Friday, July 29, 2016

 லக்கினம் காண

இராசிகள் பன்னிரண்டும் நட்சத்திரங்கள் இருபத்தேழும் எவ்வாறு அமைந்துள்ளன என்று பார்த்தோம். ஒவ்வொரு நாளும் விடியும் போது சூரியன் இருக்கும் இராசியே கிழக்கில் உள்ளதாக - அதாவது லக்கினமாக அமைகின்றது என்று அறிந்து கொண்டோம்.
விடிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக லக்கினமும் வலம்புரியாக மாறிக் கொண்டே வருகின்றது. ஒவ்வொரு இராசிக்கும் 30 பாகைகள் என்று சொன்னாலும் - ஒரு நாளைய 24 மணி நேரத்துக்கான 60 நாழிகையில் -
மேஷத்துக்கு நாலே கால் நாழிகையாகவும், ரிஷபத்துக்கு நாலே முக்கால் நாழிகையாகவும், மிதுனத்துக்கு ஐந்தே கால் நாழிகையாகவும், கடகத்துக்கு ஐந்தரை நாழிகையாகவும், சிம்மத்திற்கு ஐந்தே கால் நாழிகையாகவும், கன்னிக்கு ஐந்து நாழிகையாகவும், துலாத்துக்கு ஐந்து நாழிகையாகவும், விருத்சிகத்துக்கு ஐந்தே கால் நாழிகையாகவும், தனுசுக்கு ஐந்தரை நாழிகையாகவும், மகரத்துக்கு ஐந்தேகால் நாழிகையாகவும், கும்பத்துக்கு நாலே முக்கால் நாழிகையாகவும், மீனத்துக்கு நாலே கால் நாழிகையாகவும் - ஆக மொத்தம் அறுபது நாழிகையாக ஒவ்வொரு இராசிக்கும் நேர அளவில் அன்றாடம் லக்கினம் கடக்க வேண்டிய தூரத்தை அளவிட்டு முனிவர்கள் நமக்கு சொல்லியுள்ளனர்.
ஆனால் இந்த நாழிகைகள் ஒவ்வொரு ஊரும் அமைந்துள்ள இடத்துக்கு தக்கவாறு சற்று கூடுதலாக அல்லது குறைவாக அவையவை அமைந்துள்ள அட்சாம்சத்துக்கு தகுந்த மாதிரி மாறுபடும். இதனை பஞ்சாங்கத்தில் துல்லியமாக் கண்டு கொள்ளலாம்.
சூரியன் ஒரு மாதத்தில் ஒரே இராசியில் இருந்த போதிலும், ஒவ்வொரு நாளிலும் அவர் இருக்கும் இடம் மாறுபடும். புரட்டாசி மாதத்தில் சூரியன் மூன்றாம் தேதி முடிவில் கன்னி இராசியில் அதன் ஆரம்பத்தில் இருந்து கிட்டத்தட்ட மூன்று பாகையில் இருப்பார். அதாவது கன்னியின் நாழிகையான ஐந்து நாழிகையில் (300 விநாழிகையில்) 30 விநாழி கடந்து நிற்பார். அதாவது கன்னியில் புரட்டாசி மாதம் 4 ஆம் தேதி காலையில் கன்னி லக்கினம் கடக்க இன்னும் நாலரை நாழிகை உள்ளது என்று பொருள்.
அவரே புரட்டாசி மாதத்தின் 20 ஆம் தேதியின் முடிவில் கன்னியின் 20 பாகையில் இருப்பதால் புரட்டாசி மாதத்தின் 21 ஆம் தேதியின் காலையில் கன்னி இலக்கின இருப்பு ( 300 - 20X 10 = 100 விநாழி) ஒரு நாழிகை நாற்பது விநாழிகையாக இருக்கும்.
இனி புரட்டாசி மாதத்தில் எந்த நேரத்தில் குழந்தை பிறந்ததோ அந்த நேரம் வரை லக்கினம் எந்த ராசிக்கு நகர்ந்துள்ளது என்று கண்டு, பிறந்துள்ள குழந்தையின் லக்கினத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
அடுத்து வரும் பகுதியில் ஒரு உதாரணத்துடன் நாம் சந்திப்போம்.
ஜோதிடம் புரட்டு அல்ல. அதில் பல விதிமுறைகள் உள்ளன. அவற்றை புரிந்து கொள்ளாததே புரட்டு என்பதற்கு வழி கோலுகின்றது. ஜோதிடம் ஒரு கலை. அது ஒரு விஞ்ஞானம்.
இந்த ஜோதிடத்தில் கரை கண்டவர் பிரம்மனை தவிர வேறொருவரும் இவ்வுலகில் இதுவரை பிறக்கவில்லை. ஆனாலும் கொஞ்சம் சிரமப்பட்டால் எந்த ஒரு ஜாதகத்திலும் என்பது விழுக்காடாவது உண்மையை கண்டு பிடித்து விடலாம்.
யானும் இதுவரை முழு கிணறு தாண்டியதில்லை. ஆனால் அதற்கு இன்னும் முயன்று கொண்டிருக்கின்றேன்.
அன்பன்
அ.வீ.மாரிமுத்து.

No comments:

Post a Comment