எமக்கு தெரிந்தது உமக்கும்
நான் ஆங்கிலத்தில் அப்போது மட்டும் அல்ல, இப்போதும் சற்று சுமார் தான்! என்றாலும் எழுத படிக்க என்னால் சுலபமாக இயலும். ஆனால் தமிழில் பேசி மற்றவரை மயக்கும் வித்தை அறிந்த எனக்கு, இன்னமும் ஆங்கிலத்தில் அக்கலையை என்னுள் வளர்த்துக் கொள்ள இயலவில்லை.
நான் இப்பதிவில் தமிழில் தொடங்கி இருப்பதற்கு கூட அதுவே காரணம் என்று நினைக்கின்றேன்.
நான் Day என்ற பதத்துக்கு எதிர் சொல் தோன்றாமல் விழித்து இருந்தபோது அருகில் என்னிடம் வந்த ஆசிரியர் – புரியவில்லை என்றால் அடுத்த கேள்விக்கு போ என்றார். நானும் அவ்வாறே எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுதி விட்டு Day என்ற பதத்துக்கு விடை எழுதாமல் விடைத்தாளை கொடுத்தேன்.
எனக்கு அன்று பூராவும் சரியாக உறக்கமே இல்லை. மறுநாள் ஆசிரியரிடம் சென்றேன்.
day என்றால் நாள் தானே அதாவது நாள் பூராவையும் – அதாவது இரவும் பகலும் சேர்ந்தது தானே – அதற்கு எவ்வாறு எதிர்பதம் இருக்க முடியும் என்று கேட்டேன்.
ஆசிரியர் சொன்னார். அச்சொல்லுக்கு நாள் என்றும் பகல் என்றும் இரு பொருள் உண்டு என்றார். எனக்கு அப்போது எனது தவறு புரிந்தது.
day என்பதற்கு எதிர்பதம் night என்பது தான் சரியான பதில் என்று.
ஆனாலும் எனக்கு இன்னமும் சந்தேகம் போகவில்லை. ஆசிரியரிடம் கேட்டேன் – ஐயா! அச்சொல்லுக்கு நாளென்றும் பகல் என்றும் பொருள் உண்டு என்றால் இரவும் சேர்ந்துள்ள நாளில் பகலை மட்டும் day என்று குறிப்பது சரியா என்றேன்.
ஆசிரியர் சிரித்தார். பொதுவாக மனித இனங்களும், விலங்கு இனங்களும், பறவை இனங்களும் தாவர இனங்களும் தமது பணிகளை செய்யும் காலம் பகலே ஆவதால் – இரவில் அனைத்தும் சுகித்தும், ஓய்ந்தும் உறங்கியும் கழிப்பதால் – ஆங்கிலத்தில் நாளை குறிப்பதற்கும் பகலை குறிப்பதற்கும் ஒரே சொல்லை வைத்திருக்கலாம் என்றார்.
நான் வியந்து போனேன். எனக்கு அன்று கிடைத்த அந்த ஆசிரியர் போல் இன்றுள்ள மாணவர்களுக்கும் கிடைத்து விட்டால் எப்படி இருக்கும் என்பதை இப்போதும் என்னால் நினைக்கும் போது உள்ளம் இனிக்கின்றது.
day என்ற எழுத்தை எங்கு பார்த்தாலும் எனக்கு அந்த பதினோறு வயது நிகழ்வு வராமல் போகாது.
ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் அதிலேயே தேங்கி நில்லாமல், தெரிந்த கேள்விக்கு பதில் எழுது என்று சொன்ன அந்த ஆசிரியரின் வார்த்தைகள் இன்னும் என் செவியில் இருப்பதால், வாழ்க்கையில் இயலாத நிகழ்வுகள் வருகையில் அதிலேயே பொழுதை வீணடிக்காமல், மற்ற நிகழ்வுகளில் அல்லது செயல்களில் இன்றும் நான் ஈடுபடுவதற்கு காரணம் அந்த ஆசிரியரின் அன்றைய சொற்கள் தான்.
பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலை பின்னொரு நாளில் சொல்லி கொடுத்த அந்த ஆசிரியரின் பாங்கும் – பின்னாட்களில் என் கீழ் வேலை பார்த்தவர்களுக்கு வந்த அத்தனை சந்தேகங்களையும் விளக்கி அவர்களை நல்ல முறையில் பணி செய்ய வைத்த பெருமை எனக்கு உண்டாயினும் – அதன் முழு உரிமையும் அந்த ஆசிரியருக்கே சாரும்.
No comments:
Post a Comment