Friday, July 29, 2016

யார் வள்ளல்
நான் மகாபாரதம் படித்துள்ளேன். ஆனால் இந்த மாதிரி கதைகளை நான் மூலத்தில் கண்டதில்லை. ஏதோ ஒரு ஊரில் ஒரு கோயிலில் ஒருவர் இக்கதையை சொன்னதாக ஞாபகம்.
அர்ஜுனன் கண்ணனை பார்த்து கேட்டான். "கண்ணா! பாண்டவர்களில் யார் சிறந்த பக்தன்" என்று!
எல்லோருமே தான் என்று கண்ணன் சொன்னான். இப்பதிலில் திருப்தியுறாத அர்ஜுனன் இன்னும் கேட்டான். பாண்டவர்களுள் எவர் அதி சிறந்த பக்திமான் என்றான்.
கண்ணனுக்கு புரிந்து விட்டது. இந்த அர்ஜுனன் எப்போதும் தன கூட இருப்பதால் அர்ஜுனனே சிறந்த பக்தன் என்று கண்ணன் தன் வாய்பட  சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் என்று!
ஆனால் உண்மையை சொல்லியாக வேண்டும் என்ற உந்தம் காரணமாக அர்ஜுனனிடம், பாண்டவர்களுள் சிறந்த பக்தன் என்று பார்த்தால் தருமன் தானென்றான். ஆனாலும் அவன் எப்போதும் தர்ம வழி நடப்பதால் அவனை, பக்தி மார்க்கத்தில் சேர்க்க இயலாது என்ற கண்ணன் - நகுலனும் சகாதேவனும் ஜோதிடத் தொழில் மற்றும் பிராணிகள் வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவதால் - அவர்களையும் முழு நேர பக்தி மார்க்கத்தில் சேர்க்க இயலாது என்றான். அவ்விருவரும் கர்ம மார்க்கத்தில் சிறப்பு பெற்றவர்கள் என்றான்.
மீதியுள்ள வீமனும், அர்ஜுனனும் மட்டுமே இந்த பக்தி மார்க்கத்தினுள் வருகின்றார்கள். அவர்களுள் வீமனே சிறந்த பக்தன் என்றான் கண்ணன். அர்ஜுனனுக்கு கோபமே வந்து விட்டது.
இதை நீ நிரூபிக்க வேண்டும் கண்ணா என்றான் அர்ஜுனன். அவ்வாறே என்று ஒத்து கொண்ட கண்ணன், மறு நாள் காலையில் தன்னை வந்து காணும்படி பணித்தான்.
அன்றிரவு அர்ஜுனன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து இருந்ததால்  சரியாக உறங்கினானில்லை.
அதிகாலை நான்கு மணிக்கு வீமன் எழுந்து கொல்லைக்கு சென்று சிறு நீர் கழித்து விட்டு வரும் வழியில், நிறைய பூக்கள் நிறைய செடிகளில் பூத்து இருப்பதை பார்த்து உள்ளம் குதூகலிக்க, அம்மலர்கள் யாவும் கண்ணனின் திருமேனிக்கு செல்லட்டும் என்று உளமார வேண்டிக் கொண்டு, மீண்டும் உள் சென்று படுத்து தூங்கியே போனான்.
அன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்த அர்ஜுனன், காலை கடன்களை முடித்து பொழுது புலர்வதற்குள் பூங்காவில் உள்ள மலர்கள் அனைத்தையும் பறித்து, பெரிய மாலையாக கட்டி, காலை ஆறு மணிக்கெல்லாம் கண்ணனை காண சென்றான்.
என்ன ஆச்சரியம்! தன் கையில் வைத்துள்ள அதே மலர் மாலை போலவே,  கண்ணனின் மார்பில் இன்னொரு மாலை கிடக்க அர்ஜுனன் கண்டான்.
கிருஷ்ணன் சிரித்தான். "அர்ஜுனா! உனக்கு முன்பே உனது அண்ணன் வீமன் மனதால் இம்மாலையை எனக்கு அளித்து விட்டான்" என்றார்.
அப்போது தான் அர்ஜுனனுக்கு புரிந்தது. அவரவரது கடமையே அவரவருக்கு முக்கியமாகும் என்று! எவனொருவன் தன் சொந்த முயற்சியிலும், உழைப்பிலும் நம்பிக்கை வைத்து, தன கடமையை ஒழுங்காக செய்கின்றானோ, அவனே கடவுளின் அருகில் நிற்கும் அருகதை உள்ளவன் என்று! எப்போதும் கண்ணை மூடி தவம் செய்பவருக்கு, இதுவரை ஆண்டவன் பல காலம் கழித்தே தரிசனம் தந்து இருகிகின்றான்.
ஆனால் வீமனை போன்ற முயற்சியும், நம்பிக்கையும் கொண்டவர்களுக்கோ  அவர்களது சிறு பக்தி கூட, கடவுளை அவர்கள் பக்கம் கொண்டு செலுத்திடும் வலிமை உள்ளது என்பதை கண்ணனின் மந்தகாச சிரிப்பு அர்ஜுனனுக்கு புரிந்தது.
அன்புடன்
அ.வீ.மாரிமுத்து
29- 07- 2016

2 comments: