Friday, July 29, 2016

லக்கினம், இராசி, பாவம்
 
லக்கினம் எப்படி அமைகிறது என்று இதுவரை பார்த்தோம். இந்த லக்கினம் தான் ஒருவரது குணத்தை, நிறத்தை, உயரமாஅல்லது குள்ளமா என்பதை, உயர்வை அல்லது தாழ்வை, அவர் யார் மூலம் பயனுறுவர் அல்லது ஏமாற்றப்படுவார் என்பதை, அவரது வருமானத்தின் தன்மை போன்றவற்றை சொல்லும் இடமாகும்.
லக்கினம் தான் ஜாதகனின் முழு அங்க அடையாளம், குணம், நடத்தை, வருமானம், பக்தி, புகழை சொல்லும்.
லக்கினத்துக்கு அடுத்த இராசியை இரண்டாம் பாவம் என்கிறோம். இது தனம், செல்வம், குடும்பம், குடும்பத்தினர், வாக்கு, கல்வி, பேச்சு, செய்தொழில், வருமானம் போன்றவற்றை சொல்லுமாம்.
ஆக இராசி என்றால் மேஷம், ரிஷபம் என்று இவ்வாறு வருவதை குறிக்கும் என்றும், பாவம் என்றால் ஒருவரது லக்கினத்தில் இருந்து எண்ணப்படுவது என்றும் அறிக.
லக்கினத்தில் இருந்து வலம்புரியாக எண்ண வரும் மூன்றாவது இடத்தை மூன்றாம் பாவம் அல்லது சகோதர பாவம் என்பர். இதனை வைத்து ஜாதகரின் உத்தியோகம், கோழைத்தன்மை, வீர தீரம், பராக்கிரமம், தொலைத் தொடர்பு வசதிகள், சிறு தூர பிரயாணங்கள், பழகும் தன்மை, கடித போக்கு வரத்து, பக்தி, மாமனார் போன்றவற்றை அறியலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் நான்காம் இடத்தை சுக பாவம் என்கிறோம். சுகம், அன்னை, நிலம், குளம், கால்நடைகள், கார் போன்ற வாகனங்கள் மனதில் எழும் எண்ணங்கள், சுக போகம், விபத்து போன்றவற்றை அறியலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் ஐந்தாம் இடத்தை புத்திர பாவம் என்கிறோம். பூர்வீக சிறப்பு, பூர்வீக நிலபுலம், வீடு, சொத்து, பூர்வ புண்ணியம் அல்லது பாவம், கடவுள் வணக்கம், மகன் அல்லது மகள், மன சுத்தம் ஆகியவற்றை அறியலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் ஆறாம் இடத்தை சத்ரு பாவம் என்கிறோம். மறைமுக எதிரி, கடன், தொல்லைகள், நோய், சிறைபடல், அவமானப்படல், வசக்குகள், சண்டைகள், உத்தியோகம், அரசியல் போன்றவற்றை அறியலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் ஏழாம் இடத்தை களத்திர பாவம் என்கிறோம். மனைவி, வியாபாரம், திருமணம், நண்பர், வியாபாரத்தில் பங்குதாரர், பிரயாணம், இல்லறம், மனைவியின் குணம், நேரடியான  எதிரிகள் ஆகியவற்றை காணலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் எட்டாம் இடத்தை ஆயுள் பாவம் என்கிறோம். ஆயுள், தொல்லைகள், துயரங்கள், விபத்துக்கள், சாபங்கள், ஏழ்மை, மனைவியின் பிறந்த வீட்டு நிலைமை ஆகியவற்றை காணலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் ஒன்பதாம் இடத்தை பாக்கிய பாவம் எனலாம். பொக்கிஷம், பாக்கியம், செல்வம், தந்தை, பக்தி, தந்தை வழி சொத்து, நற்குணங்கள் அல்லது பொல்லாத குணம், மச்சான், கொழுந்தியாள் போன்றவற்றை அறியலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் பத்தாம் இடத்தினை ஜீவன பாவம் என்கிறோம். மாமியார், செய்தொழில், உத்தியோகம், வியாபாரம், நல்ல அல்லது தீய வினைகள், பிழைக்கும் வழி, முயற்சி போன்றவற்றை இப்பாவம் மூலம் காணலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் பதினோறாம் இடத்தை இலாப பாவம் என்கிறோம். இதன் மூலம் சம்பாதனை, இலாபம், மூத்த சகோதரர் அல்லது மூத்த சகோதரி, மூத்தோரின் நல்லுறவு, வருமானத்தின் தன்மை, சொத்து சேர்க்கை போன்றவற்றை அறியலாம்.
லக்கினத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் பன்னிரண்டாம் இடத்தினை நஷ்ட பாவம் என்போம். இதன் மூலம் ஒருவருக்கு ஏற்படும் செலவு, பொருள் அல்லது சொத்து இழப்பு, பக்தி, ஞானம், மோட்சம், மறு பிறவி, இடம் பெயர்தல் போன்றவற்றை காணலாம்.
லக்கினத்தை ல என்று ஜாதகத்தில் குறித்து இருப்பர். இதனை விதி லக்கினம் என்றும் சொல்வர்.
ஒரு ஜாதகத்தில் சந்திரன் உள்ள இடத்தை ச என்று குறித்திருப்பர். இதனை மதி லக்கினம் என்பர். இவ்விடத்தை வைத்து ஒருவரது உடல் நிலை, மன ஓட்டம், சகிப்புத் தன்மை ஆகியவற்றை காணலாம்.
இந்த விதி லக்கினமும் மதி லக்கினம் என்கிற இராஸியும் எல்லா ஜாதகரின் பொது பலன்களையும் திஸா புத்தி பலன்களையும் காண உபயோகமாகும்.
ஒருவருக்கு லக்கினமும் வலுத்த சந்திரனும் ஒரே இராசியில் இருந்தாள் அவன் உலகமே புகழும் வாய்ப்பினை பெருவராம். அனுமனைப் போல் அல்லது இராமனைப் போல் அவர்கள் போற்றப்படுவராம்.
விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். அது ஞானிகளுக்கே கஷ்டமாம். ஆனாலும் இவ்வாக்கியம் முழுக்க முழுக்க ஜோதிடத்துக்கே உரித்தானதாகும்.  கிரகங்கள் லக்கினப்படி கெட்டு இருந்தாலும், சந்திரனை பொறுத்து வலுத்து இருக்க அந்த ஜாதகன் வாழ்வில் உயர்வான் என்பதை தான் விதிப்படி கெட்டு போனாலும்  மதியாகிய சந்திரனின்படி வலுத்து இருக்க அவன் தனது வாழ்வில் உயர்வான் என்றனர்.
ஆக இந்த பகுதியில் லக்கினம் என்பது பற்றியும், இராசி என்பது பற்றியும், பாவம் என்றால் என்னவென்பதையும், இராஸி என்றால் சந்திரன் இருக்கும் வீடு என்பதையும் கண்டுள்ளோம்.
சூரியன் உள்ள இடத்தை சூ என குறிப்பர். அரசர், மந்திரி போன்ற VIP களுக்கு சூரியா லக்கினத்தின்படியும் பொது பலனையும், திஸா புத்தி பலனையும் காண்பது ஜோதிடர்களின் கடமை ஆகும்.
ஒருவருக்கு லக்கினமும், அச்தமனமில்லாத வலுவான சந்திரனும், சூரியனும் ஒரே பாவத்தில் இருக்க, அவர் உலகுக்கே தெரிந்த பெரும் புள்ளியாய் புகழோடு வாழ்வார்.
இனி அடுத்த பகுதியில் சந்திப்போம்!
அன்பன்
அ.வீ.மாரிமுத்து
29 - 07 - 2016

No comments:

Post a Comment