Friday, July 29, 2016

எமக்கு தெரிந்தது உமக்கும்

என் பன்னிரண்டு வயதில் நானும் என் தந்தையும் முதன் முதலில் ஜோதிடத்தை பற்றி பேசினோம் என்று நினைக்கிறேன். அவர் மண்பாண்டம் செய்யும் குயவர் ஆவார். அவரது முன்னோர்கள் வாயிலாக ஜோதிடம் அவருக்கு கைவரப் பெற்றது. இரண்டு தொழிலும் சேர்ந்து அவரை நிலம் வாங்க வைத்து அவரை நிலக்கிழார் ஆக்கியது.
காந்தியை போல் கிழே ஒரு வேட்டியும் மேலே ஒரு வேட்டியும் அணிந்திருப்பார். என் தந்தை சட்டை போட்டு நான் பார்த்ததே இல்லை.
அவரது வாழ்வு அவ்வளவு எளிதானது. எனது முக்கியமான நண்பரே என் தந்தை தான்.
அவர் விளையாட்டாக எனக்கு ஜோதிடத்தை போதித்தார். நான் மூன்றாவது வரை பள்ளியையே கிட்டத்தட்ட புறக்கணித்தேன். என் தந்தையும் எனது ஆசிரியரும் தான் என்னை நேரிய வழியில் இட்டு சென்றனர்.
நான் நன்கு படித்தேன். கிட்டத்தட்ட எனது பள்ளி வாழ்வில் ஒவ்வொரு தேர்விலும் நானே முதல் மதிப்பெண் எடுத்துள்ளேன். ஆனாலும் ஜோதிடமும் என் வாழ்வில் எனது பன்னிரண்டு வயதில் இருந்து என் வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது.
ஜோதிடத்தில் நான் இன்னும் முழுமை அடையவில்லை என்ற எண்ணத்தில் யான் இருந்தாலும் போதிக்கும் தகுதி வந்து விட்டதால் – என் தந்தை எனக்கு சொன்னவை – நானே பல நூல்களை வாங்கி படித்து தெரிந்து கொண்டவை – பல ஜாதகங்களை பார்த்த அனுபவங்களை – உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன்.
இடையிடையே மற்ற நிகழ்வுகள், அனுபவங்கள், எனக்கு பிடித்தவை என பலவற்றையும் இதன் மூலம் சொல்ல உள்ளேன்.
ஜோதிடம் – பாடம் ஒன்று 
இவ்வுலகம் நம்மை சுற்றி உள்ளது. அதன் ஒரு குறிப்பிட்ட எல்லையில் தொடர்ச்சியாய் பன்னிரண்டு இடங்கள் உள்ளன. அவற்றை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருட்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்று ரிஷிகளும் முனிவோரும் நமக்கு அருளி சென்றுள்ளனர்.
ஜாதக கட்டத்தில் நடுவில் இராசி என்று ஜோதிடர்கள் எழுதியுள்ள கட்டம் இவ்வுலகை குறிப்பதாகும்.
ல என்று போட்டுள்ள கட்டம் நாம் பிறந்த போது இப்பூமியின் கிழக்கு திக்கை சொல்வதாகும். அதாவது ஜாதகரின் உடல், பெருமை, அமைப்பு, உயர்வு ஆகியவற்றை சொல்லும் இடமாகும். ஆகவே இதனை லக்கினம் என்கிறோம்.
மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கும் போது சிந்திப்போம்.

No comments:

Post a Comment