Friday, July 29, 2016

சூரியனும் மாதமும்


நவக் கிரகங்களில் சூரியன் பிரதான அங்கம் வகிக்கிறார். மற்ற எட்டு கிரகங்களும் சூரியனை வைத்தே சுழன்று வருகின்றனர். ஆகவே சூரியன் முதல் கேது வரை உள்ள நவக் கிரகங்களை சூரியக் குடும்பம் என்கின்றோம்.
இந்த சூரியன் மேஷத்தில் ஒரு மாத காலம் இருக்கின்றார். அக்காலத்தை சித்திரை மாதம் என்கின்றோம். இவ்வாறே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இராசியில் சூரியன் தங்குகின்றார். ஆனால் அந்த இராசியில் ஒரே இடத்தில் இருப்பதில்லை.
ஒரு புள்ளிக்கு 360 பாகை உண்டு என்று சொல்வர். அதுபோல இவ்வுலகில் நாம் இருக்கும் அவ்விடத்துக்கு 360 பாகை உண்டல்லவா? அப்படியானால் நாம் உள்ள இடத்தின் மேலே உள்ள வான வீதியின் சுற்று வட்ட பாதையில் அமைந்துள்ள மேஷம் முதல் மீனம் வரையில் உள்ள 12 இராசிகளுக்கும் ஒட்டு மொத்தமாக 360 பாகைகளும், ஒவ்வொரு இராசிக்கும் தலா  30 பாகைகளும் உண்டு என்பது உண்மையல்லவா!
இப்போது சூரியன் மேஷத்தில் பிரவேசிக்கும் போது, அவர் மேஷத்தின் துவக்கத்தில் வந்து ஒரு நாள் வரை 1 பாகைக்குள் இருந்து நகர்ந்து வருகின்றார். அடுத்த நாள் அவர் `1 பாகையிலிருந்து நகர்ந்து 2 பாகை நோக்கி நகர்கிறார்.
சித்திரை மாத கடைசியில் மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு நகர்ந்து விடுகின்றார். இவ்வாறு சூரியனின் நகர்வு ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பாகையாக இருக்கும். கிட்டத்தட்ட மாதம் ஒன்றுக்கு ஒரே பாவத்தில் அவர் இருப்பார். சூரியனின் இந்த நகர்வு எப்படி எப்போது நடக்கிறது என்பதை பஞ்சாங்கத்தில் போட்டிருப்பர்.
சூரியன் இருக்கும் இடமே அன்றைய சூரிய உதய காலத்தில் கிழக்கு திசை என்று ஜோதிட வல்லுனர்கள் சொல்லுகின்றனர். அன்றைய மதியமோ சூரியன் இருக்கும் இடத்தின் நான்காம் இடம் கிழக்கு திசை ஆகின்றது.
அன்றைய மாலை ஆறு மணிக்கு, சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் ஏழாம் இடமே கிழக்கு திசை ஆகின்றது. அன்று நள்ளிரவில் அந்த கிழக்கு திசை அன்றைய சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து எண்ணப்பட்டு வரும் பத்தாமிடமாக அமையும்.
ஆக கிழக்கு திசை என்பதுவும் நகர்ந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதை அறியுங்கள்.
இந்த கிழக்கு திசையை தான் வல்லுனர்கள் லக்கினம் என்கின்றனர். அதாவது குழந்தை பிறந்த போது அமையும் கிழக்கு திசையே அக் குழந்தையின் லக்கினமாக அமைகின்றது.
இந்த லக்கினத்தை எவ்வாறு ஜோதிடர்கள் கணிக்கின்றார்கள் என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.
அன்பன்
அ . வீ . மாரிமுத்து
26 - 07 - 2016

No comments:

Post a Comment