இல்லாவிட்டால் மிதித்து விடுவேன் - என்று காலை தூக்கி காட்டுகிறாரே என்றார்.
அவ்விருவரும் பேசியதை கேட்டு அங்கு நின்ற ஒரு வயதானவர் அவ்விருவரிடமும் சொன்னார்.
விஷ்ணு காக்கும் தெய்வம் ஆவார். அவர் தமது காக்கும் தொழிலை செய்து அலுத்து வந்து ஓய்வெடுக்கும் போதும், நடராஜனின் ஆடலில் மயங்கி ரசிப்பதற்காக, அவர் பக்கம் பார்த்த வண்ணம் படுத்து ரசிக்கின்றார் என்றார்.
அந்த காக்கும் தெய்வமாம் விஷ்ணுவின் அயர்வு தீர, நடராஜரும் தன் நடனம் மூலம் விஷ்ணுவின் களைப்பையும், அயர்வையும் நீக்குகின்றார்.
நம் இந்து மதத்தில் பல கடவுளரை படைத்தது அவர்களிடையே பேதம் காண்பதற்கு அல்ல. இவ்வுலகில் பல தரப்பட்ட மனிதர் இருப்பினும் சிவன், விஷ்ணு போல் ஒருவருக்கொருவர் பாசத்துடனும் அன்புடனும் அனைவரும் இருக்க வேண்டும் என்று உணர்த்திடவே
எல்லா மனிதரும் ஒரே மாதிரி ஒத்த உயர் குணம் கொண்டவர் அல்ல என்று காட்டுவதே இறைவனின் தத்துவம் ஆகும். ஒருவரது ஆக்கத்திலும் செய்கையிலும், பேச்சிலும், நடவடிக்கைகளிலும் நல்லவற்றை ஏற்றும், கெட்டவற்றை விடுத்தும், மதித்து நேசிப்பதே மனிதரின் கடமை ஆகும் என்பதை அறியுங்கள் என்றார்.
ஒரு இந்துவாக இருந்து கொண்டு, இந்து கடவுளரிடையே பேதமும் துவேஷமும் கொள்ளும் நீங்கள், மற்ற மதத்தையோ அல்லது மற்ற மதத்து தெய்வங்களையோ எவ்வாறு மதிக்கவும் போற்றவும் போகின்றீர்களோ எனக்கு தெரியாது.
இத்தகைய காழ்ப்புணர்ச்சி தான் பிற்காலத்தில் மத சண்டைக்கும் கலவரத்துக்கும் காரணம் ஆகின்றது. ஆகவே ஒரே கோயிலில் இருக்கும் இந்த இரு கடவுளரையும், வேற்றுமை பார்க்கும் குணத்தை மாற்றி, எல்லா மதங்களும் கடவுளரும் மனிதரின் நன்மைக்கும் உயர்வுக்கும் மட்டும் தான் என்று உணர்ந்து, பின்னர் அத்தெய்வங்களை வணங்க வாருங்கள் என்றார்.
நாம் எல்லாம் அப்படித் தானா?
அன்பன் அ. வீ. மாரிமுத்து   
25 - 07 - 2016

No comments:

Post a Comment