Friday, July 29, 2016

ஒழுகைமங்கல மாரியம்மன்
எங்கள் ஊருக்கு பக்கத்தில் தென் மேற்கு மூலையில் அமைந்துள்ள ஒழுகை மங்கலம் என்னும் ஊரின் நாயகியாய் - எங்களை போன்ற பல லட்சம் மக்களுக்கு அன்னையாய் உள்ளவள் இந்த மாரியம்மன். இவளது உன்னத லீலைகளை சொல்லி மாளாது.
அதில் ஒன்று தான் இந்த உண்மை சம்பவம்.
சுப்பையா என்பவர் ( பெயரை மாற்றி உள்ளேன்) வெகு சாதாரண ஏழை. அவர் நான் படித்த உயர் நிலை பள்ளியில் ஒரு உதவியாளர். சம்பளமோ வெகு சொற்பம். அவரது மனைவி ஒரு பெண் பிள்ளையை பெற்றெடுத்து சிறிது காலத்திலேயே கண்ணை மூடி விட்டார். அவர் உயிரோடு இருந்த போது, இருபது கல் தொலைவில் உள்ள மாயூரத்தில் வாழ்ந்து வந்த அந்த அம்மையாரின் தம்பி தன மகனுக்கு சுப்பையாவின் மகளை திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதி கொடுத்து இருந்தார்.
தன் மனைவி தன்னை விட்டு பிரிந்தாலும், தன் சுகத்தை மறந்து, தன மகளுக்காக மறு மணம்  புரியாது வாழ்ந்து வந்தார் சுப்பையா. காலம் சுழன்று சுப்பையாவின் மச்சானை உயர் நிலைக்கு உந்தி தள்ளியது. அவர் பெரிய தனவந்தராகி விட்டார்.
ஆனால் சுப்பையா அதே நிலையில் தான் இருந்தார். ஆனால் ஒழுகைமங்கல  மாரியம்மன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையோடு இருந்து வந்தார். அவருக்கு இந்த உலகில தெரிந்த இடங்களே மாரியம்மன்இருக்கும்  ஒழுகை மங்கலம், அவர் வேலை செய்து வந்த உயர் நிலைப்பள்ளி, அவர் வாழ்ந்து வந்த வீடு, அவரது மச்சானின் ஊரான மாயூரம் ஆகிய நான்கு ஊர் மட்டுமே.
பெண்ணுக்கு திருமண வயது வந்ததும், மாயூரத்துக்கு சென்று, தன் மச்சானிடம் தன் மகளை அவரது மகனுக்கு திருமணம் செய்து கொள்ள சொன்னார். ஆனால் அவரோ துரோணரை பரிகசித்த துருபதன் மாதிரி ஏளனம் செய்து அனுப்பி விட்டார். உள்ளம் சோர்ந்து ஒழுகை மங்கல கோயிலில் அமர்ந்து சுப்பையா  புலம்பிய காட்சியை அங்கு கோயிலுக்கு சென்ற நான் பார்த்ததை இன்று எண்ணினாலும் என் கண்கள் பணிக்கும்.
மாதங்கள் சில உருள, மாயூரத்து மச்சான் தன மகனுக்கு பெரிய இடத்தில் பெண்ணை பார்த்து, பத்திரிகை அடித்து, சுப்பையாவின் வீட்டுக்கு வந்து பத்திரிகை கொடுத்தார். "பார்த்தாயா! என் பிள்ளைக்கு எப்படிப்பட்ட பணக்கார பெண்ணை மனைவி ஆக்கப் போகிறேன்" என்கிற கர்வம் சுப்பையாவின் மச்சானுக்கு இருந்ததை சுப்பையா உணர்ந்தாலும் அந்த பத்திரிக்கையை வாங்கி கொண்டு, மறு வார்த்தை பேசாமல் மாரியம்மன் கோயிலுக்கு வந்து அழுதார் சுப்பையா.
திருமணம நடக்க இருந்த இடமோ அதே ஒழுகை மங்கல மாரியம்மன் ஆலயமே. திருமணத்துக்கும் முதல் நாள் மாப்பிள்ளை விட்டார் தடபுடலாக கோயிலுக்கு அருகில் உள்ள கல்யாண மண்டபத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் பெண் வீட்டாரோ அதிகாலை மூன்று மணி வரை கோயிலுக்கு வந்து சேரவில்லை. மூன்றரை மணி வாக்கில் பெண் வீட்டில் இருந்து ஒருவர் வந்து, "அந்த பெண் யாரோ ஒருவனுடன் ஓடி விட்டது" என்று சொன்னார்.
இப்போது சுப்பையாவின் மச்சானுக்கு அழும் நேரம்!
சுப்பையாவின் மச்சான் இப்போது என்ன செய்வது என்று அதிகாலை நான்கு மணி வரையும் யோசித்து பார்த்தார். தன் மனைவியுடன் தன் காரில் ஏறி சுப்பையாவின் வீட்டுக்கு வந்து கதவை தட்டினார்.
கதவை திறந்த சுப்பையாவை தாண்டி உள்ளே சென்ற அவரது மச்சானும் அவரது மனைவியும், உறங்கி கொண்டிருந்த சுப்பையாவின் பெண்ணை தட்டி எழுப்பினர். தங்கள் கொண்டு வந்திருந்த பெண் அழைப்பு புடைவைய கொடுத்து கட்டி கொண்டு வரும்படி சொன்னார்கள்.
இப்போதும் சுப்பையா பேசவில்லை. ஆனால் மாரியம்மனை மனதால் துதி செய்ய ஆரம்பித்து விட்டார்.
காலையில் ஒன்பது மணி வாக்கில் சுப்பையாவின் மகளின் திருமணம் சுப்பையாவின் மனம் குளிர - ஒரு காசு செலவில்லாமல் - நடந்தே விட்டது.
இவ்விஷயம் இன்னும் என் மனதில் ஒரு அதிசயமாகவே உள்ளது. இன்னாருக்கு இன்னார் என்பது எவ்வளவு பெரிய உண்மை. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு  உண்மையோ - அது போல அவனின்றி அணுவும் அசையாது என்பதையும் ஒழுகை மங்கல மாரியம்மன் அந்த சுப்பையாவுக்கும் மட்டும் அல்ல, எல்லோருக்கும் புரிய வைத்துள்ளாள்.
என் பெயரை கூட அந்த மாரியம்மனின் பெயரில் தான் என் பெற்றோர்கள் வைத்துள்ளனர் என்பது இன்னும் ஒரு உபரி தகவல்.
அசைக்க முடியாத நம்பிக்கையும் மன உறுதியும் மட்டுமே சுப்பையா போன்றவர்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.
அன்பன் 
அ.வீ.மாரிமுத்து    
28 - 07 - 2016

1 comment: